நீட் நுழைவுத் தேர்வு கூடாது - ஏன்?
நீட் நுழைவுத் தேர்வு கூடாது - ஏன்?
நுழைவுத் தேர்வு திணிப்பு - எதிர்ப்பு – ஒழிப்பு
ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்தைத் தடுக்க,
நேர்முகமாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக,
கொல்லைப்புற வழியாக சமூக நீதியைப் பலவீனப்படுத்த பார்ப்பனியம் பல்வேறு சித்து வேலைகளில் ஈடுபடுவது வாடிக்கை. அதில் ஒன்றுதான் மருத்துவக் கல்வி இளங்கலை, பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் தொடர்பான துணைக் கல்விகளுக்கு நுழைவுத் தேர்வு என்னும் இந்திய மருத்துவக் குழுவின் அறிவிப்பாகும். இந்த நுழைவுத் தேர்வு என்னும் நச்சரவம் இடையிடையே தலை நீட்டிக் கொண்டுதான் இருக்கும். நாம் தடியைத் தூக்கியவுடன் பொந்துக்குள் பதுங்கிவிடும்.
நுழைவுத் தேர்வு என்பதை மட்டும் எடுத்துக் கொண்டாலும் இதற்கென்று ஒரு தனி வரலாறு உண்டு.
முதன்முதலில் அமைந்த தி.மு.க ஆட்சியில் கல்வியமைச்சராக இருந்த டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் நுழைவுத் தேர்வு என்ற பேச்சை எடுத்தார்.
(இது ஆட்சியின் கருத்தல்ல,
தன்னிச்சையான கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.) தந்தை பெரியார் தொடக்கத்திலேயே தடியை ஓங்கினார். (விடுதலை அறிக்கை
17.07.1972) இந்தக் கருத்து கருவிலேயே சிதைக்கப்பட்டுவிட்டது.
அதன்பிறகு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபொழுது
- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் எச்.வி.ஹண்டே என்ற பார்ப்பனர்
1982 இல் நுழைவுத்தேர்வு பற்றி வாய்திறந்தார்.
அதனைத் தொடர்ந்து கடும் கண்டன அறிக்கையை
23.03.1982 அன்று வெளியிட்டோம். கடுமையான எதிர்ப்பின் காரணமாக பதுங்கியது அந்த நுழைவுத் தேர்வு.
அந்த நுழைவுத் தேர்வு என்னும் விரியன் குட்டி
1984 இல் அதே எம்.ஜி.ஆர் ஆட்சியில் மீண்டும் வெளிவந்தது. அப்படி ஓர் அறிவிப்பு வந்ததுதான் தாமதம்-உடனே திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை சென்னை பெரியார் திடலில்
25.03.1984 அன்று கூட்டினோம்.
நுழைவுத் தேர்வை பின்வாங்காவிட்டால் அனைத்துக் கட்சி சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்து அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தோடு நின்று விடாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 23 இடங்களில் நுழைவுத் தேர்வு ஆணையை எரிக்கும் போராட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. (23.06.1984). எம்.ஜி.ஆர் கொண்டு வந்த நுழைவுத்தேர்வை சி.பி.எம் கட்சி மட்டும் ஆதரித்தது - வரவேற்றது.
1984 ஆம் ஆண்டு முதல் கடும் எதிர்ப்பிற்கிடையே தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த நுழைவுத் தேர்வு 09.06.2005 அன்று செல்வி.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நுழைவுத் தேர்வை ரத்து செய்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும் நுழைவுத் தேர்வு ரத்து செல்லாது என்று தீர்ப்பளித்தது.
இந்த நேரத்தில் ஒரு தகவலை நினைவூட்டுவது பொருத்தமானது.
நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு முன் முதலமைச்சருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு பாடத்திட்ட முறைகள் உள்ளதாலும், அவற்றிலிருந்து தேர்வு பெறுவோரின் மதிப்பெண்கள் சம அளவில் இருக்க வாய்ப்பு இல்லாததாலும், வல்லுநர் குழு ஒன்றை அமைத்து, அவற்றை சமப்படுத்தும் வகைக்கான கூறுகளை ஒரு மாதம் அல்லது இருமாதம் ஆய்வு செய்து. பரிந்துரைகளைப் பெற்று அதனை உடனடியாக செயல்படுத்தும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தால்,
நீதிமன்றம் இதனைத் தடுக்காது என்ற கருத்தினைத் தெரிவித்தது (விடுதலை, 16.01.2006). ஆனாலும், பரிசீலிக்காமல் செயல்பட்டதால் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்துவிட்டது. இரண்டுமுறை (27.06.2005 மற்றும்
27.02.2006) வந்த இத்தகைய ஆணைகளையும் ரத்து செய்துவிட்டது.
2006 ஆம் ஆண்டில் வந்த கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு முறைப்படி, கல்வியாளர் அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்து அவர்களது பரிந்துரை பெறப்பட்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
வழக்கம் போல் சமூகநீதிக்கு எதிரான சக்திகள் சென்னை உயர்நீதிமன்றம் சென்றபோது,
முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு அக்குழுவின் பரிந்துரைப்படி ரத்து செய்யப்பட்டு இருந்ததால் சட்டம் செல்லும் என்று அதே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அப்பொழுது நுழைவுத்தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரம் அனைத்து தரப்பு மக்களின் கண்களையும் திறக்கக் கூடியதாகும்.
2004-2005 ஆம் ஆண்டில் 5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை எழுதினார்கள்.
அதில் 2 இலட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள்,
இவர்களில் பெரும்பாலோர் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். நிறைய மாணவர்கள் மருத்துவக் கல்லூரியிலும் நுழைந்தனர்.
பனிரெண்டாம் வகுப்புத் தேர்வும் நுழைவுத் தேர்வைப் போன்றதுதான். ஆனால் நுழைவுத் தேர்வு காரணமாக கடந்த ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1195 இடங்களில் கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்களுக்குக் கிடைத்துள்ள இடங்கள் 227 தான். அதனால் தான் நுழைவுத் தேர்வை ரத்து செய்தோம் என்று தி.மு.க. அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு அனுமதி வழங்கியது.
--------------
நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டதால் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் ஒடுக்கப்பட்டோர் சாதனை
2006 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இன்றி மருத்துவக் கல்லூரிக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
2016-2017 ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டது.
ஏறத்தாழ 2853 இடங்களுக்கு
25,379 விண்ணப்பங்கள் வந்தன.
இதில் பிற்படுத்தப்பட்டோர் (BC) - 10,538
தாழ்த்தப்பட்டோர் (SC)
- 5,720
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) - 5,314
பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் (BCM) - 1,419
முன்னேறிய வகுப்பினர்
(FC) - 1,228
அருந்ததியர் (SCA)
- 928
மலைவாழ் மக்கள் (ST) - 232
இதில், பொதுப்பேட்டிக்கான
(31% ) 884 இடங்களுக்கு தேர்வான மாணவர் விவரம்.
பிற்படுத்தப்பட்டோர் (BC) -
599
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
(MBC) - 159
முன்னேறிய ஜாதியினர்
(FC) - 68
பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் (BCM) -
32
தாழ்த்தப்பட்டோர் (SC) -
23
அருந்ததியர் (SCA) -
2
மலைவாழ் மக்கள்
(ST) - 1 ----- 884 -----
குறைந்தது 197.5 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த 884 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு பிரிவிலும் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்ற முதல் மாணவரின் தரவரிசைப் பட்டியல் எண்ணும், அவர்கள் பெற்ற மதிப்பெண்களும் கீழே தரப்படுகின்றன.
பிரிவு மதிப்பெண் தரவரிசை எண்.
பிற்படுத்தப்பட்டோர் 200.00 3
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 199.75
4
உயர் ஜாதியினர் 199.75 7
இஸ்லாமியர் 199.75 8
தாழ்த்தப்பட்டோர் 199.75 81
அருந்ததியர் 199.00 166
மலைவாழ் மக்கள் 197.75
824
நம் மக்களிடையே ஒரு பொதுவான எண்ணம் உண்டு அல்லது பரப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் 35%
மதிப்பெண் பெற்றாலே இடம் கிடைத்துவிடும் என்பதுதான் அது. உயர் வகுப்பினர் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்
200/200 வாங்கினால் மட்டுமே அனுமதி என்ற கருத்து தவறாகப் பரப்பப்படுகிறது. அது தவறானது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் மெய்ப்பிக்கும். முன்னேறிய வகுப்பினரை விட பிற்படுத்தப்பட்ட,
மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் முன்னிலை பெற்றிருப்பதையும்,
உயர் ஜாதியினரில் முதன்மை பெற்றுள்ள மாணவரின் அதே மதிப்பெண்ணான
199.75. தாழ்த்தப்பட்டோர் பிரிவில் முதல் மாணவரும் பெற்றுள்ளார்.
மேற்கண்ட புள்ளி விவரங்கள் என்ன காட்டுகின்றன? திராவிட இயக்க ஆட்சியில் 69 சதவீத இட ஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ஒழிப்பு, கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் செம்மையாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதால் இத்தகைய அறுவடை நிகழ்ந்திருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் அதிக அளவில் வாய்ப்பு பெற்றனர்.
திராவிட இயக்கத்தின் சமூகநீதிக்கு கிடைத்த வெற்றியல்லவா இது. மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று சொல்லி ஒட்டு மொத்த மருத்துவ படிப்பையும் தன்வசப் படுத்திய பார்ப்பனர் சூழ்ச்சியை ஒழித்துக் கட்டியது நீதிக்கட்சி அல்லவா!
தந்தை பெரியாரின் முயற்சியல்லவா!
+2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதன் காரணமாக கிராமப்புற,
ஒடுக்கப்பட்ட,
ஏழை,
நடுத்தர,
இருபால் மாணவர்களும் இந்தச் சாதனையின் வெற்றிச் சிகரத்தை எட்டியுள்ளனர்.
இந்த வெற்றியைப் பறிக்கத்தான் - ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட இம் மக்களின் இந்தச் சாதனையை ஒழித்துக்கட்டத்தான் அகில இந்திய நுழைவுத்தேர்வு எனும் கொடுவாளை கொல்லைப்புற வழியில் தூக்கிக் கொண்டு வருகின்றனர். உயர் ஜாதி வட்டாரமும் பா.ஜ.க.
சங்பரிவார்களும் அதில் மும்முரம் காட்டுகின்றனர்.
தமிழ்நாடு அளவிலான நுழைவுத் தேர்வே சமூகநீதிக்குப் பெரும் சவாலாக இருந்ததென்றால்,
மத்திய அரசு இந்தியா முழுமைக்குமாகக் கொண்டுவரும் ஒற்றை நுழைவுத் தேர்வு அதைவிட இன்னும் பேராபத்து அல்லவா?
-------------
அகில இந்திய மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு
தமிழ் நாட்டில் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டதாலும், சமூக நீதி கொள்கைகளாலும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் நிகழ்த்திய சாதனைகளை சிதறடிக்க வேண்டும். சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்பிட வேண்டும் என்னும் நோக்கோடு உயர்ஜாதி ஆதிக்க சக்திகள் தொடர்ந்து முயன்று வருகின்றன.
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை
1976 நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு எடுத்துச் சென்றாலும் சென்றார்கள்,
அன்று முதல் கல்வித் துறையில் பார்ப்பனீயம் தன் சித்து வேலைகளில் இறங்கி விட்டது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி நுழைவுத் தேர்வை நுழைக்கும் முயற்சி கபில்சிபல் காலம் முதல் தொடர்ந்து நடந்துவருகிறது.
இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த கபில்சிபல் இந்தியா முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது என் கனவு என்று அறிவித்தார்.
நுழைவுத்தேர்வை நுழைக்க துடித்துக் கொண்டிருந்த மருத்துவக்குழு, இந்த அறிவிப்பை சாதகமாக்கிக் கொண்டு, உடனே ஒரு பரிந்துரையை மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பியது.
மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு,
அகில இந்திய மருத்துவ நிறுவன (AIIMS)
நுழைவுத்தேர்வு என்று ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் தனித்தனி நுழைவுத் தேர்வு எழுதுவது மாணவர்களுக்குச் சிரமமாக இருப்பதால் மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுமைக்கும் ஒரே நுழைவுத் தேர்வு வைக்கலாம் என்பது தான் அந்தப் பரிந்துரை.
எம்.சி.அய்
(Medical Council of India) எனப்படும் இந்திய மருத்துவக் குழுவின் இந்தப் பரிந்துரையை ஏற்று இந்தியா முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தத் திட்டமிட்டது மத்திய அரசு.
அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து
115 மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவைக் கண்டித்து வழக்கம் போல் திராவிடர் கழகம் போர்க் கொடித் தூக்கி மாநில அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. (29.12.2010).
அன்றைய தமிழ்நாடு
(தி.மு.க)
அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜோதிமணி
06.01.2011 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மத்திய அரசின் இந்த நுழைவுத் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு (Implead) வாதாடியது.
வேறு வழியின்றி மத்திய அரசு மாநிலங்களின் கருத்தறிந்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை கட்சிக்கு அப்பாற்பட்டு நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு இருந்தது. தமிழ்நாட்டின் முதல்வராக வந்த செல்வி ஜெயலலிதா அவர்களும் தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முயற்சியை நிறுத்த வேண்டும் என்று மன்மோகன் சிங் அவர்களுக்குக் கடிதம் எழுதினார்.
இந்த மனுக்களை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 18.07.2013 அன்று நுழைவுத் தேர்வு சட்ட விரோதமானது என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த அமர்வின் தலைவரான நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் விக்கிரமஜித்சிங் ஆகியோர் தங்கள் தீர்ப்பில் மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளை வகுப்பதைத் தவிர, நுழைவுத் தேர்வை நடத்திட உத்தரவிடும் சட்டப்படியான அதிகாரம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்குக் கிடையாது என்றும், பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை,
மாநிலங்கள் தாங்களாகவே நுழைவுத் தேர்வை நடத்தலாம் அல்லது தற்போது உள்ள நடைமுறைகளையே கடைபிடிக்கலாம் என்றும் கூறி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவுகளைச் சுட்டிக்காட்டி, நுழைவுத் தேர்வு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர்.
மூன்றாவது நீதிபதி ஏ.ஆர்.தவே மட்டும் மாறுபட்ட தீர்ப்பளித்தார்.
ஆயினும் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தையொட்டி நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபின் இவ்வழக்கில் மத்திய அரசு சார்பில் மறு சீராய்வு மனு போடப்பட்டது.
இந்த வழக்கு ஏற்கனவே நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த தவே தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதுவே நியாயமற்ற ஒன்றாகும். இந்த அமர்வின் மற்றொரு நீதிபதி நாகேஷ்வரராவ் ஆவார். இவர் சென்னையில் வழக்குரைஞராகப் பணியாற்றிய போது நுழைவுத் தேர்வுக்கு எதிராக வாதாடியவர்.
அதனைக் காரணமாகக் காட்டி இவ்வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதாக நேர்மையான முறையில் அறிவித்தார்.
ஆனால், தொடர்ந்து நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துவந்த தவே இவ்வழக்கில் தொடர்ந்தார்.
இதனை நாம் 13.7.2016 அன்றே கண்டித்தோம்.
நாம் எதிர்ப்பார்த்ததைப் போலவே இந்த அமர்வு நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து தேசிய நுழைவுத் தேர்வுச் சட்டம்
2016 ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைக் கண்டித்தும் நுழைவுத் தேர்வு கூடாது என்றும்
2.8.2016 அன்று நாம் கீழ்க்காணும் அறிக்கையை வெளியிட்டோம்.
மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வைக் கட்டாயமாக்கும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று ஒரு சமாதானம் -
விளக்கம்
- ஆளும் தரப்பில் கூறப்படலாம் என்றாலும், இது ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், ஏழை,
எளிய முதல் தலைமுறைப் பிள்ளைகள், கிராமாந்திரங்களிலிருந்து மருத்துவப் படிப்புப் படித்து, டாக்டர்களாக வர விரும்புவோர்
- ஆகியோரது ஆசையில் மண்ணைப் போடும் சமூகநீதி விரோதப் போக்காகும்!
மக்கள் விரோதப் போக்கும் ஆகும்!
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போனதின் முக்கியத் தீய விளைவுகளில் ஒன்று இது!
கல்வி என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் - அதுவும் எல்லோருக்கும் சி.பி.எஸ்.இ. (CBSE) என்ற மத்தியக் கல்வித் திட்டத்தை
- (அதில் மறைமுக சமஸ்கிருத திணிப்பும் உள்ளது) உள்ளடக்கி ஏற்றால், கற்றால், இந்த நுழைவுத் தேர்வை எளிதில் சந்திக்கலாம் என்றெல்லாம் கூறுவது கொக்குத் தலையில் வெண்ணெய்யை வைத்து, கொக்கைப் பிடிக்கச் சொல்லும் யோசனை போன்றதேயாகும்!
தமிழ்நாட்டில் போராடிப் பெற்ற உரிமை
தமிழ்நாட்டில் கடந்த
20, 30 ஆண்டுகளுக்குமேல் போராட்டம் நடத்தி, மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வை ஒழித்துக்கட்ட பாடுபட்டதன் விளைவாகவே, திறந்த போட்டி என்ற பொதுப் போட்டியில்கூட தாழ்த்தப்பட்ட,
மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இடங்களைப் பிடிக்கின்றனர். சிலர் அப்படி வருவதனாலேயே எல்லோரும் அந்த எல்லையை, பக்குவத்தை,
தகுதியை எட்டி விட்டனர் என்று தப்புக் கணக்குப் போடலாமா?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் - நுழைவுத் தேர்வு நுழையக் கூடாது என்பதற்கான அந்தச் சட்டம் இருக்கையில்,
உச்சநீதிமன்றத்தில் உள்ள சில நீதிபதிகள் இப்படி முடிவு செய்தது சமூகநீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரானதல்லவா?
நுழைவுத் தேர்வை தொடர்ந்து வலியுறுத்தும் அதே நீதிபதி
அத்தீர்ப்புக் கூறிய நீதிபதிகளுள் ஒருவர், ஏற்கெனவே நுழைவுத் தேர்வு நடத்துவது செல்லாது என்று தீர்ப்பு உச்சநீதிமன்ற அமர்வில் அளிக்கப்பட்ட போது, மாறுபட்ட மைனாரிட்டி தீர்ப்பு எழுதியவர் ஆவார். மறு ஆய்வுக்கு வருகையிலும்,
தாமே தலைமை தாங்கி மீண்டும் நுழைவுத் தேர்வு தேவை என்று கூறியுள்ள அவர், உயர்ஜாதி நீதிபதியாவார் என்பதும் உண்மை. (இது பச்சையான நியாயவிரோதம் ஆகும்)
தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கவில்லை
அவரது தீர்ப்புக்கு நாம் உள்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை;
ஆனாலும்,
அந்த நீதிபதி இந்த அமர்வில் அமர்ந்து தீர்ப்பு தந்தது எவ்வகையில் நீதியும், நியாயமும் ஆகும் என்பது சட்ட வட்டாரங்களில் எழுகின்ற கேள்வியாகும்!
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த அ.தி.மு.க. உறுப்பினர்களும், தி.மு.க.
உறுப்பினர்களும் எதிர்த்துள்ளனர் என்பது ஓர் ஆறுதல், நம்பிக்கையூட்டுவதாகும்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக!
நுழைவுத் தேர்வை நடத்த எல்லா மாநிலங்களையும் கட்டாயப்படுத்தாமல்,
விரும்பும் மாநிலம் நடத்தலாம்;
விரும்பாதவர்கள் அதனை நடத்தவேண்டிய அவசியமில்லை என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்த,
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு உறுதியான தீர்மானத்தினை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர்
இணைந்து ஒருமனதாக நிறைவேற்றிடவேண்டும்!
போராட்டம் வெடிக்கும்!
இன்றேல், தமிழ்நாட்டில் மாணவர்கள், பெற்றோர்கள் கிளர்ச்சிகள் வெடிப்பது தவிர்க்க இயலாது!
எனவே, தமிழ்நாடு ஏதோ சென்ற கல்வி ஆண்டில் தப்பித்தது என்றால் போதாது! இந்த ஆபத்தை நிரந்தரமாக ஒழித்துக் கட்ட அனைத்துக் கட்சிகள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஓரணியில் ஒன்று திரண்டு போராட முன்வர ஆயத்தமாவீர்!
என்று அந்த அறிக்கையில் நீதிமன்றத் தீர்ப்புகுறித்த நம் கருத்தைத் தெரிவித்திருந்தோம்.
அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகம்
20.11.2016 அன்று அரக்கோணத்தில் புதியக் கல்விக் கொள்கை - நீட் தேர்வு எதிர்ப்பு போராட்ட அறிவிப்பு மாநாட்டை நடத்தியது.
தொடர்ந்து திருச்சியில் 19.12.2016 அன்று மாணவர் - பெற்றோர் - ஆசிரியர் முத்தரப்பு மாநாட்டையும் நடத்தியது.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து டிசம்பர் 30 அன்று ஆசிரியர் -
மாணவர்
- பெற்றோர் பங்கேற்கும் முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. திருச்சி, நாகர்கோயில், தூத்துக்குடி, மதுரை, சேலம்,
கோவை,
தருமபுரி,
காஞ்சிபுரம்,
வேலூர் ஆகிய 9 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம், தொடர்ந்து பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டது.
நம் வளர்ச்சியை கொல்லைப்புற வழியில் தடுக்க முனையும் அனைத்து முயற்சிகளையும் ஒட்டு மொத்தமாக முறியடிக்கும் வரை ஒரு போதும் நாம் ஓய மாட்டோம்!
நூல் : நீட் நுழைவுத் தேர்வு கூடாது - ஏன்?
ஆசிரியர் : கி.வீரமணி
நூல் : நீட் நுழைவுத் தேர்வு கூடாது - ஏன்?
ஆசிரியர் : கி.வீரமணி
Comments
Post a Comment