தலைமை தாங்கும் தகுதி தமிழருக்கு இல்லையா?
பெரியார் காலத்தில் ஜாதிப்பற்றற்ற தமிழர் தலைவர்களான மா.
சிங்காரவேலர், பன்னீர்செல்வம், சி.பா.
ஆதித்தனார், வ.உ.
சிதம்பரனார், திரு.வி.
கல்யாண சுந்தரனார், ப.ஜீவானந்தம் போன்ற மக்கள் தலைவர்கள் இருந்தும், தமிழ்நாடு முழுவதற்கும் தமிழனால் மதிக்கக்கூடிய போற்றக் கூடிய ஒரு தமிழர்கூடக் கிடையாது என்பது பெரியார் அடிக்கடி படித்து வந்த பாடம். தன்னை விட்டால் தமிழருக்குத் தலைவனே கிடையாது என்னும் தான்தோன்றிப் போக்கே அவருடைய போக்காக இருந்து வந்துள்ளது. அவர் தி.க.வில் அவர் அருகிலேயே அண்ணா மாபெரும் மக்கள் தலைவராக ஓங்கியெழவில்லையா? ஆயினும் பெரியார் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டாரில்லை. என்பது குணாவின் அடுத்த குற்றச்சாட்டு.
பெரியாரைக் கொச்சைப்படுத்தி ஆரியத்தின் சபாஷ் வாங்க வேண்டும்; ஆரியத்திற்குத் துணை நிற்க வேண்டும் என்பதே குணாவின் உள்நோக்கம் என்று நான் அடிக்கடி கூறும் போதெல்லாம் சிலருக்கு நம்பிக்கை வராமலிருந்
திருக்கலாம். ஆனால், மேற்கண்ட குற்றச்சாட்டில் அவர் கூறும் வார்த்தைகளையும், குற்றச்சாட்டை ஒட்டுச் சேர்த்து ஏமாற்றி குறை கூறுவதையும் புரிந்து கொண்டால் நான் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்பது விளங்கும்.
தன்னை விட்டால் தமிழருக்குத் தலைவனே இல்லை யென்ற தான் தோன்றிப் போக்கே அவருடைய போக்காக இருந்து வந்துள்ளது.
உலகம் ஏற்கும் ஓர் ஒப்பற்ற தலைவரைப் பார்த்து தான் தோன்றி போக்கினர் என்கிறார் ஓர் எழுத்தாளர் என்றால் அவர் பெரியார்மீது எந்த அளவிற்கு வெறுப்பு கொண்டுள்ளார் என்பது விளங்கும்.
வெறுப்பின் வெளிப்பாட்டால், குற்றங்களைத் தேடியலைந்து கிடைக்க
வில்லையென்றாலும் இட்டுக்கட்டி குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டில்கூட அவர் இட்டுக்கட்டி ஏமாற்றிக் குறை சொல்வதைக் காணலாம். எல்லோரும் ஏற்கும் சரியான தலைமை தமிழர்க்கு இல்லை என்று பெரியார் சொன்னது 1954இல்.
அண்ணா மாபெரும் தலைவராக உருவானது 1965 வாக்கில். அதுவும் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்குப் பின். அப்படியிருக்க மாபெரும் தலைவர் அண்ணா அவர் பக்கத்திலே இருக்கும்போதே, தமிழர்க்கு மக்கள் ஏற்கும் தலைவர் இல்லையென்று பெரியார் சொன்னது தவறு என்று குணா குற்றஞ்சாட்டுகிறார் என்றால் இது எப்படிப்பட்ட தொரு மோசடியான குற்றச்சாட்டு.
தன் தவற்றை மறைக்க அண்ணா ஐம்பதுகளிலே ஜாதி சமயம் கடந்த தலைவரானார் என்று தவறான வரலாற்றைச் சொல்கிறார்.
1950 களில் காங்கிரசும், உழைப்பாளர் கட்சியும், பொதுவுடைமைக் கட்சிகளுமே செல்வாக்கு பெற்றிருந்தன.
தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸ் பின்னும், வன்னியர்கள் உழைப்பாளர் கட்சியின் பின்னும் நின்றனர். ஆரிய எதிர்ப்பாளர் களும், தமிழ்ப் பற்றாளர்களும் பெரியார் பின்னும் அண்ணா பின்னும் நின்றனர்.
தன் கட்சியில் தன் தொண்டனாய் தன் தலைமையை ஏற்றுச் செயல்பட்டு, தன்னிடம் பிரிந்து சென்ற அண்ணாவைத் தமிழர் தலைவராக ஏன் பெரியார் சொல்லவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை இட்டுக்கட்டி இந்தக் குணா கூறுகிறார் என்றால் அவர் உள்நோக்கம் என்ன தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குணாவின் இக்குற்றச்சாட்டுக்கு நான் பதில் விளக்கம் தருவதற்குமுன் இது பற்றி பெரியாரே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
நீ ஒரு கன்னடியன். அப்படியிருக்க, நீ எப்படி தமிழர்களுக்குத் தலைவனாக இருக்க முடியும்? என்று என்னைக் கேட்டார்கள்.
தமிழன் எவனுக்கும் அந்தத் தகுதியில்லையப்பா! என்று நான் அதற்கு விடை சொன்னேன். ஒரு தமிழன் இன்னொரு தமிழன் உயர்வை பார்த்துப் பொறுத்துக் கொள்ள மாட்டான் என்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை
01.06.1954)
இதுவே பெரியார் சொன்ன பதில். இதைவிட வெளிப்படையாக, உள்ளத்தில் ஒளிவுமறைவின்றி, நாணயமாக மிகச் சரியாக, தமிழர் நலன் கருதி பெருந்தன்மையாக வேறு என்ன பதில் சொல்ல முடியும்?
அவர் பதிலைக் கூர்ந்து கவனித்தால் அதில் குற்றம் சொல்ல யாருக்குத் தோன்றும்? மாறாக அவரது மாண்பைப் பாராட்டவே தோன்றும்.
தனக்கு மட்டுமேதான் தலைமைக்குத் தகுதியுண்டு என்று பெரியார் சொல்லவில்லை. வேறு தமிழர்க்கு அத்தகுதியில்லை என்பது அவர் சொன்னதற்குப் பொருள் அல்ல. அவர் பதிலின் இறுதியில் மிகச் சரியாக, விளக்கமாக, உரிய காரணத்தை கூறியுள்ளார்.
ஒரு தமிழன் இன்னொரு தமிழன் உயர்வதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள மாட்டான் என்பதே அதற்குக் காரணம்.
தந்தை பெரியாரின் இந்த விளக்கத்தைப் படிக்காமல், புரிந்து கொள்ளாமல், அவர் உள்ளத்து உணர்வை உய்த்து உணராமல், குற்றம்சாட்டும் குறுகிய நோக்கிலே குற்றம் சொல்வதாலே இது குற்றமாகத் தோன்றுகிறது.
மேற்கண்ட பெரியார் விளக்கத்தைக் கீழ்க்கண்டவாறு படித்துப் பாருங்கள். அவர் கூறுவதன் உண்மைச் சரியாக விளங்கும்.
ஒரு தமிழன் இன்னொரு தமிழன் உயர்வதைப் பொறுத்துக் கொள்ள மாட்டான் என்ற காரணத்தாலே, தமிழர்களுக்குத் தலைவனாகத் தமிழன் எவனுக்கும் தகுதியில்லை. இதுவே பெரியார் சொன்ன பதில்.
இதை நன்றாகப் படித்துப் பாருங்கள்! தமிழர்கள் எவருக்கும் தலைமை தாங்க தகுதியில்லை என்று பெரியார் சொல்லவில்லை. ஒரு தமிழன் தலைமையை இன்னொரு தமிழர் தலைவன் ஏற்க மாட்டான். அதனாலே, தமிழனுக்குத் தமிழன் தலைமை தாங்கும் தகுதியில்லாமல் போயிற்று என்பதே பெரியாரின் கருத்து. ஒவ்வொரு தமிழனும் இன்றைக்கு உள்ளத்தைத் தொட்டுச் சொல்லட்டும். இன்றளவும் தமிழகத்தில் தமிழரின் நிலை இதுதானே. அதனால்தானே தமிழர்க்குத் தமிழன் தலைமை ஏற்காமல் இருக்கிறான். தமிழனும் மாற்றானைத் தலைவனாக ஏற்கிறான்.
மராட்டிய ரஜினிகாந்தை தலைமை ஏற்க தமிழன் பல ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருக்கிறானே! ஜெயலலிதாவை தலைமை ஏற்கச் செய்கிறானே!
தமிழன் எவனுக்கும் அந்தத் தகுதியில்லையா? தமிழன் தலைமை தாங்குவதை மற்றொரு தமிழர் தலைவன் விரும்பு வதில்லையா? எது உண்மை? சொல்லுங்கள்!
பெரியார் சொன்னதுதான் இன்றளவும் உண்மை. என்றைக்குத் தமிழன் ஒட்டுமொத்தமாகத் தன் முனைப்பு, (ஈகோ)
பார்க்காமல், ஒரு தலைமையின் கீழ் வர சம்மதிக்கிறானோ அப்போதுதான் தமிழனுக்குத் தமிழன் தலைமை தாங்குவான்.
தமிழ்த் தேசியம் பேசும் அளவிற்கு பக்குவப்பட்ட, அறிவு நுட்பமுடைய, தமிழ் உணர்வுடைய, தமிழர் உயர்வு நாடும், அர்ப்பணிப்பு உணர்வுள்ளவர்களுக்குள்ளே ஒரு தலைமையை ஏற்கும் பக்குவம் இல்லையே! ஆளுக்கொரு இயக்கம் ஆளுக்கொரு ஏடு-.
உருப்படுமா தமிழ்நாடு.
அப்படியிருக்க 60 ஆண்டு காலம் உழைத்த ஒரு தலைவரை அவர் இறந்து கால் நூற்றாண்டு கழித்து மோசடியான குற்றச்சாட்டுகளைக் கூறிக் கொச்சைப்படுத்துவது தரமற்ற மனிதத்தனமற்ற செயல் அல்லவா?
ரஷ்யாவிற்குச் சென்றுவந்த பெரியார், அங்கு செய்யப்பட்ட சில எழுத்துச் சீர்திருத்தங்களைக் கண்டு, தமிழிலும் அது போன்று காலத்திற்கேற்ப, மக்கள் வசதிக்கும் எளிமைக்கும் ஏற்ப எழுத்துச் சீர்திருத்தம் செய்தால் தமிழ் வளர்ச்சிக்குத் துணை செய்யும் என்று எண்ணினார்.
ஆனால், அச்சீர்திருத்தங்களைத் தமிழறிஞர்கள் செய்ய வேண்டும் என்று எண்ணினார். ஆனால், தமிழறிஞர்கள் யாரும் அதைச் செய்ய முன்வரவில்லை.
எனவே, இறுதியில் 5ஆம் வகுப்பு மட்டுமே படித்த தமிழ் புலமையில்லா பெரியார் தனக்குச் சரியென்றுபட்ட சீர்திருத்தங்களைச் செய்தார். அவ்வாறு செய்யும்போது கீழ்க்கண்டவாறு கூறினார்.
இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை ஒப்புக் கொள்கின்றேன். ஆனால், தகுதியுள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்ன செய்வது? என்னைக் குறை கூறவோ, திருத்தவோ, (அவர்கள்) முயற்சிப்பதன் மூலமாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லட்சியம் செய்யவில்லை என்றார் பெரியார். இவர்தாம் பெரியார்! இந்த உள்ளத் தூய்மையும் தமிழ் மீது அக்கறையும் எவருக்கு இருந்தது. இதே அடிப்படையில்தான் தமிழர்க்குத் தொண்டு செய்வதிலும் தகுதியான ஒருவர் முனைந்து முன்வராமையால் அவர் தலைமையேற்றார். மற்றபடி தமிழர் தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு தான் தலைமை ஏற்க வேண்டும் என்ற அற்ப ஆசையில், தலைமையாசையில் அல்ல. அப்படி ஆசைப்பட்டிருந்தால் அவர் எத்தனையோ பதவிகளை ஏற்றிருப்பார். கிடைத்ததை வேண்டாம் என்றார். இதை நாடு நன்கு அறியும். இன்னும் நுட்பமாக நோக்கின், பெரியார் பற்றி குணா கூறுகின்ற வேறுசில குற்றச்சாட்டுகளே தமிழர்க்கு தலைமை தாங்கிய திறனும், தகுதியும் பெரியார்க்கே அப்போது இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
1. தமிழக எல்லைச் சிக்கல் வந்தபோது பெரியார் சரியாகத் தீர்வு காணவில்லை. ம.பொ.சி.
போன்றவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
2. மார்வாடி, குஜராத்தி, மராட்டியர் போன்ற வடவரை எதிர்த்துத் தடுக்கவில்லை. பெரியார்மீது குணா சுமத்தும் குற்றச்சாட்டுகளுள் இவை இரண்டும் அடங்கும். குணா சொல்வதுபோல் தமிழர்க்குத் தலைமை தாங்கும் பல தலைவர்கள் தமிழகத்தில் பெரியார் காலத்தில் இருந்தனர் என்றால், அவர்கள் மேற்கண்ட பணிகளைச் செய்து சாதிக்க வேண்டியதுதானே! ஏன் பெரியாரைக் குறை சொல்ல வேண்டும். பெரியார் தன் முதன்மை இலக்கான ஆரியப் பார்ப்பன எதிர்ப்பை, இனமான காப்பை, மூடநம்பிக்கை ஒழிப்பை, இட ஒதுக்கீட்டு கோரிக்கையை, பண்பாட்டு மீட்பை, பெண் உரிமை போராட்டங்களை, இவற்றிற்கான பரப்புரைகளை மிகச் சரியாக செய்தார்.
மேற்கண்ட இரண்டில் அவர் அதிக ஆர்வம் காட்ட வில்லை. குரல் கொடுத்தார். அவற்றைத் தன் முதன்மைப் பணியாகக் கொள்ளவில்லை. அப்படியிருக்க அவற்றை மற்றவர்கள் முதன்மைப் பணியாக எடுத்துப் போராடி வெற்றி கண்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால், அவ்வாறு செய்ய வில்லை, பெரியார் செய்யவில்லையென்றே குற்றம் சொல்கிறார் என்றால் என்ன பொருள், தமிழர்க்கு தலைமை தாங்கவும், தமிழர்க்கான சிக்கல்களைத் தீர்க்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் பெரியாரை விட்டால் வேறு யாரும் இல்லை என்பதுதானே அன்றைய நிலை. அதை குணாவும் ஏற்கிறார் என்றுதானே பொருள்?
அப்படியிருக்க, எந்த அடிப்படையில் பெரியாரைக் குறை சொல்கிறார்? மேல்மேயும் தமிழர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்!
நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment