பெரியாரும் வடவர் எதிர்ப்பும்


1950 இல் சவுகார் பேட்டையிலும் தெனாய் நகரிலும் வாழும் மார்வாடிகள் தங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அஞ்சி, பெரியாரிடம் பணத்தைக் கொட்டியதால், பெரியார் பிராமண எதிர்ப்பும், பிள்ளையார் எதிர்ப்பும் ஒன்றரை ஆண்டுகள் நடத்திக் கொண்டிருந்தார். இந்தி பெயர்ப்பலகை அழிப்பும், பிராமணர் பெயர்ப்பலகை அழிப்பும் நடத்திக் கொண்டிருந்தார். மார்வாடிகள், குஜராத்திகள் மீதான தமிழர் எதிர்ப்பைத் திசை திருப்பப் பெரியார் செய்த சூழ்ச்சியே இச்செயல்கள் என்று காழ்ப்பின் உச்சக்கட்ட வெளிப்பாடாக இக்குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் குணா.
இவர் பெரியார்மீது கடும் வன்மம் கொண்டே இந்நூலை எழுதினார் என்பதற்கு இக்குற்றச்சாட்டு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எவ்வளவு கீழ்த்தரமாக ஒருவர் நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக குணா நடந்து கொண்டுள்ளார் என்பதற்கான எடுத்துக்காட்டும் இதுவாகும்.
பெரியாரின் முதன்மைப்பணி ஆரியப் பார்ப்பன ஆதிக்க ஒழிப்பும், அந்த ஆதிக்கத்திற்கு அடிப்படையான கடவுள், சாஸ்திர ஒழிப்பும் ஆகும். அதேபோல், இந்தி திணிப்பையும், பிராமணன் என்று தங்களை அழைப்பதன் மூலம் நம்மையெல்லாம் சூத்திரனாக இழிவுபடுத்தும் அடையாளத்தையும் அகற்றும் நோக்கில் இந்தி எழுத்து அழிப்பும், பிராமணப் பெயர் அழிப்பும் அவரது அடுத்த பணியாகும். எனவே, அவர் எடுத்துக் கொண்ட பணியை அவர் காலச் சூழலுக்கேற்ப முன்னுரிமை கொடுத்துச் செய்தார்.இது எல்லோரும் அறிந்த உண்மை.
ஆனால், இச்செயல்கள் எல்லாம் மார்வாடி, குஜராத்தி எதிர்ப்பைத் திசை திருப்ப பெரியார் செய்த சூழ்ச்சியென்று ஒரு மனிதர் குற்றம் சாட்டுகிறார் என்றால் அவர் யார்? என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
குறை சொல்ல வேண்டும், பெரியாரின் மதிப்பை, தொண்டைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்று நூல் எழுத குந்திய குணாவிற்கு, எதையாவது சொல்ல வேண்டுமே என்று தேடிப் பிடித்துத் தொடர்புபடுத்தி பழி சுமத்தும் பகையுணர்ச்சி உள்ளதையே இது தெற்றெனத் தெரியப்படுத்துகிறது.
அது மட்டுமல்ல, மார்வாடிகள் எதிரான போராட்டம் நடந்தது 1950 இல். பெரியார் பெயர் அழிப்புப் போராட்டம் நடத்தியது 1957 இல். மார்வாடிகளுக்கு எதிரான கடும் போராட்டத்திற்கு அஞ்சி மார்வாடிகள் பணம் கொடுத்ததற்காக மார்வாடிகள் எதிர்ப்பைத் திசை திருப்ப பெரியார் பெயர் அழிப்புப் போராட்டம் 7 ஆண்டுகள் கழித்தா நடத்துவார். மார்வாடி எதிர்ப்பு சூட்டைத் தணிக்க பெரியார் போராட்டம் நடத்தியிருந்தால் 1950 இல் அல்லவா பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டம் நடத்தியிருப்பார். ஏழு ஆண்டுகளுக்குப் பின் நடந்த ஒரு போராட்டத்தைத் தொடர்புபடுத்தி பெரியாரைக் கேவலப்படுத்தி, குற்றவாளியாக்குகிறார் இந்த குணா என்றால், இவரை விட ஒரு மோசடிப் பேர்வழியை இவ்வுலகில் காட்ட முடியுமா?
மார்வாடி, குஜராத்தி, மலையாளி, தெலுங்கர், கன்னடர், பஞ்சாபி என்று எந்த மாநிலத்துக்காரர் தமிழ்நாட்டிற்கு வருவதும், தமிழர் மற்ற மாநிலங்களுக்குச் செல்வதும் ஒன்றுபட்ட இந்தியாவிற்குள் அரசியல் சட்டப்படி தடை செய்யமுடியாத இடப் பெயர்வுகள். வேண்டுமானால் ஒற்றுமையாய் இருந்து அயல் மாநிலத்தாருக்கு நிலம் கிரயம் கொடுப்பதில்லை; அவர்கள் விற்பனையை வாங்குவதில்லை; அவர்களுடைய நிதியைப் பெறுவதில்லை என்று ஒரு மாநிலத்தவர் தங்கள் சுயக்கட்டுப்பாட்டில் தவிர்க்கலாம்.
ஆரியப் பார்ப்பன மேலாண்மையை நாமே தவிர்க்கலாம் என்றாரே குணா அது தவறு. அது நாமே  தவிர்க்க இயலாது; நம் வீட்டு நிகழ்வுகளில் தவிர்க்கலாம், மற்றபடியான ஆதிக்கங்களை பெரியார் வழியில் மட்டுமே அகற்ற இயலும். ஆனால், இந்த அயல் மாநிலத்தார் ஆதிக்கத்தை நாமே தவிர்க்கலாம். அதற்கு நம்மிடையே ஒற்றுமையும், ஒத்துழைப்பும், உதவும் உள்ளமும் வேண்டும்.
தமிழன் ஓர் இடத்தை விற்கும்போது ஒரு தமிழன் கேட்கும் விலையைவிட மார்வாடி கூடுதலாய் தொகை தரத் தயாராக நின்று விலை உயர்த்துகையில், தமிழன் தமிழர் உணர்வு நீங்க, பணத் தேவையால் மார்வாடிக்கே கிரயம் கொடுக்கிறான். இதைத் தவிர்ப்பது எப்படி? இது போன்ற நடைமுறை சிக்கல்களுக்குத் தீர்வு காணாமல் பெரியார் கண்டிக்கவில்லை என்பது பேதைமை அல்லவா?
பெரியார் இறந்து 40 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்த 40 ஆண்டுகளில்தானே மற்ற மாநிலத்தார் ஊடுருவல் அதிகம் நடந்துள்ளது. ஆக்கிரமிப்பும் அதிகம் நடந்துள்ளது. பெரியாரைக் குறை சொல்லும் குணா கூட்டம் இத்தனை ஆண்டுகளில் இதைத் தடுக்கக் கிழித்தது என்ன? உங்களை அதற்கான முயற்சியில் இறங்க வேண்டாம் என்று பெரியார் தொண்டர்களோ, திராவிடக் கட்சிகளோ தடுத்தனவா? அப்படியிருக்க இனத்தைப் பற்றிப் பேச குணா கூட்டத்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நான் வெளிப்படையாகவே கேட்க விரும்புகிறேன். நேர்மைத் திறமிருந்தால் குழப்பல் மழுப்பல் இல்லாமல் பதில் சொல்ல வேண்டும்.
உண்மை என்னவென்றால் பெரியார் காலத்தில் அயலவர் ஆதிக்கம் வளரக்கூடாது என்பதில் பெரியார் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார் என்பதாகும். குணா சொல்வது முற்றிலும் தவறான செய்தி.
தமிழனுக்குப் பார்ப்பான் மாத்திரம் எஜமானன் அல்ல. மலையாளியும் எஜமானன்; அதிகாரி.
  (விடுதலை - தலையங்கம் 15.8.1957)
இதுவரை சுப்பராயன், சுப்பராயலு ரெட்டியார், பிரகாசம், ஓமந்தூர் ரெட்டியார், இராசகோபாலாச்சாரியார் என்று பார்ப்பானும் ஆந்திராகாரனுமே முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். அப்படிக்கில்லாமல், முதன்முதலாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் (காமராசர்) முதலமைச்சராக வந்திருக்கிறார்... என்று உணர்வு பொங்கக் கூறி மகிழ்ந்தவர் பெரியார்.
(திருவல்லிக்கேணி கடற்கரை சொற்பொழிவு விடுதலை - 15,5,1954).
மலையாளிகளும், கன்னடர்களும் அலுவலர்களாய் பணி அமர்த்தப்படுவதைக் கண்டித்து 22.04.1955இல் பெரியார் விடுத்த அறிக்கையைப் பாருங்கள். தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரியாத மலையாளிகளையும், கன்னடர்களையும் தமிழ்நாட்டிலே, மாகாணத் தலைமை உத்தியோகம், ஜில்லா தலைமை உத்தியோகம், மற்றும் கெஜட் பதிவு அதிகாரிகள், கெஜட் பதிவு இல்லாத அதிகாரிகள், கமிஷனர்கள் முதலிய உத்தியோகங்களில் நியமிப்பது என்பது சர்வ சாதாரண காரியமாக இருந்து வருகிறது. தமிழ் தெரியாத அதிகாரிகளைக் கொண்டு வந்து வைத்து, அவர்களிடம் நீதி, நிர்வாக அதிகாரங்களைக் கொடுத்து நிர்வாகம் செய்யச் செய்வது என்றால், எந்தவிதத்தில் இந்த நாட்டில் மொழியை அரசாங்கம் ஆதரிக்கிறது என்று சொல்ல முடியும். என்று காமராசருக்கு எதிராகவே கண்டனம் தெரிவித்தார் என்றால் பெரியாரின் தமிழர் பற்றையும், தமிழ்ப் பற்றையும் எப்படி குறை கூற முடியும்?
பெரியார் தன்னுடைய 76ஆவது பிறந்த நாள் அறிக்கையில், தோழர்களே, தமிழ்நாட்டை வடநாடு பொருளாதாரத் துறையில் பெருங் கொள்ளையடிப்பதோடு, தமிழ்நாட்டைப் பொருளாதாரத் துறையிலும், தொழில்துறையிலும் தலையெடுக்கவொட்டாமல் மட்டந் தட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு முக்கியமான காரியத்திற்காகவே, வடநாட்டான், அரசியலிலும் தமிழ்நாட்டைத் தனக்கு அடிமைப்படுத்தி, தனது காலடியில் வைத்திருக்கிறான்.
குறிப்பாகக் கூறவேண்டுமானால், மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக் கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும், ஆரிய வருணாசிரமத்தையும் ஆதரிக்கிறவர்கள். ஆதலால் அவர்கள் தாராளமாய் வந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்; அனுமதிக்கிறார்கள். மலையாளிகள் எதிர்ப்பு மாநாடு நடத்தலாமா என்றுகூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்...
ஆக பெரியார் 1955லே திராவிட எண்ணத்தைக் கைவிட்டுத் தமிழ்த் தேசியம், தமிழர் என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டதையே இந்த உணர்வுகள் வெளிப்படுத்துகின்றன. தட்சிணப் பிரதேசம் வந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து. தமிழ், கன்னடம், மலையாளம், மூன்று நாடுகளும் சேர்ந்தால், பார்ப்பனர்களால் கழித்துவிடப்பட்டு நம்மவருக்குக் கிடைக்கும் உத்தியோகங்கள் எல்லாம் மலையாளி கைக்குத்தான் போய்விடும். நாமெல்லாரும் போலீஸ், கக்கூஸ் எடுத்தல், ரெயில்வே கூலி முதலிய வேலைக்காரனாகத்தான் வேலை செய்ய வேண்டிய நிலை வரும்...
தட்சிணப் பிரதேசம் வருவது தமிழர்களுக்கு வாழ்வா, சாவா என்பது போன்ற உயிர்ப் பிரச்சினையாகும். உங்களுக்கும் மற்றெல்லோருக்கும் இது தற்கொலையானதாகும். தட்சிணப் பிரதேசம் ஏற்படுமானால், முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்குத் தமிழ்மக்களை நெருக்குவதாகிவிடும். அருள்கூர்ந்து நம் எல்லோரையும், தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டுகிறேன் என்று பெங்களூரில் இருந்த காமராசருக்குத் தந்தி கொடுத்தார் பெரியார்.
பெரியாரின் எதிர்ப்பு பெரிதாய் ஆனதால், அதை எதிர்கொள்வது எளிதல்ல என்றுணர்ந்த காமராசர், உடனடியாக நேருவைச் சந்தித்துப் பேச, தட்சிண பிரதேசத் திட்டம்கைவிடப் பட்டது.
திராவிட நாடு கோரிக்கையைத் தொடக்கத்தில் பெரியார் வைத்தாலும், மலையாளி, கன்னடர், ஆந்திரர் செயல்பாடுகளை அறிந்தபின், அதை வெறுத்தார். தட்சிணப் பிரதேச வடிவில் மீண்டும் அது வந்தபோது மறுத்தார். ஆக, 1955இல் தந்தை பெரியார் தமிழ்த் தேசியத்தைக் கையில் எடுத்துக் கொண்டார் என்பதையே இவை காட்டுகின்றன. எனவே, பெரியார் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர் அல்ல என்பது நன்கு விளங்கும்!
அதேபோல், வடநாட்டவர் ஆரியப் பார்ப்பனர் தமிழகத்தில் அதிக அளவு ஆதிக்கம் செலுத்துவதையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.
என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதும், என் இன மக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும், தாய் தமிழ்நாட்டைப் பனியா  பார்ப்பனர்களின் அடிமைத் தளையிலிருந்தும், சுரண்டலிலும் இருந்தும், மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கையாகும்.
அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்லுகிறேன், சென்று வருவேன்.
வணக்கம்! வணக்கம்! வணக்கம்! - (விடுதலை தலையங்கம், 15.12.1957)
மார்வாடி, குஜராத்தி, ஆரியப் பார்ப்பனர் ஆகிய மூவரும் தமிழர்மீது செலுத்தும் ஆதிக்கத்தை ஒழிக்க தன் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் விலையாகக் கொடுக்கத் தயாராய் உள்ளேன். தனித் தமிழ்நாடு பெறுவது என் உயிரினும் மேலான இனிய கொள்கை என்று கூறிய ஓர் உணர்வு பூர்வமான முயற்சியைவிட, துடிப்பைவிட வேறு என்ன வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இந்த குணா கூட்டம்?
தமிழ்த் தேசிய முழக்கத்தை இதைவிட உறுதியாய், உணர்வு பொங்க முதலில் கொடுத்த வேறு தலைவரோ, இயக்கமோ உண்டா? பேனாவையும் மைக்கையும் பிடித்ததைத் தவிர வேறு எதையும் செய்யாத குணா கூட்டத்தார், அரைகுறை அறிவுவோடு தமிழர்களைக் குழப்பி, தன்னேரில்லா தலைவரைக் கொச்சைப்படுத்துவது தரங்கெட்ட செயல் மட்டுமல்ல, தமிழர் விரோத செயல் மட்டுமல்ல, ஆரியப் பார்ப்பனர் ஆதரவு நிலையுமாகும்! அவர்களின் அடிவருடும் செயலாகும்!
தந்தை பெரியாரும், தி.மு.. தலைவர்களும் அறிக்கைகள் மூலமும், சொற்பொழிவுகள் மூலமும் வடவர் எதிர்ப்பை நிகழ்த்தியதோடு, நேரடியாகப் போராட்டங்களையும் பல ஆண்டுகள் நடத்தினர்.
சென்னை மாகாணத்தில் உற்பத்தியாகும் நூல், இங்குள்ள நெசவாளர்களுக்குத் தேவையான அளவுக்கு வழங்கப்படாமல், வடநாட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்குத் துணி நெய்யப்பட்டு, விற்பனைக்கு வருவதை எதிர்த்து, தமிழ்நாட்டு நெசவாளர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினார் பெரியார்.
இப்போராட்டம் நடக்கும்போதே இந்தி எதிர்ப்புப் போர் நடத்தினார். 1950 ஜனவரி 10ஆம் நாளை இந்தி எதிர்ப்பு நாளாக அறிவித்தார். குடியரசு நாளைத் துக்க நாளாகக் கடைபிடிக்கச் சொன்னார்.
இரயில் நிலையங்களில் இந்திப் பெயர் அழிப்பு, பிராமணாள் சொல்லழிப்புப் போராட்டங்கள் நடத்தினார்.
தி.மு.. டால்மியாபுரம் இரயில் நிலையப் பெயரை கல்லக்குடியென்று மாற்ற வேண்டி போராட்டம் நடத்தியது. இந்தித் திணிப்பை எதிர்த்தும், வடவர் சுரண்டலைக் கண்டித்தும் அக்கட்சி போராட்டங்களை நடத்தியது.
திராவிடக் கட்சிகளின் வடவர் எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஆரியர்கள், மார்வாடிகள் அதிர்ந்து போயினர். காங்கிரஸார் ஆதரவை நாடினர். காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை வைத்து ஒடுக்க, அழிக்க நினைத்தனர்.
தந்தை பெரியாரின் வடவர் எதிர்ப்புப் போராட்டங்களால் அதிர்ச்சியுற்ற மத்திய காங்கிரஸ் ஆட்சி தமிழக அமைச்சர்களை டெல்லிக்கு உடனடியாக வரும்படி அழைத்துப் பேசியது. திராவிடக் கழகத்தைத் தடைசெய்வது பற்றி அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலிடம் ஆலோசிக்கப்பட்டது என்று அப்போது பத்திரிகைகள் வெளியிட்டன. இந்த அளவிற்கு வடவர் எதிர்ப்பு நடத்திய திராவிடக் கட்சிகளையும், பெரியாரையும் மார்வாடிகளின் ஆதரவாளர்கள் போன்ற ஒரு தவறான  கருத்தைத் தமிழக இளைஞர்கள் மத்தியில் பரப்ப இந்த ஆரிய அடிவருடி குணா முயற்சிக்கிறார் என்றால், அவரது முகமூடியைக்  கிழித்தெறிந்து, அவரின் உண்மை உருவத்தை உலகிற்குக் காட்ட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். காரணம், குணாக்களுக்குக் கொடுக்கும் ஒவ்வோர் அடியும், ஆரியத்தின் தலையில் விழும் இடியாகும்!
ஆரியர் எதிர்ப்பும் மார்வாடி எதிர்ப்பும், குஜராத்தியர் எதிர்ப்பும் வெவ்வேறானவை அல்ல. எல்லாம் ஒன்று. இன்னும் சொல்லப் போனால் ஆரிய எதிர்ப்பில் அனைத்தும் அடக்கம். ஆரியம் என்ற ஆணிவேர் அதிர்ந்தால் மார்வாடி, குஜராத்தி ஜல்லிவேர்கள் கூடவே வரும். ஆனால், குணாவோ வெகு தந்திரமாக ஆரிய எதிர்ப்பையும் மார்வாடி எதிர்ப்பையும் வேறு வேறாகப் பிரித்து, ஆரியப் பார்ப்பனர்களை எதிர்த்த பெரியார் மார்வாடிகளை எதிர்க்கவில்லை என்றார். எந்த நோய்க்கு எவ்வளவு வீரியம் மருந்து தர வேண்டும், எந்த நோயாளிக்கு எவ்வளவு மருந்து தர வேண்டும் என்பது மருத்துவருக்குத்தான் தெரியும். அதேபோல், பெரியார் ஆரிய எதிர்ப்புக்குக் கொடுக்க வேண்டிய அழுத்தம் கொடுத்தார்; மார்வாடி எதிர்ப்புக்குச் செய்ய வேண்டிய போராட்டங்களையும் செய்தார். ஆனால் இந்த குள்ளநரி குணா போன்றவர்கள் வரலாற்றை வசதிக்கேற்ப, வாதத்திற்கு ஏற்ப வளைத்துத் திருத்தி, பொருத்தி, பொய் புனைந்து ஏமாற்றுகின்றனர். தமிழர்களைத் தடம் மாற்றுகின்றனர். இங்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டியவர்கள் இளம் தமிழர்கள்தான்! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், பெரியார் இறப்பதற்குமுன் ஆற்றிய இறுதிப் பேருரையே வடவர் எதிர்ப்பை முன்னிறுத்தியதே ஆகும். நீ போப்பா வெளியே, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2000 மைல், 1500 மைல் தூரத்திலே இருக்கிறாய். உன் பேச்சு எனக்குப் புரியாது, என் பேச்சு உனக்குப் புரியாது; உன் பழக்கம் வேறே; என் பழக்கம் வேறே; உன் நடப்பு வேறே... உம்... அம்மா... உம்... உம்... ஆம்... அம்மா... அம்மா... அம்மா... அம்... ... ... ... என்று நோயின் வலியால் பேசும்போதே மேடையில் துடிக்கிறார். என்றாலும் சமாளித்து எழுந்து உட்கார்ந்து பேச்சைத் தொடர்கிறார். மரியாதையாகப் போய்விடு; ரகளை வேண்டாம். என்னத்துக்காக இவ்வளவு தூரத்தில் இருக்கிறவன் எங்களுக்கு இராஜாவாகணும்? நீ இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன நட்டம்; எங்களுக்கு என்ன உப்பு இல்லையா, சமுத்திரம் இல்லையா, மலையில்லையா, காடு இல்லையா? நெல் விளையவில்லையா? கம்பு விளையவில்லையா? என்ன இல்லை எங்களுக்கு? உனக்கு என்னாலே என்ன ஆகிறது?... மரியாதையாய்ப் போ! என்று வலி பொறுக்க முடியாத நிலையிலும், வடவர் ஆதிக்கத்தை எதிர்த்துக் கர்ச்சித்தார் பெரியார்.
- (19.12.1973 இறுதிப் பேருரை)
பெரியார் மார்வாடியிடம் பணம் வாங்கிக் கொண்டார் என்று அயோக்கியத்தனமாகக் குற்றஞ்சாட்டிய குணாக்களுக்கு நாம் பதில் சொல்வதைவிட, மார்க்சிய சிந்தனையாளர் மரியாதைக்குரிய .மார்க்ஸ் அவர்கள் மிகக் கடுமையாக முன் வைத்த கண்டனத்தை, பதம் பார்க்க ஒரு சோறு என்ற தலைப்பில் முன்னுரையிலே பார்த்தோம். ஆதாரமில்லாமல், கற்பனையாகக் குற்றஞ்சாட்டு கூறுகின்ற வர்களுக்கு நாம் பதில் கூறுவதற்கு முன், பெரியார்  அவர்களே தனக்குரிய பாமரப் பாணியில் ஆனால், பளிச்சென்று அறைவது போல் பதில் கூறியுள்ளார் படியுங்கள்.
சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு . வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் கரூர் ஈரோடு டிவிஷனில் அஸிஸ்டெண்ட் இன்ஜினியராக வேலை பார்த்தார். அவருக்குக்கீழ் ஓர் ஓவர்ஸீயர் பணியாற்றினார். ஓவர்ஸீயர் செய்த தவற்றுக்கு மாணிக்க நாயக்கர் கண்டித்தார். இதைப் பொறுக்க முடியாத ஓவர்ஸீயர், நீங்கள் சிறுவயது உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
உடனே மாணிக்க நாயக்கர், என் பெயர் ஏன் கெடும்? என்று கேட்டார்.
உங்களைப் பற்றி மக்கள் கண்டபடி பேசுகிறார்கள். இதற்கு இடம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று ஓவர்ஸீயர் சொன்னார்.
என்ன சொல்கிறார்கள்? என்று மாணிக்க நாயக்கர் கேட்டார்.
நீங்கள் பணம் வாங்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்று பேசுகிறார்கள் என்றார் ஓவர்ஸீயர்.
அப்படி யார் சொன்னது சொல்லுங்கள்? என்று கேட்டார் மாணிக்க நாயக்கர்.
அதற்கு அந்த ஓவர்ஸீயர், ஜனங்கள் அப்படிப் பேசிக் கொள்கிறார்கள் என்றார்.
உடனே மாணிக்க நாயக்கர், வாழாமல் உன் வீட்டிற்கு வந்திருக்கும் உன் மகளுக்கும், லஸ்கர் நாராயண சாமிக்கும் சம்பந்தம் உண்டு என்று ஊரெல்லாம் பேசிக் கொள்கிறார்களே? அப்படி நீ வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார்: உடனே அந்த ஓவர்ஸீயர் கோபப்பட்டு, எந்த அயோக்கியப் பயல் அப்படிச் சொன்னான்? சொல்லு; முட்டாள்தனமாகப் பேசாதீர்! என்றார். என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
உடனே மாணிக்க நாயக்கர் தன் காலில் இருந்ததைக் கழற்றி அந்த ஓவர்ஸீயர் தலையில் இரண்டு மூன்று அடி போட்டபடி, நீ சொன்ன அதே மக்கள்தான் இதையும் சொன்னார்கள்! என்றார்.
அப்படியென்றால், மார்வாடிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு பெரியார் தமிழர்க்குத் துரோகம் செய்தார் என்று கூறும் இந்தக் குணாக்களையும் குந்த வைத்து அப்படிக் கழற்றி அடித்தால்தான் சொரணை வரும், நமக்கும் உணர்வு எழும் என்றாலும் நம் பண்பாடு நம்மைக் கட்டுப்படுத்துகிறது. நம் உணர்வுகளை இவர்களுக்கு எதிரான பரப்புரை மூலம் காட்டுவோம். தமிழர்களை ஒன்று கூட்டுவோம்.

சில பத்திரிகைக்காரன், குணாவைப் போன்ற சில தரம் கெட்ட அக்கப்போர் எழுத்தாளர்கள் இப்படி பேசிக் கொள்கிறார்கள், ஊர் பேசுகிறது!, உலகம் சொல்கிறது! என்று உண்மைக்கு மாறானதையெல்லாம் சொல்லி தப்பிப்பதற்கு பெரியார் சொன்ன சம்பவம்தான் சரியான பாடம்! எதிர்காலத்தில் குணாக்கள் இப்படி எழுதுவார்கள் என்று தெரிந்தே இந்த நிகழ்வையும் நமக்குச் சொல்லிவிட்டுப் போயுள்ளார். என்னயிருந்தாலும் தீர்க்கதரிசியல்லவா!


நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்த பிரசங்கத்தின் சாராம்சம்

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் தலைப்பில் 1939-இல் ‘விடுதலை’யில் வெளியான தலையங்கங்கள்

தமிழர் பண்பாடு