தந்தை பெரியார் தலைமையால் தமிழர்க்கு வீழ்ச்சியா?

பெரியார் தன்னைச் சுட்டும்போதெல்லாம் கன்னடர் என்றே சுட்டினார். அவருக்கு எப்படித் தமிழ்மீதும் தமிழர் மீதும் பற்று வரும்?
அவர் எப்போதும் தமிழர்களையும், தமிழையும் தாழ்வாகவே கூறினார். அப்படிப்பட்டவர் தலைமையில் நின்றதாலே தமிழர்கள் வீழ்ந்தனர்; உரிமைகள் இழந்தனர்...
இவை குணா கூறும் அடுத்த குற்றச்சாட்டுகள்.
இவற்றிற்கான எனது பதிலைக் கூறுவதற்கு முன், மிகச் சிறந்த ஆய்வாளர் எஸ்.வி. இராசதுரை அவர்கள் என்ன கூறியுள்ளார் என்பதைக் காண்போம்.
தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாடு என்றாலும் சரி, திராவிட நாடு என்று பேசினாலும் சரி, நீதிக் கட்சியிலிருந்து தெலுங்கு, கன்னட, மலையாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும் சரி, அவரது முதன்மைப் பற்றும், விசுவாசமும் அவர் பிறந்து வாழ்ந்த, தன் கொடியை விரித்த தமிழ் மண்ணின்மீதும், அதன் மக்கள்மீதும்தான். தமிழ்மொழி பற்றிய அவரது கடுமையான விமர்சனங்களுங்கூட தமிழர்களை மேம்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தின் காரணம்தான். அவர் கன்னடர்களின், மலையாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தும் வந்திருக்கிறார். குறிப்பாக, உயர்ஜாதி கன்னடர்கள், மலையாளி களின் ஆதிக்கத்தை. எனினும் அது இனவெறியின், மொழி வெறியின்பாற்பட்டதல்ல. மாறாக, அது எந்த இனமும், எந்த மொழியும் மற்ற இனத்தின்மீதும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்ற கொள்கையின் காரணமாகத்தான். மொழி வெறியும், இனவெறியும் அவருக்கு அந்நியமானவை. - (ஆதாரம் : பெரியார் சுயமரியாதை சமதர்மம் எஸ்.வி.இராசதுரை, .கீதா, பக்கம் 730)
எஸ்.வி. இராசதுரை அவர்களுக்குத் தெரிந்த இந்த உண்மை, ஆரியத்தைத் தாங்கிப் பிடிக்க, பெரியாரைக் கொச்சைப்படுத்தி, இன்றைய தலைமுறை பெரியாரை வெறுக்கும்படியான சதி வேலையில் ஈடுபட்டுள்ள குணாக்களுக்குத் தெரியாமல் போன காரணம் என்ன? தெரியாதது அல்ல. இவற்றை மறைத்து வேண்டுமென்றே பெரியாரை இழிவுபடுத்தும் இரண்டக வேலை என்பதை நன்றியுள்ள தமிழ்மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்; குறிப்பாக இளைஞர்கள். கன்னடியர் என்பதற்காக பெரியார் கன்னடியர்களுக்கு ஆதரவாகச் செய்தது என்ன? குணாக்கள் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? தமிழராகப் பிறக்கவில்லை என்பதற்காகத் தமிழர்களுக்கு அவர் செய்யத் தவறியது என்ன? அவரைவிட அதிகம் தமிழர்க்காகச் செய்த தமிழர் யார்? அவர்கள் அந்தரங்க சுத்தியோடு பதில் சொல்ல வேண்டும்!
ஒரு சிற்றரசர் போன்ற தகுதியில் வாழ்ந்த, குடும்பத்தில் பிறந்த அவர், தன் மனைவி, தங்கை எல்லோரையும் மக்கள் நலனுக்காகக் களத்தில் இறக்கினார்.
அடிக்கடி பழுதாகும் ஒரு பழைய காரில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம், மூத்திரப்பை குழாயும், வாளியுமாய் சுமந்து சுற்றி மணிக்கணக்கில் தமிழ்மக்களுக்காக நாள்தோறும் பேசினார். பைசா பைசாவாகச் சேர்த்த அத்தனை சொத்தையும் தமிழர்களுக்காகவே கொடுத்தார். தனக்காக அவர் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு நொடிப்பொழுதும் தமிழர்களுக்காகச் சிந்தித்தார்; தமிழர்களுக்காகப் பேசினார்; எழுதினார். இறக்கும் தருவாயில்கூட இடிமுழக்கம் செய்தார். இறுதிப் போராட்டத்துக்கு அழைத்தார். அவர் உழைப்பால் பயன் பெற்றது  தமிழ்மக்கள் மட்டுமே. அதே நேரத்தில் கன்னடியரான அவர், கன்னடியர்களுக்காகச் செய்தது என்ன? ஏதாவது உண்டா? இல்லையே!
உண்மை இப்படியிருக்க, உண்மை கலவா மாபெரும் பொய்யை, மாபெரும் தலைவர்மீது குற்றச்சாட்டாக, மனச்சான்றே இல்லாமல் எப்படி இவர்களால் கூற முடிகிறது? சராசரி மனிதன்கூட உண்மைக்குப் புறம்பாய் இப்படி எழுதமாட்டானே! முதலில் இவர்கள் மனிதர்களா என்பதை ஆராயட்டும், அதன்பின் பெரியாரைப் பற்றி ஆராயலாம்!
கன்னடரான அவருக்குத் தமிழ் உணர்வும், தமிழன் என்ற உணர்வும் இருந்ததில்லை என்று கூறும் இவர்களுக்கு உறைக்கும்படி, சூரியன் உதிப்பது கிழக்கிலா? என்ற கேள்வியில் உள்ள அபத்தமே பெரியாருக்குத் தமிழுணர்வு, தமிழன் உணர்வு இருந்ததா? என்ற கேள்வியிலும் உள்ளது என்று மண்டையில் அடித்தார் போன்று பதில் கூறியுள்ளார் திரு. எஸ்.வி. இராசதுரை அவர்கள்.
(ஆதாரம் மேற்படி நூல், பக்கம் 553, மூன்றாவது பாரா.)
குடிஅரசு இதழ் 02.05.1925இல் தொடங்கப்பட்டது முதல், இது சிறந்த தமிழ்ப் பத்திரிகை, தமிழ்மக்கள் எல்லா வகையிலும் உயர உழைக்கும் பத்திரிகை என்று மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தப்பட்டது.
16.8.1925, 17.5.1925 தேசிய குடிஅரசு இதழ்களில் டி.என்.சிவஞானம்பிள்ளை என்ற தமிழறிஞர், தமிழ்மொழி வளர்ச்சி பற்றி ஆற்றிய சொற்பொழிபொழிவு வெளியிடப் பட்டது.
தமிழ்மொழியின் உயர்வு தன்னேரில்லாத தமிழ் என்ற கட்டுரையை, தமிழ்ப் பொழில் என்ற ஏட்டில் வெளியானதை எடுத்து குடிஅரசு இதழில் 28.6.1925இல் பெரியார் வெளியிட்டார்.
சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதிய, தமிழுக்குத் துரோகமும் இந்திய மொழியின் இரகசியமும் என்ற கட்டுரை பெரியாரின் தமிழ்ப் பற்றுக்குச் சான்றாக விளங்குகிறது.     (குடிஅரசு 7.3.1926)
தமிழ்நாட்டின் நாகரிகம், பழக்க வழக்கங்கள், தமிழ்மக்களின் வீரம் போன்றவை குறித்து பெரியார் பேச்சு 28.8.1927இல் குடிஅரசு இதழில் வெளியிடப்பட்டது.
திருவள்ளுவர் பற்றி சிதம்பரனார் எழுதிய தொடர் கட்டுரை 11.11.1927 ஆம் தேதி முதல் குடிஅரசு இதழில் வெளியிடப்பட்டது.
பண்டைக்கால தமிழர் நாகரிகம், பண்பாடு, இலக்கியம், கலைகள் குறித்த பல கட்டுரைகள் குடிஅரசு இதழில் அவ்வப்போது தொடர்ந்து வெளியிடப்பட்டன. அவருடைய சிந்தனைகளுக்கு ஏற்பில்லாதவற்றைக்கூட தமிழ், தமிழர் சிறப்பினைக் காட்ட வெளியிட்ட பெருந்தன்மைக்குரியவர் பெரியார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியருக்கு 350 முதல் 500 வரை சம்பளம் தரப்பட்ட நிலையில், தமிழ் ஆசிரியருக்கு அதில் பாதித் தொகைகூட அளிக்கப்படாத நிலையைக் கண்டித்து, தமிழாசிரியருக்கும், தமிழுக்கும் உரிய மரியாதை கிடைக்க குரல் கொடுத்தார்.
பெரியார் 1956 இல் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமையும்வரை, திராவிட நாடு கோரிக்கையை வைத்துக் கொண்டிருந்தார். அதனடிப்படையில் ஏராளமான போராட்டங்களை நடத்தினார்.
வடவரின் பொருளாதாரச் சுரண்டலும் பார்ப்பனியச் சாதியமும் ஒழியப் பெற்ற ஒரு சமதர்மச் சமுதாயத்தை அமைப்பதற்குத் தேவையான நிலப்பகுதியினைக் குறிக்கும் ஒரு குறியீட்டுச் சொல்லாகவே திராவிடத்தை அவர் பயன்படுத்தினார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சக்கட்டம் அடைந்து, மொழி அடிப்படையிலான தமிழ்த் தேசியம் ஏற்பட்டதற்கு தூண்டுதலாகவும், அடிப்படையாகவும், எழுச்சி கொடுத்ததும் விழிப்பு கொடுத்ததும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தவரும் அவரது பிரச்சாரங்களும் போராட்டங்களுமே என்பதை வரலாறு தெரிந்த, நடுநிலையான நன்றியுள்ள எவரும் அறிவர், ஏற்பர்.
எனவே, இன்று பேசப்படும் தமிழ் உணர்வும், தமிழ்த் தேசிய உணர்வும் திராவிடத்தின் கொடையேயன்றி தமிழ் உணர்விற்கும், தமிழ்த் தேசியத்திற்குத் திராவிடம் தடையல்ல என்பதை எவரும் மறுக்கவும் இயலாது, மறைக்கவும் முடியாது. அப்படி மறுப்போர் ஒன்று ஆரிய கைக்கூலியாக இருப்பர் அல்லது மோசடிப் பேர்வழியாக இருப்பர் என்பதை உறுதியாய்ச் சொல்லலாம்.
தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும், ஆரியச் சூழ்ச்சியால் கெட்டும், சிதைந்தும், பிரிந்தும், உணர்விழந்தும் இருந்த நிலையில் ஒற்றுமைபடுத்தவும், உறுதி ஏற்றவும், எழுச்சியும், விழிப்பும் கொடுக்கவுமே பெரியார் திராவிட நாடு, திராவிடக் கலாச்சாரம், திராவிட மக்கள் என்ற இனம் சார்ந்த அடையாளச் சொல்லைப் பயன்படுத்தினார். அதனால் அவர் தமிழை மறந்ததாகவோ, தமிழர்க்கு கேடு செய்ததாகவோ கொள்வதும் கூறுவதும் அறியாமையின் அடையாளம் அல்லது, அறிந்தும் உள்நோக்கத் துடன் கூறும் மோசடிச் செயலுமாகும்.
தமிழ், தமிழ் தேசியம் என்பவை மொழிப் போராட்டத்துக்குத்தான் பயன்படுமே தவிர, இனப் போருக்கும், கலாச்சார மீட்புக்கும் பயன்படாது என்ற யதார்த்த நிலை அறிந்தே பெரியார் தன் அணுகுமுறைகளை அமைத்தார்.
காலத்திற்கு ஏற்ப தன் அணுகுமுறைகளையும், போராட்டங்களையும், இலக்குகளையும் பெரியார் மாற்றிக் கொண்டே வந்ததை நுட்பமாக நோக்கினால், பெரியார் சுயநல மற்ற, உள்நோக்கமற்ற, தமிழர் போராளி, தமிழர் நலனுக்கான போராளி என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஆம், திராவிட நாடு கோரிக்கையைக் காலச்சூழலுக்கும், கட்டாயத்திற்கும் கையிலெடுத்த பெரியார், மொழிவாரி மாநிலம் அமையும் காலம் கனிந்ததும், திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு, தமிழ்நாடு தமிழர்க்கே என்று முழங்கத் தொடங்கினார். அவர்தாம் பெரியார்! இதை மறைத்து அவர் ஏதோ தமிழரை வீழ்த்த திராவிடத்தைக் கையிலெடுத்ததாக காரணம் கூறுவது காழ்ப்பின் வெளிப்பாடு ஆகும். கயமையின் அடையாளமாகும்!
அவர் முதலில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா இவற்றையும் தமிழ்நாட்டோடு சேர்த்துக் கொண்டு போராடியதினாலும் சரி, பின்னர் மற்றவற்றை கைவிட்டுவிட்டு, தமிழ்நாடு தமிழருக்கு என்று போராடியதும் சரி, தமிழ்நாட்டுக்காகப் போராடியபோது, எல்லைச் சிக்கல்கள் வந்தபோது எல்லைகளைப் பற்றி கவலைப் படாது, உரிமை, சுயமரியாதை, சமதர்மம் இவையே முக்கியம்; ஆரிய ஆதிக்கத்தினின்றும் வடவர் ஆதிக்கத்தினின்றும் விடுபடுவதே முக்கியம் என்று கூறியதானாலும் சரி எல்லாமே தமிழர் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட அப்பழுக்கற்ற, உள்நோக்கம், கபடம், வஞ்சனை, ஏமாற்று எதுவும் இல்லா முடிவுகளாகும்.
அதை அவரே தெளிவுபடுத்தியுள்ளார்.
நான் விஸ்தீரணத்திற்காக (இடப்பரப்புக்காக) போராடுகின்றவன் அல்ல. விடுதலைக்காகப் போராடுகிறவன் (தமிழர் விடுதலைக்காகப் போராடுகிறவன்) என்று திட்டவட்டமாகத் தெளிவாக, நறுக்குத் தைத்தாற் போன்று தெரிவித்தார்.
(விடுதலை 07.8.1953)
சுதந்திரம் (விடுதலை) என்பது பெரியாரைப் பொறுத்தவரை (பார்ப்பன) ஆரிய ஆதிக்கத்தினின்று விடுபட்ட நிலை என்பதேயாகும். அதன் அடிப்படையில்தான் தமிழ்த் தேசியம் என்பதை அவர் ஏற்க மறுத்தார். கண்ணகி, மணிமேகலை, மூவேந்தர், பக்தி இலக்கிய நயம் என்பனவற்றையெல்லாம் புறக்கணித்தார்.
இங்கு பெரியாரின் உயரிய நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் தமிழரை இழிவுபடுத்தினார், தமிழ் இலக்கியங்களை இழிவுபடுத்தினார். எனவே அவர் தமிழுக்கு எதிரி, தமிழ் இனத்திற்கு எதிரி. காரணம் அவர் கன்னடத்தார் என்பது அரை வேக்காட்டுத்தனமான உளறல்; அல்லது அயோக்கியத்தனமான கூச்சலாகவே இருக்க முடியும்.
சென்னை மாகாணம் என்று தமிழர் பகுதி மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்டபோது, தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் பெரியார். அவரா தமிழ்ப் பற்றும், தமிழர் பற்றும் இல்லாதவர்?
1926 லே இந்தி மொழியைப் பரப்ப முயற்சி மேற்கொள்ளப் பட்டபோது, அதை எதிர்த்து, தமிழுக்குத் துரோகமும் இந்தி மொழியின் இரகசியமும் என்று சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் கட்டுரை எழுதினார்.
இந்திக்குப் பெருந்தொகை செலவிடப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. 100க்கு 97 பேர் ஆரியப் பார்ப்பனர்களே அதைப் படிக்கின்றனர். எந்தத் தமிழரும் அதைப் படிக்கவில்லை. அப்படியிருக்க தமிழ்மொழி வளர்ச்சிக்கு, ஹிந்திக்கு செலுத்தும் அக்கறையில் 100இல் ஒரு பங்குகூடச் செலுத்தவில்லை, செலவிடவும் இல்லை என்று கடுமையாகச் சாடினார் பெரியார்.
தமிழ்மீது அக்கறையில்லாமலா 1926 ல் பெரியார் இப்படி எழுதினார், பேசினார். தமிழர்கள் சிந்திக்க வேண்டாமா?
ஒரு தமிழ் மகன் தன் மகளுக்கோ, மகனுக்கோ கல்யாணம் (திருமணம்) செய்ய வேண்டுமானால், தமிழ்ச் சொல் எங்கே? தமிழ் கருத்தினால் வாழ்க்கைத் துணை நலம் என்பான். ஆனால் ஆரிய கருத்தில் விவாகம், கன்னியாதானம் என்கிறான்.
(குடிஅரசு  10.07.1938) என்று வினா எழுப்பி தமிழ் உணர்வை ஊட்டினார் பெரியார்.
தமிழன் வீட்டுத் திருமணத்தில், துக்க நிகழ்வுகளில் சமஸ்கிருத மந்திரம் ஒலிப்பதை எதிர்த்த ஒரே ஒருவர் பெரியாரையன்றி வேறு யார்? தமிழ்ப் பற்றில்லாமலா பெரியார் இதற்காகக் காலமெல்லாம் போராடினார்? குடிஅரசு ஏட்டில் தமிழுக்காக எழுப்பப்பட்ட உணர்வு பொங்கும் முழக்கங்களை கீழே காணுங்கள்.
, தமிழனே! தமிழன்னை உன் கடமையைச் செய்ய அழைக்கிறாள். ஆரியக் கொடுமையிலிருந்து தன்னை விடுவிக்கும்படி ஓலமிட்டுக் கொண்டிருக்கிறாள். தாய் நன்றி கொன்ற மகனும், தாய்ப் பணிக்கடமை கொன்ற மகனும் மனிதனாவனா?
(குடிஅரசு  29.8.1937)
தமிழன்னை மானபங்கம். தமிழ்த்தாயின் துகிலை (சேலையை) ஆச்சாரியார் உரிகிறார். தமிழர்கள் ஆதரவால் துகில் (துணி) வளர்ந்து கொண்டே போகிறது. உண்மை தமிழர்களே என்ன செய்யப் போகிறீர்கள்?
(குடிஅரசு  19.12.1937)
நம் தமிழ்த்தாய் தமிழுணர்வுக் குறைவால் வருந்திக்கொண்டிருக்கும்போது, அயல்நாட்டினளான இந்தி என்னும் பெண்ணை அழைத்து வந்து கட்டாயமாக நுழைப்பதைத் தமிழ்த் தாயின் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.
(குடிஅரசு  30.11.1938)
மொழியை பெண்ணாக, தாயாக, சேலை உடுத்திக் கொண்டிருப்பதாக உருவகப்படுத்திப் பார்ப்பது பெரியாருக்கு உடன்பாடில்லாத செயல்கள் என்றாலும், தமிழ்மொழியின் பாதுகாப்புக்காக வேண்டி, தமிழரிடையே உணர்ச்சி ஊட்டுவதற்காக, இவற்றைக் குடிஅரசு ஏட்டில் வெளியிட்டார்.
தமிழ் மொழிக்காக அவர் பகுத்தறிவு பார்வையைக்கூட சற்று தள்ளி வைத்தார் என்றால் இது பெரியாரிடம் எதிர்பார்க்க முடியாத ஒன்று. எதற்கும் சமரசம் செய்து கொள்ளாத பெரியார் தமிழுக்காக இதைச் செய்தார் என்னும்போது, அவர் தமிழ்மீது கொண்ட பற்றுக்கு வேறு என்ன சான்று வேண்டும்.
அவர் தமிழைப் பழித்தது, திட்டியது, கடுமையாக விமர்சித்தது எல்லாம் தமிழை வெறுத்ததல்ல. தமிழ் நன்றாக வர வேண்டும் என்பதற்காக. பாசமுள்ள பிள்ளையைத் தாய் திட்டுவதில்லையா? உன்னைப் பெற்றதுக்கு ஒரு கல்லைப் பெற்றிருக்கலாம், நீ ஏன் மண்ணுக்குப் பாரமாய் இருக்கிறாய்?, செத்துத் தொலையேன்! என்கிறாள் என்றால் பிள்ளை நன்றாக வர வேண்டும் என்ற பாசத்தால், பற்றால், வெறுப்பால் அல்ல. இதைக்கூட புரிந்து கொள்ளும் தகுதியின்றி நூல் எழுத வருகிறார்களா? அல்லது நூலுக்காக நூல் எழுத வந்ததன் விளைவா? என்பதைத் தமிழர்கள் சிந்தித்து சீர்தூக்கி ஆட்களை அடையாளம் காண வேண்டும்!
தமிழில் காலத்திற்கேற்ற கருத்தேற்றம் இல்லை, ஆக்கங்கள் இல்லை, நடைமுறைக்கு வாழ்க்கைக்கு வேண்டிய, முன்னேற்றத்திற்கு, தொழில் வளர்ச்சிக்கு, அறிவியல் வளர்ச்சிக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு, வேலை வாய்ப்பிற்கு வேண்டியவை எழுதப்படவில்லை என்பதாலும், அது காலத்திற்கேற்ப பயன்படும் தகுதியுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான் தமிழை விமர்சித்தார்.
தன் நிலைப்பாட்டை தந்தை பெரியார் அவர்களே வெளிப் படையாக வெளியிட்டும் உள்ளார்.
தாய் பாஷை (மொழி) என்பதற்காகவோ, நாட்டுப் பாஷை என்பதற்காகவோ, எனக்குத் தமிழ்ப் பாஷையின்மீது எவ்வித பற்றும் இல்லை. அல்லது தமிழ் தனிப் பாஷை என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை என்பதற்காகவோ, அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ எனக்கு அதில் பற்றில்லை. குணத்தினாலும், குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.
எனது நாடு, எனது லட்சியத்திற்கு உதவாது என்று கருதினால், உதவும்படி (பயன்படும்படி) செய்ய முடியாது என்று கருதினால், உடனே விட்டுவிட்டுப் போய் விடுவேன். அதுபோலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்திற்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால், உடனே அதனை விட்டுவிட்டுப் பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்... அதேபோல் மற்றொரு பாஷை (இந்தி) நம் நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டம் அறிந்து, சகிக்க முடியாமல் எதிர்க்கிறேனே ஒழிய, புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
தமிழ் இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும் சுதந்திரத்தை அளிக்கக் கூடியதும், மானத்துடனும், பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்வை அளிக்கக் கூடியதும் என்பது என் அபிப்பிராயம்.
ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழில் இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம். எல்லாம் இல்லையென்றாலும், அநேக இந்திய பாஷைகளைவிட அதிகமான முன்னேற்றத்தைத் தமிழ் மக்களுக்கு அளிக்கக்கூடிய கலைகள், பழக்கவழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன்.
(குடிஅரசு  06.08.1939)
இப்போது சொல்லுங்கள், இந்திய மொழிகளிலே உயர்ந்தது தமிழ் என்று கூறும் பெரியாரா தமிழைக் கேவலப்படுத்தியவர்? தமிழில் இன்னும் வேண்டும், காட்டுமிராண்டி கால மொழியாகவே அதைக் காப்பாற்றி வருவதால் பயனில்லை என்ற பற்றில் தான் அவர் தமிழை விமர்சித்தார் என்பதை இப்போதாவது தமிழ் மக்கள், இளைஞர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்!
இந்த அளவிற்குத் தமிழ்மீது பற்று கொண்ட பெரியாரை சங்கராச்சாரியுடன் ஒப்பிட்டு தமிழின் விரோதியாக பெரியாரைச் சித்தரிக்கிறார் இந்தத் தில்லுமுல்லு பேர்வழி குணா.
தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டிய .வெ.ரா. பெரியாருக்கும், தமிழகத்தில் பார்ப்பனர்களுக்குத் தலைமை தந்துவந்த காஞ்சி காமகோடி மடத்தின் தலைவராக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கும் இடையில் ஒரு பெரிய ஒற்றுமையுண்டு.இருவருமே கன்னடர்கள். முன்னவர் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றாரெனின், பின்னவரோ அதை நீச பாசை என்றிட்டவர். இது குணாவின் ஒப்பீடு. இதைவிட அயோக்கியத்தனம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? எதை எதனோடு ஒப்பிடுவது? யாரை யாரோடு ஒப்பிடுவது?
நோய் தீர்க்க மருத்துவர் கத்தி எடுப்பதற்கும், கழுத்தறுக்க கொலைக்காரன் கத்தி எடுப்பதற்கு ஏதாவது சம்பந்தம் உண்டா? இரண்டையும் ஒப்பிடலாமா? அப்படி ஒப்பிடுபவன் மூளைக் கோளாறு உள்ளவனாக இருக்க வேண்டும் அல்லது மோசடிப் பேர்வழியாக இருக்க வேண்டும். ஆனால் இந்தக் குணா இரண்டாம் வகை என்பது உறுதி!
தந்தை பெரியார் தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழி என்று கூறியது பற்றி ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் லலிதா என்பவர் இணையத்தில் எழுதியுள்ள பகுதியை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாய் இருக்கும். தமிழர் தலைவரான பெரியாரை வந்தேறி (கன்னடக்காரர்) என்று குறிப்பிடுவோர், அவ்வாறு கூறக் காரணம் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழியென்று சொன்னார் என்பது தான். காஞ்சி சங்கராச்சாரி தமிழ் நீச மொழி என்பதையும் இதற்குத் துணையாக அழைத்துக் கொண்டு, இருவருமே தமிழர்கள் அல்ல வந்தேறிகள்தான். எனவேதான் தமிழைப் பழிக்கின்றனர் என்பதாக இவர்கள் (குணா போன்றோர்) கூறுகின்றனர். இவ்விரு கூற்றுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளதைக் காணத் தவறுகின்றனர். ஓர் அன்னை பசியாற்ற முனையும்போது, உண்ண மறுத்து அடம் பிடிக்கும் குழந்தையை மிகக் கடுமையான வார்த்தையிலே, சனியனே... எக்கேடும் கெட்டுப் போ... என்று கூறுவதற்கும், அதே குழந்தை அடுத்த வீட்டில் சென்று விளையாடும்போது, அது பிடிக்காத அவ்வீட்டுப் பெண், சனியனே... போய் தொலை! என்று சொல்வதற்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளதோ அவ்வளவு வேறுபாடு பெரியார் சொன்னதற்கும் சங்கராச்சாரி சொன்னதற்கும் உள்ளது.
தமிழருக்கு முகவரி கொடுத்த தந்தை பெரியாருக்கும் தமிழரைத் திட்ட உரிமையில்லை எனில், தமிழகத்தில் பிறந்த எந்தத் தமிழனுக்கும் அந்த உரிமை இல்லாமலேயே போய் விடும். கூடவே அன்னையை அந்நியராக்கிப் பார்க்கும் அறியாமையும் வெளிப்பட்டுவிடும்-. என்கிறார் நடுநிலை நின்று.
மேலும் இவர், மொழிவாரி மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகு தமிழ்ச் சமூக மாற்றத்திற்கென தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் தந்தை பெரியார் என்ற உண்மையை ஓங்கி அடித்துச் சொல்கிறார்.
உலகில் வேறெந்த தலைவரும் நிகழ்த்தியிராத மாபெரும் சாதனையாக பெரியார், தமிழ்நாட்டில் 10,700 பொதுக் கூட்டங்களில் தமது பகுத்தறிவு பிரச்சாரத்தைச் செய்திருக்கிறார். இதற்காக அவர் பயணம் செய்த தூரம், இந்தப் பூமிப் பந்தை 10 முறை சுற்றி வந்தால் எவ்வளவு லட்சம் மைல்களோ அவ்வளவு மைல்கள்.
தனது வாழ்க்கை, சொத்து, சுகம், சுற்றம் என அனைத்தையும் தமிழ்நாட்டிற்கே அர்ப்பணித்தார். அந்தப் பகலவனின் அர்ப்பணிப்பு மிகுந்த பேரொளியில் பல நூற்றாண்டுகள் உறங்கிக் கிடந்த தமிழகம் மெல்ல விழித்தது.
திராவிடர்தான் தமிழர், சென்னை மாகாணந்தான் திராவிடம் என்ற அக்கால வரையறுப்பின்படி, திராவிடர் கழகத்தையும், திராவிட நாடு கோரிக்கையும் முன்னெடுத்தார்.
திராவிடம் என்ற கருத்தாக்கத்தின் வழியே, நெடுந் துயிலில் இருந்து விழித்த தமிழகம், அந்த எழுச்சியினை அடித்தளமாக்கி அதன்மீதுதான் தமிழ்த் தேசியம் என்கிற மாளிகையினைக் கட்டி எழுப்ப வேண்டும். அந்நாளில் மகத்தான அம்மாளிகையின் திறவுகோல் என்பது பெரியாரியம் என்றே பெயர் கொண்டிருக்கும் என்பதை எவராலும் மறுக்க இயலாது என்கிறார் அந்த அம்மையார்.

தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு பெரியாரைக் கொச்சைப் படுத்தி, அவரைத் தமிழித்தின் துரோகியாகச் சித்தரிக்கும் பேர்வழிகளைப் பார்த்து, போடா போக்கத்தப் பயல்களா! தமிழ்த் தேசியம் என்பதே பெரியார் கட்டிய அடித்தளத்தில்தான் அமைய முடியும், அதன் செயல்பாடே பெரியாரியத்தைக் கொண்டே அமையும் என்று அறைவதுபோல் சொல்லியுள்ளார் பாருங்கள். நடுநிலையான, நன்றியுள்ள, ஆரியத்திற்குச் சோரம் போகாத, தமிழர் நலன் காக்கும் எவரும் இதைத்தான் சொல்வார்கள் என்பதில் அய்யமில்லை!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்த பிரசங்கத்தின் சாராம்சம்

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் தலைப்பில் 1939-இல் ‘விடுதலை’யில் வெளியான தலையங்கங்கள்

தமிழர் பண்பாடு