நுழைவுத் தேர்வு குறித்த சில விளக்கங்கள்
1. நுழைவுத் தேர்வினால் யாருக்கு பாதிப்பு?
கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கிறது இந்த நுழைவுத் தேர்வு! நகர்ப் புற பள்ளிகள் மற்றும் கிராமப்புற பள்ளிகளின் தரமும், கட்டமைப்பும் சமாக இல்லாத நிலையில், அனைவருக்கும் பொதுவான நுழைவுத்தேர்வு என்பது எப்படிச் சரியாகும்?
நியாயமாகும்?
பெருநகரங்களில்,
நகர்புறங்களில் உள்ள பள்ளிகள், அவற்றில் உள்ள வசதிகள், கிராமப்புறப் பள்ளிகளில் உண்டா? அங்கு போதிய ஆசிரியர்கள்,
கரும்பலகைக் கூட இல்லாத நிலை உண்டே! இந்த ஏற்றத் தாழ்வைச் சமன்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் முயற்சிகள் என்ன? சமநிலை உருவாக்கிய பின் அல்லவா பொது நுழைவுத் தேர்வை பற்றிச் சிந்திக்க வேண்டும். மக்களில் வருணபேதம் உள்ளதுபோல் நகர, கிராம பேதங்களும் உண்டு. கிராமம் என்றால் அதற்குப் பட்டிக்காடு என்று பெயர் கொடுத்துள்ளனர். அங்கு சாலை இல்லை, விளக்கு வெளிச்சம் இல்லை, மருத்துவமனை இல்லை, நூலகம் இல்லை என்று இல்லை போன்ற அவலநிலை தானே உள்ளது. நகரம் என்பது இதற்கு நேர்மாறானதாக அல்லவா இருக்கிறது.
இவற்றைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் தானே அது மக்கள் நல அரசாக இருக்க முடியும்.?
கிராமப்புற மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதுவதில் பல இடர்பாடுகள் உள்ளன. நகர்புறங்களில் தெருவிற்கு தெரு பயிற்சி மய்யங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் இது கிடையாது. பள்ளிகளில் ஆய்வகங்கள், நூலகங்கள் கூட இல்லை. அவர்கள் தங்கள் பள்ளித் தேர்வை முடித்து விட்டு வந்துதான் நகரத்தில் மிகக் குறுகிய நாட்கள் தங்கிப் படித்துப் பயிற்சி பெறவேண்டும்.
பெரும் பொருளாதார வசதி வாய்ப்புள்ளவர்களுக்குதான் இது சாத்தியம். ஏழை மாணவர்களின் நிலை என்னாவது? அவர்களின் மருத்துவர் கனவில் மண்விழுமே!
ஆனால், நகர்ப்புற மாணவர்களுக்கு அப்படியில்லை அவர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆண்டு முழுவதும் அதற்கான பயிற்சிகளை பகுதி நேரமாகப் பெறமுடியும். இவர்கள் இருவரையும் ஒரே களத்தில் நிறுத்துவது எப்படி நியாயமானதாகும்.?
இதைக்குறிப்பிட்டுத் தான் 2004-2005 ஆம் கல்வி ஆண்டின் புள்ளிவிவரத்தைக் கொடுத்து திமுக அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.
அந்த விவரம்
2004-2005 ஆம் ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் - 5,00,000 பேர்
இதில் கிராமப்புற மாணவர்கள் மொத்தம் -
2,10,000 பேர்
மொத்தம் இருந்த மருத்துவ இடங்கள் -
1,125 இடங்கள்
இதில் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைத்த இடங்கள் (நுழைவுத்
தேர்வுக்காரணமாக) -
227 மட்டுமே
இதனை ஏற்றுதான் சென்னை உயர்நீதி மன்றம் நுழைவுத் தேர்வு ரத்தை உறுதிப்படுத்தியது.
2. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அரசுப் பள்ளிகளில் படிப்போருக்கு பலன் ஏற்படவில்லை.
கிராமப்புறப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டினாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பலன் இல்லை எனப்படுகிறதே?
பதில்: கிராமப்புற மாணவர்களுக்காக திமுக அரசு வழங்கிய 15ரூ இட ஒதுக்கீடு,
அடுத்து
2001-இல் வந்த அ.தி.மு.க.
அரசால்
25 -ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், இதனை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும்,
இப்படி வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டினாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறவில்லை;
தனியார் பள்ளிகள் கிராமப்புறங்களில் தொடங்கப்பட்டு அதில் பயின்ற மாணவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை அனுபவித்தனர் என்பதும் ஒரு தரப்பாரின் குறை.
நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று கூறப்படுவதன் காரணங்களை ஆராய்ந்தால், இக் குறைக்கும் நுழைவுத் தேர்வுக்கும் தொடர்பில்லை என்பது விளங்கும்.
வழக்கமான பள்ளித் தேர்வுகளுக்குத் தயாராகி,
எழுதி முடித்தபின், அதே பாடத்திட்டத்தின் கேள்விகளுக்கு மீண்டும் ஒரு தேர்வு எதற்கு என்பது தான் நுழைவுத் தேர்வு எதிர்ப்பின் அடிப்படை.
அதாவது பள்ளி வசதிகளில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும்,
வழக்கமான பள்ளிக்கல்வித் துறையின் தேர்வுகளுக்குத் தயாராவதில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றிடையே பெரிய வேறுபாடுகள் ஏற்படுவதில்லை.
அதனால் தான் உயர் மதிப்பெண்கள் பெறக் கூடியவர்களின் பட்டியலில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நிரம்பியிருக்கிறார்கள்.
ஆனால், நுழைவுத் தேர்வைப் பொறுத்தவரை அதற்கென வழங்கப்படும் சிறப்புப் பயிற்சிகளைப் பெறும் வாய்ப்பு மாநகர, பெருநகர மாணவர்களுக்குப் பெருமளவில் கிடைக்கிறது என்பதும், கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதும், நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிலெடுக்கப்படுவதால் அவர்களின் மருத்துவக் கல்விக் கனவு தடைப்படுகிறது என்பதும்தான் கிராமப்புறப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு என்ற அடிப்படையில் நுழைவுத் தேர்வு எதிர்க்கப்பட்டதன் காரணம்.
ஜாதிவாரியாக வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது என்பதற்கான இடஒதுக்கீடும்,
பொருளாதார வாய்ப்புகள் இன்மையில் மேற்கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதற்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்களும் எப்படி அடிப்படை அளவில் வேறுவேறானதோ, அப்படியே வாழிட அடிப்படையில் வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதும்,
அது ரத்து செய்யப்பட்ட பின், அதை ஈடுகட்ட நீண்ட காலமாக பாதிப்பை ஏற்படுத்திவந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்த நடவடிக்கையுமாகும். இதில் அரசுப் பள்ளி - தனியார் பள்ளி என்ற பிரிவினை வேறு ஒன்றாகும்.
இன்று தனியார் பள்ளிகளில் வாய்ப்பற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்க விரும்புகின்றனர். அரசுப் பள்ளிகளைத் தாண்டியும், ஏழை-எளிய மக்களும், ஒடுக்கப்பட்ட,
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களும் தம் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதும் கண்கூடு.
25 சதவிதம் அப்பகுதி மாணவர்களுக்கு கட்டணமின்றி அப்பள்ளிகளில் அளிக்கப்பட வேண்டுமென்பது அரசு ஆணை.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்ற குரலின் அடிப்படை என்னவெனில், நன்கு படிக்கக் கூடிய பிற்படுத்தப்பட்ட,
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் உள்ள கற்றல் வாய்ப்புகளில் வசதிக் குறைவு காரணமாக அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே!
இதில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு உண்மை இருக்கிறது.
அரசுப் பள்ளிகளிலோ, அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ பத்தாம் வகுப்பு வரை பயின்று உயர் மதிப்பெண் பெறுவோர், மாவட்ட அளவில் பரிசுகள் பெறுவோருக்கு,
தனியார் பள்ளிகள் தங்கள் பெருமைக்காக மேலும் வாய்ப்புகளை வழங்கி, கல்விக் கட்டணங்கள் இன்றி 11,
12-ஆம் வகுப்புகளில் சேர்த்துக் கொள்வது இன்று பரவலான நடைமுறையாகும்.
இதனையே ஒரு கட்டத்தில் அரசும் செய்தது. மாநில,
மாவட்ட அளவில் முதலிடம் பெறக்கூடிய சில மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளிலும் படிப்பதற்கான வாய்ப்பை அரசே பரிசாகவும் வழங்கியது.
இவற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தால், பத்தாம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் கூட 12-ஆம் வகுப்புத் தேர்வின் அடிப்படையில் தனியார் பள்ளி மாணவர்களாகக் கணக்கிலெடுக்கப்படுவர். எனவே இதனை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, தனியார் பள்ளிகளில் பயில்வோர் அனைவரும் வசதி வாய்த்தவர்கள் என்று அனைவரையும் ஒரே பட்டியலில் அடைத்துவிட முடியாது. அரசுப்பள்ளிகளிலிருந்து,
தனியாருக்கு மாறியவர்கள் எத்தனை பேர்? நீட் சி.பி.எஸ்.இ கல்வி அடிப்படையில் என்றால், சி.பி.எஸ்.இ பயிலும் மாணவர்கள் எத்தனைப்பேர் சி.பி.எஸ்.இ முறையில் படிக்காத மாணவர்கள் எத்தனை இலட்சம்? சில ஆயிரங்களுக்காக பல இலட்சம் மாணவர்கள் பலியாக வேண்டுமா? பேர்,
தனியார் பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வசதி வாய்ப்பற்றவர்கள் எத்தனை பேர் என்ற கணக்குகளையெல்லாம் எடுக்கமாலேயே வாதத்தை வைப்பது நியாயமில்லை.
மற்றொன்று, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்குவதற்கு நீட் போன்று நுழைவுத் தேர்வுகள் ஒரு போதும் பயன்படாது.
3. தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பாடங்களைப் படிக்காமலேயே,
12-ஆம் வகுப்புப் பாடங்களை மட்டும் இரண்டு ஆண்டுகளிலும் நடத்துவதால்,
12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தனியார் பள்ளி மாணவர்களே அதிக அளவில் மருத்துவக் கல்வியில் இடம்பிடிக்கின்றனர். இந்நிலையை மாற்ற, நீட் நுழைவுத் தேர்வு பயன்படும் என்கிறார்களே?
தனியார் பள்ளிகளில் தவறான கல்வி முறையைத் தடுக்க நீட் நுழைவுத் தேர்வு பயன்படாது;
அமையாது.
தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்லூரி நுழைவு விகிதத்தை ஒப்பிட்டு சில புள்ளி விவரங்களையும் வழங்கி இத்தகைய கருத்தை சிலர் பரப்புகிறார்கள்.
எந்த நுழைவுத் தேர்வையும்,
தனிப் பயிற்சிகள் இன்றி வெல்ல முடியாது. எது தேவையோ அதைத் திணிக்க, அதை வைத்து காசு பார்க்க தனியார் கல்வி நிறுவனங்கள் தயாராகவே இருக்கின்றன என்பதை ஊடங்களில் தொடர்ந்து வெளிவரும் நீட் நுழைவுத் தேர்வுத் தனிப் பயிற்சிக்காக வெளிவரும் பெரும் செலவிலான விளம்பரங்களே உறுதிப்படுத்தும். 11-ஆம் வகுப்பு அடிப்படைப் பாடங்களைப் படிக்காமல்,
12-ஆம் வகுப்பு தேற முடியாது என்ற நிலையை எட்ட எடுக்கவேண்டிய முயற்சிகள் வேறானவை. 11-ஆம் வகுப்பிலும் பொதுத் தேர்வு முறையைக் கொண்டுவருதல்,
அதனையும்
12-ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களோடு இணைத்துப் பரிசீலித்தல் போன்ற வேறு சாத்தியங்களை கல்வியாளர்களைக் கொண்டு சிந்தித்து உருவாக்க வேண்டுமே தவிர, நுழைவுத் தேர்வால் ஒருபோதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பலன் கிடையாது. இப்போது நுழையும் மாணவர்களையும் வாசலிலேயே மறித்து வெளியேற்றும் என்பதுதான் உண்மை.
4. பாடத்திட்டம் ஒன்றில்லை ; ஆனால் நுழைவுத் தேர்வு ஒன்றா?
இந்தியாவில் பல்வேறு கல்வித் திட்ட முறைகள் நடைமுறையில் உள்ளன. மாநில பாடத்திட்டங்கள்,
மெட்ரிக்,
சி.பி.எஸ்.இ,
ஆங்கிலோ இந்தியன் முறை என்று பல்வேறு பாடத் திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பது எப்படி சரியானதாகவும் நேர்மையானதாகவும் இருக்க முடியும்?
நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் அமைந்திருப்பதால்,
அத்தகைய கல்வித் திட்டத்தில் படித்தவர்கள் தானே அதிகப் பலன் பெறுவார்கள். மற்றவர் நிலை என்ன? கிராமப் புற மாணவர்களின்
நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா?
5. சி.பி.எஸ்.இ-யை விட தமிழ்நாட்டின் சமச்சீர் கல்வி - தரம் குறைந்தது. கல்வித் தரத்தை உயர்த்தாமல் நுழைவுத்தேர்வை எதிர்ப்பது சரியில்லை.
பிற மத்திய அரசுத் தேர்வுகளுக்கும் கல்வித் தரம் இடையூறாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?
பதில்: சமச்சீர் கல்வி தரமானதல்ல;
சி.பி.எஸ்.இ தரமானது என்று பலரும் தெரியாமலோ,
உள்நோக்கத்துடனோ சொல்லக் கேட்கிறோம்.
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இருந்த காலத்திலும் சி.பி.எஸ்.இ புழக்கத்தில் இருந்தது. ஆனால் அப்போது மெட்ரிக்குலேசனை விட சி.பி.எஸ்.இ உயர்ந்தது என்று சொல்லி தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ நடத்தச் செல்லவில்லை;
அவர்கள் மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தைத் தான் நடத்தினார்கள்.
அரசுப்பள்ளிகளின் பாடத்திட்டத்தைவிட மேம்பட்ட ஒன்றை தாங்கள் வழங்குவதாக மக்களை நம்ப வைக்க தனியார் பள்ளிகளும்,
கல்வி வணிகர்களும், தரகர்களும் உருவாக்கும் மாயையே ஒரு பாடத்திட்டத்தைவிட மற்றொன்று உயர்ந்தது என்னும் பிம்பமாகும். உண்மையில் மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தை விட சமச்சீர் கல்வியின் பாடத்திட்டம் உயர்ந்தது என்பதை சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்காக
2011-இல் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைத்த குழுவின் உரையாடல்களிலேயே பதிவாகியிருக்கிறது.
இதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுமிருக்கிறது.
ஒரு நாட்டின் பல்வேறு மூலையில் வசிக்கும் மக்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்பதை ஏற்கமுடியாது என்கிறார்கள் கல்வியாளர்கள். சமச்சீர்கல்வி மாணவர்களின் வயதுக்கும், அறிவுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீதிமன்றமும் சுட்டிக் காட்டியுள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் பாடப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு
7 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அவை இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ப புதுப்பிக்கப்பட (Update)
வேண்டுமே ஒழிய, தரமுயர்த்தப்படவேண்டும் என்று சொல்வது சரியானதல்ல.
15 வயது மாணவனுக்கு 19 வயதுக்குரிய பாடங்களைத் திணிப்பதை சரியான கல்வி என்று எவரும் ஒப்பமாட்டார்கள்.
6. எந்த மொழியில் நுழைவுத் தேர்வு?
பல்வேறு மொழிகளை பயிற்று மொழிகளாகக் கொண்ட இந்தியக் கல்வி முறைகளில்,
எந்த மொழியில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்? இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடந்தாலும் இது இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் பயிற்று மொழியான ஆங்கிலத்தில் எழுதும்போது ஒரு (இந்தி)
மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் சொந்த தாய் மொழியில் எழுத வாய்ப்பளிப்பது ஒரு சலுகை அல்லவா?
தமிழில் எழுதலாம் என்று காலம் தாழ்ந்த அறிவிப்பு ஒன்று இருந்தாலும்,
அதனால் தமிழர்களுக்குப் பயன் என்ன?
தமிழில் அதற்கான நூல்கள் இல்லாத நிலையில் வினாத்தாள் மட்டும் தாய்மொழியில் இருப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
இது ஒரு ஏமாற்று வேலை அல்லவா?
7. நுழைவுத் தேர்வுதான் தகுதிக்கு அளவுகோலா?
சமமற்ற கல்வி பயிலும் நிலையில், நுழைவுத் தேர்வு நடத்தினால் நியாயமான போட்டி ஏற்படாது என்பதை மேலே கண்டோம். அதுமட்டுமன்றி, நுழைவுத் தேர்வு
- தகுதிக்கான அளவுகோல் அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா சம்பத் குமார் ஆகியோர் கருத்து முக்கியமானது.
அவர்கள் 27.04.2007 அன்று வழங்கிய தங்கள் தீர்ப்பில் நுழைவுத் தேர்வில் சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட கோன் பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சி போல அனுமானத்தின் அடிப்படையில் விடையை டிக் செய்யும் வாய்ப்புள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள்
200க்கு 190க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்களை பெற்றுதானே சேர்க்கப்படுகிறார்கள் இந்த தகுதி போதாதா?
நுழைவுத் தேர்வு இல்லாவிட்டால் தகுதியற்றவர்கள் மருத்துவராகி விடுகிறார்கள் என்னும் மூடக் கருத்தினை பலர் கூறுகின்றனர்.
இது மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வுதானே தவிர, மருத்துவர் பணிக்கான தேர்வு அல்ல.
டெல்லி பல்கலைக் கழகத்திலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோரின் கருத்து முக்கியமானது.
அந்நாள்களில் தேர்ச்சி பெற குறைந்த மதிப்பெண் 35. டாக்டர் அம்பேத்கர்
37 மதிப்பெண் பெற்றிருந்தார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கு ஒரு அம்பேத்கரும், அருமையான அரசமைப்புச் சட்டமும் கிடைத்திருக்குமா?
என்பது அவர்களின் கேள்வி.
8. நுழைவுத் தேர்வு எழுத தனிப் பயிற்சி அவசியமில்லை, நுழைவுத் தேர்வு எழுத பாடத்திட்டம் ஒரு பிரச்சினையில்லை என்கிறார்களே?
மருத்துவர்கள் தரமானவர்களா என்று சோதித்துத் தேர்வு வைத்துத் தானே மருத்துவக் கல்லூரிகள் தேர்வுகள் வைக்கின்றன. கல்லூரிக்கு நுழையும் முன்னே மருத்துவம் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்களா இவர்கள். மாநில அரசு நடத்தும் தேர்வில்
195-லிருந்து 199 விழுக்காடு கட்-ஆப் எடுப்பவர்கள் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய முடியும் எனும்போது,
அவர்களால் நீட் நுழைவுத் தேர்வின் அதிகபட்ச தகுதி அளவான 50ரூ மதிப்பெண்கள் எடுக்க முடியாதா? வெகு எளிதில் முடியும்... அது அவர்கள் படித்த பாடத் திட்டத்தின் அடிப்படையில் இருந்தால்!
இங்கு பாடத்திட்டமே வேறு என்பதை மறுக்கமுடியுமா? ஒரு வேளை சமச்சீர் கல்வித் திட்டத்தை விட சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உயர்ந்தது என்றே வைத்துக் கொண்டால், அவர்கள் சொல்லும் தரம் குறைந்த சமச்சீர் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தினால் சி.பி.எஸ்.இ மாணவர்களால் வெகு எளிதில் மதிப்பெண் வாங்கிவிட முடியுமா? முடியாதே!
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவரால் கூட, எந்த தனிப் பயிற்சியும் இல்லாமல் நீட் நுழைவுத் தேர்வின் தரவரிசைப் பட்டியலில் முதல் 1000
இடங்களுக்குள் வரவே முடியாது என்கிறார்கள் கல்வியாளர்கள்.
காரணம்,
பாடத்திட்டத்தைத் தாண்டிய தனிப்பயிற்சி
- நுழைவுத் தேர்வுகளுக்கு அவசியமாகிறது.
அதற்கான கட்டணம் குறுகிய கால வகுப்புகளுக்கே குறைந்தது ரூ.60000 ஆகும்.
தொடர்ந்து நடக்கும் வகுப்புகளுக்கு ரூ.4.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது பணக்கார, மாநகரவாசிகளுக்கே சாத்தியமானது.
ஏழை,
எளிய,
ஒடுக்கப்பட்ட,
நடுத்தரவர்க்க,
கிராமப்புற மாணவர்களால் நீட் எழுத முடியுமே தவிர, அதில் வெல்ல அவசியப்படும் இத்தகைய பயிற்சி வகுப்புகளில் ஒருபோதும் சேர முடியாது. நுழைவுக் கட்டணத்தை
(நுழைவுத் தேர்வு தனிப்பயிற்சிக்கான செலவு) உயர்த்திவிட்டு, எல்லோரும் வர முடியும் என்று சொல்வது பித்தலாட்டமே!
மருத்துவக் கல்விக்குச் செல்லலாம் என்ற எண்ணமே இதனால் வெகுமக்களுக்கு இல்லாமலாக்கப்படும், படவேண்டும் என்பதே மத்திய பா.ஜ.க. அரசின் நோக்கம்.
9. நுழைவுத் தேர்வில் தவறே நடக்காதா?
நுழைவுத் தேர்வில் தவறே நடக்க இடம் இல்லை என்பதும் உண்மைக்கு மாறானது.
மருத்துவ முதுநிலைப் பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில்
45 டாக்டர்கள் உள்பட 52 பேர் மீது சி.பி.அய் வழக்கு தொடர்ந்ததா?
இல்லையா?
இது குறித்து
21.03.2007 தேதியிட்ட தினமணி தரும் செய்தி :
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 45 டாக்டர்கள் உட்பட
52 பேருக்கு குற்றப் பத்திரிகையின் நகல்களை சென்னை சி.பி.அய் சிறப்பு கோர்ட் வழங்கியது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு நடந்தது. தமிழகத்திலிருந்து
நான்காயிரத்து 188 பேர் தேர்வு எழுதினர். நுழைவுத் தேர்வின் போது முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
கேள்வித் தாளை பென் ஸ்கேனர் மூலம் அனுப்பி ளுஆளு மூலம் விடைகளைப் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவத்தில் டாக்டர் பிரதீப் குமார் உள்ளிட்ட 45 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 52 பேர் மீது சென்னை சி.பி.அய், சிறப்புக் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று இவ்வழக்கு சி.பி.அய் சிறப்புக் கோர்ட் நீதிபதி வேலு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல்கள் வழங்கப்பட்டன. ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. (தினமணி - 21.03.2007)
இதிலிருந்து என்ன தெரிகிறது? தகுதி திறமையை நுழைவுத் தேர்வு சரியாக நிலை நிறுத்தும் என்று நம்புவது தப்பு என்பதல்லவா?
10. நீட் நுழைவுத்தேர்வு அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான பொதுத் தேர்வு. மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளிலும் இதன் மூலம் ஒற்றைத் தேர்வில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டே, அதை ஏன் எதிர்க்க வேண்டும்?
இதில் முழு உண்மை இல்லை.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி சண்டிகரில் உள்ள பி.ஜி.அய் மற்றும் இராணுவக் கல்லூரிகள் போன்ற கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு பொருந்தாது.
அப்படியென்றால்,
நீட் என்பது தகுதி குறைந்த நுழைவுத் தேர்வா? எல்லோருக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு என்று பசப்புவோர் ஏன் மேற்கண்ட சில கல்லூரிகளுக்கு மட்டும் தனியாக நுழைவுத் தேர்வு வைக்கின்றனர்.
ஏனெனில்,
அனைவருக்கும் பொது என்பதில் நீட் ஆதரவாளர்களுக்கு உடன்பாடில்லை. எல்லோரும் ஏ கிளாஸ் தான் என்று சொன்னாலும்,
அதிலும் ஏ-1, ஏ-2 என்று ஏதேனும் ஒரு பிரிவினையை உருவாக்கவே செய்வார்கள்.
ஆக,
பொதுவான நுழைவுத் தேர்வு என்பது ஏமாற்று வித்தையே!
11. நீட் தேர்வு தனியார் பள்ளிகளின், கல்லூரிகளின் கொட்டத்தை அடக்கும்; கொள்ளையைத் தடுக்கும் என்பதும், பணம் வாங்கிவிட்டு சீட் விற்கும் தனியார் கல்லூரிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றெல்லாம் கூறுகிறார்களே? அப்படியானால் அது வரவேற்கத்தக்கது தானே?
நீட் தேர்வால் தனியார் கல்வி நிறுவனங்களும், கல்வி வணிகமும் பாதிக்கப்படுமேயானால், முதல் பெரும் எதிர்ப்புக் குரல் அவர்களிடமிருந்தே வந்திருக்கும். வெறும் பள்ளிக் கல்வியில் சமச்சீர் பாடத்தைக் கொண்டு வந்ததற்கே தனியார் பள்ளிகள் எப்படி குதித்தன என்பதையும்,
இப்போது நீட் தேர்வுக்கு தனியார் பள்ளிகள் தரும் ஆதரவையும்,
அதற்கான தனிப்பயிற்சிக்குத் தரும் விளம்பரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நீட் தேர்வால் பலனடையப்போவது யார் என்பது தெளிவாகத் தெரியும். நீட் தேர்வை முன்னிறுத்தி கல்லா கட்ட அவர்கள் தயாராகிவிட்டார்கள். பலியாடுகள் பொதுமக்கள் தான்.
தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை, தங்கள் வணிகத்தை இன்னும் வரைமுறைப்படுத்தி,
தாங்கள் சுத்தமானவர்கள் என்று சட்டப்பூர்வமாக வெள்ளையடித்துக் கொள்ளவும் பயன்படும்.
யார் சீட் வாங்குகிறார்கள் என்பது தனியார் கல்லூரிகளுக்குக் கவலையில்லை.
ஏ இல்லையென்றால் பி. அவ்வளவு தான் அவர்களுக்கு!
நன்கொடைகள் என்ற பெயரில் பெறப்படும் பணமோ, கல்வி வணிகமோ ஒருபோதும் இதனால் குறைந்துவிடப் போவதில்லை. அதனால் தான் தனியார் கல்வி முதலாளிகளும், கல்வித் தரகர்களும் வரிந்துகட்டி நீட் தேர்வை வரவேற்கிறார்கள்.
12. நீட் உண்மையில் தகுதியானவர்களுக்கு மட்டும் வாய்ப்பை உருவாக்குமா? நன்றாகப் படிக்கக் கூடிய மாணவனை விட, காசு இருப்பவன் கல்வி பெறலாம் என்ற நிலையை மாற்றுமா?
நீட் (National Eligibility
cum Entrance Test) என்பது நுழைவுத் தேர்வு மட்டுமல்ல,
தகுதித் தேர்வும் ஆகும். இன்னும் சரியாகச் சொன்னால், இது போட்டித் தேர்வல்ல, தகுதித் தேர்வு. அதாவது இந்திய அளவில் 10000 மருத்துவக் கல்வி இடங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீட் தேர்வில் முதல்
10000 இடங்களைப் பெற்றவர்களுக்குத் தான் சீட் என்றால் அது போட்டித் தேர்வு. ஆனால்,
நீட் தேர்வில் 50ரூ எடுத்தால் நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். அதை வைத்துக் கொண்டு நீங்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கிக் கொள்ளலாம் என்றால் என்ன பொருள்? தனியார் கல்லூரிகளில் சீட் வியாபாரம் நடக்க வசதி செய்து தரப்படுகிறது என்று பொருள். இன்னும் தெளிவாகச் சொன்னால், 98 மதிப்பெண் எடுத்த ஒருவனை விட, 96 மதிப்பெண் எடுத்து இட ஒதுக்கீட்டில் ஒருவன் நுழைவது அநீதி என்றெல்லாம் கொதித்து, காசு கொடுத்து தகுதி குறைந்த ஒருவன் இடம் வாங்குவதா என்று ஒப்புக்குச் சொல்வார்களே இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள்,
அதையாவது மாற்றுமா? நிச்சயம் இல்லை.
அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும்,
தனியார் கல்லூரிகளில்
அரசு ஒதுக்கீடும் 96 மதிப்பெண்களோடு முடிந்துவிட்டால்,
தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் நுழைவுத் தேர்வில்
95 மதிப்பெண் பெற்ற மாணவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, 50ரூ மதிப்பெண் பெற்ற மாணவன் தனியார் கல்லூரியில் பணம் கொடுத்து இடம் வாங்குவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தவே தகுதி (நுடபைடைவைல) என்ற சொல்லைச் சேர்த்திருக்கிறார்களே தவிர,
அவர்கள் சொல்லும் உயர் மதிப்பெண் பெற்று தகுதியுடையோருக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்பதற்காக அல்ல.
13. மாநில உரிமையைப் பறிக்கலாமா?
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு என்பதே அறவே இல்லாதபோது,
அதற்கான சட்டமும், நீதிமன்றத் தீர்ப்பும் இருக்கும்போது மத்திய அரசு மாநில உரிமையில் அத்துமீறி நுழையலாமா? இது மாநில உரிமையில் தலையிடும் ஆதிக்க எண்ணமும், அக்கிரமமும் என்பதோடு மாநில சுயாட்சிக்கு உரிமைக்கும் எதிரானதும் அல்லவா?
நெருக்கடி நிலை காலத்தில் 1976 இல் கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்ற அபகரிப்பால், இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றுதானே மாநில அரசுகள் கருத முடியும். மறுபடியும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு செல்வதுதானே ஒரே தீர்வு!
---------------
ஒன்றிணைந்து ஒழித்துக் கட்டுவோம்
சமூக நீதித் திசையில் ஒவ்வொரு அங்குலமாக தடைக் கற்களைத் தாண்டித் தாண்டித் தானே வரவேண்டியுள்ளது. அப்படிப் பெற்றாலும் குறுக்கு வழியில் பாய்ந்து அதனைக் குலைப்பதுதான் உயர்ஜாதி மேல் தட்டுக்காரர்களின் சூழ்ச்சிச் செயலாகும்.
இட ஒதுக்கீட்டை நேர்முகமாக ஒழிக்க முடியாது என்பதை தெளிவாக, திட்டவட்டமாக அவர்கள் தெரிந்து கொண்ட நிலையில், அதற்கு குந்தகம் ஏற்படும் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து, அவற்றையெல்லாம் இலைமறை காயாகத் திணித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு வந்ததுதான் என்று கருதி பிற்படுத்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களின் பிரச்சினை என்று தாழ்த்தப்பட்டவர்களோ இருந்துவிடக் கூடாது. இது ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் பாதிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்!
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், சமூக நீதியாளர்கள் ஒன்று திரண்டு, நாம் போராடிப் போராடிப் பெற்ற இந்த நல்வாய்ப்பை பாதுகாத்துக் கொள்ளவும், இதனை ஒழித்துக் கட்டத் துடித்துக் கொண்டிருக்கும் முயற்சிகளை முறியடிக்கவும், நுழைவுத் தேர்வை உள்ளே நுழைய விடாமல் நிரந்தரமாக தடுத்து நிறுத்தவும், ஒன்றுபட்டு உடனடியாகப் போராட வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்படும்வரை தொடர்ந்து போராட வேண்டும். இது இன்றை நிலையில் கட்டாயக் கடமையாகும்; நம் தலைமுறையில் எதிர் காலத்தைக் காக்கும் பணியாகும்!
தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு நிலையை உருவாக்கி இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கும் வகையில் நீட் தேர்வை நிரந்தரமாக இந்தியா முழுமைக்கும் நீக்கவும் நாம் வழிகாட்ட வேண்டியது நம் கடமையாகும்.
எனவே, எழுதுவோம்!
ஒன்று திரள்வோம்! நீட் தேர்வு நீங்கும் வரைப் போராடுவோம் வாரீர்! வாரீர்!
---------------
இணைப்பு - 1:
தமிழ்நாட்டில் எம்.சி.எச்., டி.எம். போன்ற தனிச் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களை அகில இந்தியாவுக்குத்
தாரை வார்ப்பதா?
இடஒதுக்கீட்டையும் மாநில உரிமைகளையும் ஒழித்தே தீருவது என்பதில் இன்றைய மத்திய அரசும் - உச்சநீதிமன்றமும் ஒற்றைக் காலில் நிற்பதாகவே தெரிகிறது.
மாநிலத் தொகுப்பிலிருந்து எம்.பி.பி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு எடுத்துச் சென்று மாநிலங்களின் தலையில் கை வைத்து வந்ததையே கடுமையாக எதிர்த்து வருகிறோம். அதற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் போராடி வருகிறோம்.
இந்த நிலையில் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதைபோல, படிப்படியாக மாநில அரசிடம் இருந்து பறித்து இளங்கலையில் 15 விழுக்காடு, முதுகலையில் 50 விழுக்காடு என்று மத்திய அரசிடம் கொண்டு சென்றதன் தொடர்ச்சியாக தற்போது இதுவரை தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் உயர் மருத்துவப் படிப்பில் (M.Ch.,D.M.,) தமிழ்நாடு
அளவில் நுழைவுத் தேர்வு வைத்துத் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். எம்.சி.எச்., டி.எம். போன்ற சிறப்பு மருத்துவத்தில் முறையே 108 இடங்களும், 81 இடங்களும் உள்ளன. தமிழ்நாடு அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன்மீது உயர் ஜாதி வட்டாரங்கள், இடஒதுக்கீடு - சமூகநீதி எதிர்ப்பாளர்களின் கண்கள் உறுத்திக் கொண்டுள்ளன. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழ்நாடு,
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மாநில அளவில் இருந்த நடைமுறைக்கு எதிராக - அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்புக் கூறியுள்ளது.
இது மிகவும் கண்டிக்கப்படத்தக்கதாகும். இந்திய அளவில் 10 மாநிலங்களில் - பி.ஜே.பி ஆளும் மத்தியப் பிரதேசம் உள்பட இந்தச் சிறப்பு மருத்துவக் கல்வி கிடையாது.
இந்த நிலையில் மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியை ஒதுக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க
வேண்டும் என்ற நன்னோக்கத்தில் இத்தகைய மருத்துவப் பிரிவுகளை உண்டாக்கி, சிறப்பு மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை, ஏற்பாட்டைத் தடை செய்வது எந்த வகையில் நியாயமாகும்?
நான் உமி கொண்டு வருகிறேன்; நீ அரிசி கொண்டு வா ஊதிஊதி சாப்பிடலாம் என்கிற நயவஞ்சகத்தை முறியடித்தே தீர வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி மத்திய அரசுக்கு உடனடியாக கடிதம் எழுதி, தனது எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு சமூகநீதி மண் என்பதை நிரூபிக்கும் கடமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு. சமூகநீதியாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை பெரிய அளவில் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது அவசியமாகும்.
கி.வீரமணி தலைவர், திராவிடர்
கழகம்
(3-7-2016)
---------------
இணைப்பு - 2:
நீட் வேண்டாம் என்று முடிவு செய்ய
தமிழக அரசுக்கே அதிகாரம் உண்டு
முனைவர் நீதிபதி ஏ.கே. ராஜன் கருத்து
நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று முடிவு செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே. ராஜன் கருத்து தெரிவிக்கிறார்.
மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 என்பது, கவுன்சிலை மறுசீரமைக்கவும், மருத்துவர்களின் பெயர்களை பதிவு செய்து, அவர்தம்
தொழில் நடத்தையை ஒழுங்குபடுத்தவும் மட்டுமே வகை செய்கிறது.
ஆனால், அரசமைப்புச் சட்டப்படி மாநில பட்டியலில் (State List) பதிவு 32இன் படி, பல்கலைக்கழகங்களை நிறுவ, நிர்வகிக்க அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தால் அது மாநில உரிமையில் தலையிடுவதாக அமையும்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை நிர்வகிக்க அமைக்கப்பட்டது.
அந்தப் பல்கலைக் கழகத்தின் சட்டப்பிரிவு 35, 36-இன்படி,
பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் இயங்குகிறது. இந்த நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று இந்திய மருத்துவக்கவுன்சில் உத்தரவிட முடியாது. 42ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி ,கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டாலும், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டுமே தொழில்நுட்ப, மருத்துவ கல்வி தொடர்பான சட்டமியற்றும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. ஆனால், அரசமைப்புச் சட்டத்தில், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. பதிவு 25 பட்டியல் III-மற்றும் பதிவுகள் 63, 64, 65 மற்றும் 66, பட்டியல்-ஐ ஆகியவை தெளிவுபடுத்துகின்றன.
*
1976ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த நெருக்கடி காலத்தில் 42ஆம் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், மூன்றாம் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டதுதான் பதிவு 25. அதற்கு முன்பு, கல்வி என்பது, மாநில உரிமைக்கு உட்பட்டது என இரண்டாம் பட்டியலில் பதிவு எண் 11இல் இருந்தது.
*
பட்டியல் I-இன் (Union List) பதிவு 44இல் வணிக நிறுவனங்களைப் பதிவு செய்வது, கட்டுப்பாடு செலுத்துவது, பதிவை ரத்து செய்வது ஆகியவை பற்றி சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியல் II-இன் பதிவு 32இல் பட்டியல் I-இல் குறிப்பிடப்படாத வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களைப் பதிவு செய்வது, கட்டுப்பாடு செலுத்துவது, பதிவை ரத்து செய்வது ஆகியவை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியல் I-இல் பதிவு 44 அய்யும், பட்டியல் II-இல் 32ஆம் பதிவையும் பார்க்கும்போது, பல்கலைக் கழகங்கள் பற்றி சட்டமியற்றும் அதிகாரம் மாநில சட்டமன்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது; இந்த அதிகாரம் குறிப்பாக மத்திய அரசுக்கு அளிக்கப்படவில்லை என்பதும் தெளிவாக தெரியும்.
42ஆம் அரசமைப்பு சட்டத் திருத்தத்தின்படி இரண்டாம் பட்டியலில் இருந்து கல்வி மூன்றாம் பட்டியலுக்கு மாற்றபட்டதனால், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் இரண்டுமே தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட கல்வி தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றுள்ளன. ஆனால், இந்த பொருள் பற்றி சட்டமியற்றும் மாநில அரசுகளின் அதிகாரம் பட்டியல் I-இல் பதிவுகள் 63, 64, 65 மற்றும் 66இல் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டதாகும். இதில் பல்கலைக்கழத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சேர்க்கப்படவில்லை. கூட்டாட்சி முறையில், மாநிலத்துக்கு உள்ள அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது.
எனவே தமிழக அரசு, நீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துவைத்தால் கண்டிப்பாக, உரிமையை மீண்டும் நிலைநாட்ட முடியும்.
மத்திய, மாநில
அரசுகளின் அதிகார வரம்புகள் பற்றி அரசமைப்புச் சட்டம் சொல்வதென்ன?
பதிவு எண் 44; - பட்டியல்-I (Union List மத்திய அரசுப் பட்டியல்): ஒரு மாநிலத்திற்குள் மட்டுமே செயல்படும் நோக்கம் கொண்டிராத பல்கலைக் கழகங்கள் நீங்கலான, வணிக நிறுவனங்களை பதிவு செய்வது, கட்டுப்படுத்துவது.
பதிவு எண் 32
பட்டியல்-II (State
List - மாநில அரசுப் பட்டியல்): பட்டியல் ஐ-இல் குறிப்பிடப்பட்டுள்ளது நீங்கலாக, மற்ற வணிக நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களைப் பதிவு செய்வது, கட்டுப் படுத்துவது. இந்த இரண்டும் மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பவை.
பதிவு எண் 25
பட்டியல்-III (Concurrent
List - பொதுப்பட்டியல்): பட்டியல் 1இல் பதிவுகள் 63, 64, 65 மற்றும் 66இல் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டு தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பயிற்சி. இது மட்டும் தான் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பவை.
மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வரும் கல்வி நிலையங்கள்:
பதிவு எண் 63: இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வரும்பொழுதே செயல்பட்டு வந்த பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் மற்றும் 1.7.1974முதல் செயல்பட தொடங்கிய டெல்லி பல்கலைக் கழகம் மற்றும் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின்மூலம் செயல்பட்டுவரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற கல்வி நிலையங்கள்.
பதிவு எண் 64:
முழுமையாகவோ பகுதியாகவோ மத்திய அரசிடமிருந்து உதவி பெற்று வருகின்ற, நாடாளுமன்ற சட்டத்தின் மூலமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலையங்கள்.
பதிவு எண் 65: கீழ்க்கண்ட ஒன்றிய (மத்திய) முகமைகள் (ஹபநஉநைள), நிலையங்கள் மற்றும் நிர்வாக வரம்புகள்:
(அ) தொழில் திறன், தொழில் பயிற்சி அல்லது தொழில்நுட்ப பயிற்சி மற்றும் காவல்துறை பயிற்சி நிலையங்கள்.
(ஆ) சிறப்புக் கல்வி அல்லது ஆராய்ச்சிப் படிப்பு மேம்பாடு
(இ) குற்றவிசாரணை மற்றும் கண்டுபிடிப்பு பற்றிய அறிவியல் தொழிநுட்ப உதவிகள்.
பதிவு எண் 66
பட்டியல்-ஐ
: உயர்கல்வி
அல்லது ஆராய்ச்சி மற்றும் அறிவியல்
தொழில்நுட்ப கல்வி நிலையங்களை நிர்வாக அடிப்படையில் ஒருங்கிணைப்பது மற்றும் பாடத்திட்டங்களை (Curricular Design) தீர்மானிக்க மட்டுமே மத்திய அரசிற்கு அதிகாரம் உள்ளது.
இந்த அதிகாரங்களை மட்டும் கொண்டு மத்திய அரசானது பெரும்பான்மையாக உள்ள பிற பல்கலைக் கழகங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் மாணவர் சேர்க்கை முறையில் தலையிட முடியாது.
மாநிலங்களுக்கு உட்பட்ட பல்கலைக்கழகங்களின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும்
மாணவர் சேர்க்கையில் வேறு யாரும் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் உறுதிப் படுத்தியுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சில், மருத்துவக் கல்வியில் பாடத் திட்டங்கள் மற்றும் மருத்துவர்களின் தொழில் நடத்தையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பெற்றது. மாணவர் சேர்க்கை விவகாரத்தில் தலையிட முடியாது. அதற்கு சட்டம் இடம்தரவில்லை. இது சூழலில் தான் சட்டத் திருத்தத்தின் மூலம் பிரிவு சேர்க்கப்பட்டு மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது. - ஜஸ்டிஸ்
ஏ.கே.ராஜன்
இணைப்பு - 3:
புதிய கல்வி மற்றும் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு மாநாட்டின் தீர்மானம்
19.11.2016
சனியன்று அரக்கோணத்தில் நடைபெற்ற காஞ்சிபுரம் மண்டல திராவிடர் கழக இளைஞரணி; மாணவரணி சார்பில் நடைபெற்ற - புதிய கல்வி மற்றும் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நீட் குறித்த தீர்மானம்.
தீர்மானம் 2:
(அ) நீட் தேர்வை முறியடிப்போம்!
நீட் என்ற பெயரில் அகில இந்திய அளவில் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிப்புக்கு ஆளாக்குவதாகும்.
+2
தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களைப் புறந்தள்ளுவது மாநிலக் கல்வியின் மதிப்பைப் புறந்தள்ளும் எதேச்சதிகார போக்காகும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை நுழைவுத் தேர்வு சட்டப்படி ரத்து செய்யப்பட்ட நிலையில், அதனை ரத்து செய்து அகில இந்திய அளவில் ஒரு நுழைவுத் தேர்வைத் திணிப்பதன் மூலம் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடும் ஆதிக்கப் போக்கை இம்மாநாடு சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறது.
அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டிலும் நீட் முறையில் மருத்துவக்கல்லூரி சேர்க்கை நடைபெறும் என்று தமிழகக் கல்வி அமைச்சர் தெரிவித்திருப்பது அதிர்ச்சிக்குரியதாகும்.
முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நுழைவுத் தேர்வுக்கு எப்பொழுதுமே எதிரான நிலையில்தான் இருந்து வந்திருக்கிறார் என்பதை இம்மாநாடு நினைவூட்டுகிறது. தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையில் முக்கிய கவனம் செலுத்தி, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, குறைந்தபட்சம் தமிழ்நாட்டளவிலாவது விதி விலக்குப் பெறுவதற்கான முழு முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2007இல் நுழைவுத் தேர்வு சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டதையும் இந்த நேரத்தில் நினைவூட்டப் படுகிறது.
நுழைவுத் தேர்வு தவிர்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் பொதுப் போட்டியில் கூட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்கள் கணிசமான இடங்களைப் பெற்றுள்ள நிலையில், இதனைத் தலைகீழாகப் புரட்டியடிக்கும் சூழ்ச்சிதான் இந்த நீட் என்ற நுழைவுத் தேர்வு. ஆகையால் இதனை முறியடித்தே தீருவது என்று இம்மாநாடு உறுதியாகத் தீர்மானம் செய்கிறது.
மத்திய அரசின் தேசிய புதிய கல்வித் திட்டம், நீட் நுழைவுத் தேர்வு இவற்றை எதிர்க்கும் வகையிலும், கண்டிக்கும் வகையிலும், முறியடிக்கும் நோக்கத்திலும் வரும் டிசம்பர் 18ஆம் தேதியன்று திருச்சி மாநகரில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அடங்கிய முத்தரப்பினரையும் உள்ளடக்கிய பேரணியையும், மாநாட்டையும் நடத்துவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. புதிய கல்வித் திட்டம், நீட் எனும் நுழைவுத் தேர்வு அபாயங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட துண்டறிக்கை மூலம் பிரச்சாரம் செய்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
புதிய கல்வி மற்றும் நீட் தேர்வு இவற்றை எதிர்த்து உரிய போராட்டம் வரும் டிசம்பர் 18 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெறவிருக்கும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரி யர்கள் பங்கேற்கும் முத்தரப்பு மாநாட்டில் அறிவிக்கப்படும் என்பதை இம்மாநாடு தெரிவிக்கிறது.
---------------
இணைப்பு - 4:
தமிழ்நாடு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் முத்தரப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் திருச்சிராப்பள்ளி உழவர் சந்தையில் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் 19.12.2016 அன்று நடத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் எதிர்ப்பு மாநாட்டில் (தமிழ்நாடு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் முத்தரப்பு மாநாட்டில்) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
நீட் குறித்த தீர்மானம் 2:
மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நீட் என்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை கைவிடவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
2007
ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள தன்மையில், மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது சட்ட விரோதமும், நியாய விரோதமும், சமூகநீதி விரோதமானதுமாகும்.
இந்த நீட் தேர்வுமூலம் சமூகநீதிக்கு உலை வைக்கப்படுகிறது. கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த முதல் தலைமுறையாக
படிக்க முன்வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களை வஞ்சிக்கும் ஏற்பாடாகவே நீட் தேர்வை இம்மாநாடு கருதுகிறது.
மாநிலங்களின் நிதியில் நிருவகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களை, மத்திய அரசு, தானடித்த மூப்பாக அகில இந்தியாவுக்குக் கொண்டு சென்று, நுழைவுத் தேர்வு வைத்துப் பங்கு பிரிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத அநீதி என்றும் திட்டவட்டமாகத் அறிவித்து இம்மாநாடு மத்திய அரசுக்கு தன் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு இடமில்லை என்று நிலைநாட்ட வேண்டியது தமிழ்நாடு அரசின் அடிப்படைக் கடமை என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
69
சதவிகித இட ஒதுக்கீட்டை தனிச் சட்டம்மூலம் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்து திராவிடர் கழகத் துணையுடன் பாதுகாத்ததுபோலவே, நீட் என்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு, தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது - தேவையில்லை என்கிற வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, உரிய வகையில் மத்திய அரசை வலியுறுத்தி - ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் கட்டிக் காத்து வந்த சமூகநீதியை நிலை நாட்டவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்கு இதில் விதி விலக்கு அளிக்கப்படுவது அவசியம் என்று
இம்மாநாடு உறுதியாக வற்புறுத்துகிறது.
ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் ஆங்காங்கே புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு இவற்றின் தீங்குகளை ஒல்லும் வகைகளில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டின் வெகுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
அதற்கான முயற்சிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
---------------
தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு.... தமிழ்நாடு தனியே ஒரு விதிவிலக்கு சட்டம் இயற்றுக!
தமிழ்நாடு (அதிமுக) அரசின் கொள்கைகளையும், 2017ஆம் ஆண்டிற்குரிய செயல் திட்டங்களையும் அறிவித்து, சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்படுவதற்கான முன்னோட்டமே, ஆளுநர் உரை என்பதாகும்.
கடந்த பல மாதங்களாக தமிழ்நாட்டில் பொறுப்பு ஆளுநரே இருப்பது, தமிழ்நாட்டிற்கும் சரி, மத்திய அரசுக்கும் சரி பெருமை தரும் அரசியல் சட்ட நடைமுறையாக
ஒரு போதும் ஆகாது!
மத்தியில் உள்ள பிரதமர் மோடி அரசு ஏன் இத்தனை மாதங்கள் காலந் தாழ்த்தி வருகின்றது என்பது வெளிப்படையான ஊகத்திற்குரியதுதான்!
தாங்கள் விரும்பும் ஆர்.எஸ்.எஸ்.காரரை (எந்த மத்திய அரசு பதவிக்கும் மோடி அரசில் இதுதான் முதல் முன்னுரிமைத் தகுதி என்பதால்) நியமிக்க முனைகிறது மத்திய அரசு. ஆளுநர் நியமனத்தைப் பொறுத்தவரை மாநில அரசுடன், முதல் அமைச்சருடன் கலந்து பேசி இருசாராருக்கும் கருத்திணக்கம் ஏற்பட்டு நியமிக்கப்படுவதுதான் இதற்கு முன் நடைமுறை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்த போதே ஏற்பட்ட இந்தக் காலி இடத்தை நிரப்பிட, கர்நாடக ஆர்.எஸ்.எஸ்.காரரைப் பரிந்துரைத்தது மத்திய அரசு. அதை அன்றைய முதல்வர் திட்டவட்டமாக ஏற்க மறுத்த நிலையில் பொறுப்பு ஆளுநராக திரு.வித்யாசாகர்ராவ் அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
இன்னமும் எத்தனை காலம் இப்படியே தொடருவது நியாயம்? எனவே தமிழ்நாட்டு அரசின் கருத்தறிந்து நல்லிணக்கம் கொண்ட ஒருவர் உடனடியாக நியமனம் செய்யப்படல் அவசர அவசியமாகும்.
ஆளுநர் உரை என்ற அந்த உரையில் தமிழ்நாடு, மத்திய அரசால் எப்படி வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பதை பல இடங்களில் அ.தி.மு.க. அரசு சுட்டிக் காட்டி, ஒப்பாரி வைத்து அழுதுள்ளதே தவிர, வலிமையான உரிமைக் குரலை ஏனோ ஓங்கி ஒலிக்கவில்லை.
முதலமைச்சரும், நிதியமைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஆற்றவிருக்கும் நிதி நிலை அறிக்கை உரையில் அதைச் செய்தால், நடு நிலையாளர்களும், மாநில உரிமைக் காவலர்களும் அதை வரவேற்பது உறுதி!
தமிழக (பொறுப்பு)
ஆளுநர் உரையில்,
2005
ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகள் உள்பட அனைத்துத் தொழில்முறைக் கல்லூரிகளுக்கான சேர்க்கையை முறைப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொழில்முறைக் கல்வி நிலையங்களுக்கான நுழைவுச் சட்டத்தை இயற்றி, தொழில்முறைக் கல்விக்கான தனி நுழைவுத் தேர்வுகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. ஊரக, ஏழை, எளிய, சமூகப் பொருளாதார நிலையில் நலிவடைந்த குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களால் நகர்ப்புறங்களில் பயிலும் மாணவர்களோடு பொது நுழைவுத் தேர்வுகளில் போட்டியிட இயலாது என்பதால், அத்தகைய மாணவர்களின் நலனிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவக் கல்விக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதோடு மட்டுமல்லாமல், சிறப்பாகச் செயல்பட்டுவரும் வெளிப்படையான சேர்க்கை முறையைப் பின்பற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பெரும் அநீதி இழைப்பதாகவும் உள்ளது.
எனவே, மருத்துவம்
மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறையையே தொடர்ந்து பின்பற்ற இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டது நம்மைப் போன்ற சமூக நீதிப் போராளிகளுக்கும், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கும், இதற்காக போராட்ட களங்களில் பகுதி பகுதியாக முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என்று போராடி வருவதால் தக்க பலன் கிடைக்கத் துவங்கி உள்ளது என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நாடாளுமன்றத்தில் அகில இந்திய நுழைவுத் தேர்வு (மருத்துவப் படிப்புக்கானது) சட்டமாக்கப் பெற்ற நிலையில் இது சாத்தியப்படுமா என்ற அய்யம், தமிழகத்தின் அரசுக்கோ, ஊடகங்களுக்கோ, மக்களுக்கோ, பெற்றோர்களுக்கோ தேவையேயில்லை.
ஏறுதழுவுதலை செயல்படுத்த, எப்படி பொதுப் பட்டியலில் உள்ள ஒரு பொருளுக்கு, விலக்கு அளிக்கப்பட்டதோ அப்படி இதிலும் விலக்குப் பெற முடியும்.
இந்திய
அரசியல் சட்டத்தில் கல்வி 7ஆவது அட்டவணையில் (Seventh Schedule) உள்ளபடி III—Concurrent
List, Item
25. Education, including technical education, medical education and universities, subject to the provisions of entries, 63, 64, 65 and 66 of List I; vocational and technical training of labour.
25. Education, including technical education, medical education and universities, subject to the provisions of entries, 63, 64, 65 and 66 of List I; vocational and technical training of labour.
அதாவது பொதுப் பட்டியலின் 25ஆ0வது பொருளாக (Item 25) தொழில்
நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி உள்ளிட்ட கல்வித் துறை இருப்பதால் மேற்கண்ட நடைமுறை இதற்கும் பொருத்தும்.
21
ஆண்டு கால அனுபவத்தாலும், சமூக நீதிக் கண்ணோட்டத்திலும், கிராமப் புற ஏழை, எளிய முதல் தலை முறையினர் டாக்டர்களாக படித்து முன்னேறத் தடையாக இருக்கும் என்பதாலும்,
நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதி விலக்குச் சட்டத் திருத்தத்தை தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து சட்டமானால், (தமிழ்நாடு) நுழைவுத் தேர்வு எழுத வேண்டியிராது.
நுழைவுத்
தேர்வை திணித்தால் பெருங் கொந்தளிப்பு ஏற்படும் எனவே, இந்த நுழைவுத் தேர்வால் தமிழ்நாட்டு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு சமூகநீதியை மறுக்கும் வாய்ப்பு பரவலாக உள்ளது என்பதையும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் நுழைவுத் தேர்வால் பாதிக்கப்பட்டு, பிறகு அது ரத்து செய்யப்பட்டதினால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட (BC, MBC, SC, ST) பிள்ளைகள் மிகப் பெரும் அளவில் கடந்த சில ஆண்டுகளில் பயன் பெற்று வருகிறார்கள் என்பதையும் எடுத்துச் சொல்லி, கடந்த காலத்தில் திமுக, அதிமுக அரசுகளால் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலைக்கு மாறாக இந்த ஆண்டு நுழைவுத் தேர்வை திணித்தால், பெருங் கொந்தளிப்பும், அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கும் சமூகநீதி வாய்ப்புகளுக்குக் கேடு ஏற்படும் என்பதால் உடனடியாக (விதி விலக்கு தரும்) இதனை தனிச் சட்டமாக்கி தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, நமது தமிழ்நாட்டு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துவதோடு நடைபெறவிருக்கும் மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தொடரில் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு அளிக்க வேண்டியதையும் வற்புறுத்திட வேண்டும்.
இதில் காலந் தாழ்த்திடக் கூடாது. இல்லையேல் எதிர்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய இன மக்களின் பிள்ளைகள்
டாக்டர்கள் ஆகும் வாய்ப்பை அறவே மறந்து, துறந்து விட வேண்டியதாகி விடும் என்பது உறுதி!
சென்னை - கி.வீரமணி
26-1-2017
தலைவர், திராவிடர் கழகம்
(மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு கொண்டுவரும் நீட் அகில இந்திய நுழைவுத் தேர்வு தமிழ் நாட்டிற்குத் தேவையில்லை,வேண்டாம் என் பதை வலியுறுத்தும் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் 31.1.2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது.)
இணைப்பு - 6:
தமிழ்நாடு அரசும் மக்களும்
விழிப்போடு இருக்க வேண்டும்
சமூகநீதி அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவை யில் ஒருமனதாக நீட்டை எதிர்த்து சட்டம் நிறை வேற்றப்பட்டும், தமிழ்நாட்டில் உள்ள அநேகமாக அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், பார்ப்பன ஏடுகள் மட்டும் நீட்டை ஆதரிப்பது ஏன்? மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் மேல் பட்டப் படிப்புகள் படிக்க அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு (NEET) நீட் என்ற ஒன்றினைத் திணிப்பது, தமிழ்நாட்டு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களை, டாக்டர் படிப்புக்கு சேரவிடாமல் தடுக்கும் உயர்ஜாதி ஆதிக்க சூழ்ச்சியே என்பதை கடந்த பல மாதங்களாக திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. ஆகிய பெரும்பாலான கட்சியினர் கடுமையாக எதிர்த்து மக்களுக்கு விளக்கியுள்ளனர்.
இவர்கள் தவிர, டாக்டர்களைக் கொண்ட சமூக அமைப்புகள், கல்வி நிபுணர்களைக் கொண்ட பல்வேறு அமைப்புகள், மேனாள் நீதிபதிகளான டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன், ஜஸ்டீஸ் ஹரிபரந்தாமன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று பலதரப்பட்டவர்களும் இதனை எதிர்த்தே குரல் கொடுத்து வருகின்றனர்.
தி இந்து, தினமலர், தினமணி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் போன்ற ஏடுகள் தொடர்ந்து
நீட்டை ஆதரித்தே எழுதி வருகின்றன. இதிலிருந்து புரிவது என்ன?
இந்த நீட் தேர்விலிருந்து
தமிழ்நாட்டுக்கு
விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவினை தமிழ்நாடு அரசு எடுத்து, தேவையை உணர்ந்து
சட்டமன்றத்தில்
தனிச் சட்டம் எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி என்ற பேதமின்றி ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் (அதாவது மத்திய அரசின்) ஒப்புதலைப் பெற வேண்டியுள்ள இறுதிக்கட்டத்தில் நாடு உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டில்லியில் பிரதமரைச் சந்தித்தபோதும், சட்ட அமைச்சரைச் சந்தித்த போதும் இதனை நேரில் வற்புறுத்தி மனுவினையும் அளித்துள்ளார்.
குடியரசுத் தலைவரிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திராவிட சமூகநீதிக்கு எதிரான உணர்வுடையோர் ஊடுருவியுள்ள ஆங்கில நாளேடுகளும், இது நிறைவேறி விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, குறுக்குசால் ஓட்டுகின்றன.
ஒரு நாளேடு இந்த சட்டம்
- பலமுள்ள சட்டமல்ல; குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருவது சந்தேகமே என்று விஷமமாக எழுதுகிறது!
பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரம் மட்டுமல்ல, தேர்வு நடத்துதல் பல்கலைக் கழகத்தின்
உரிமையே தவிர, இந்திய மருத்துவக் கவுன்சிலின் வேலை அல்ல. இந்த நுழைவுத் தேர்வு செல்லாது என்று
உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதியான அல்தாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு சுட்டியுள்ளது.
அந்த அமர்வில்
நீட் தேர்வுக்கு ஆதரவாக தனிக் கருத்தை எழுதிய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பன நீதிபதியே, மறுபடியும் அது தொடர்பான வழக்கு வந்தபோது, அந்த அமர்வுக்குத் தலைமை தாங்கி, (இது சட்டப்படி சரியா?) முந்தைய தீர்ப்புக்கு எதிராக
ஆணை பிறப்பித்து நீட் திணிக்கப்பட்டுள்ளது.
சம வாய்ப்புத் தத்துவத்திற்கு எதிரானதே!
கல்வித்தரம் என்பது விரிவான விளக்கத்தைப் பெறவேண்டிய ஒன்று - அதுமட்டுமா?
இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான சி.பி.எஸ்.இ. முறையில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறதா? அவ்வாறு இல்லாத நிலையில், சி.பி.எஸ்.இ. திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வை நடத்துவது சரியா - முறையா - நியாயமா?
இது அடிதட்டு மக்களையும் கிராமப்புற இருபால் மாணவர் களையும் பாதிக்காதா?
சம வாய்ப்புத் தத்துவத்திற்கே இது விரோதம் அல்லவா? எனவே, தமிழ்நாடு அரசும், மக்களும் விழிப்போடு போராடத் தயாராக வேண்டும்.
- கி.வீரமணி, சென்னை
நூல் : நீட் நுழைவுத் தேர்வு கூடாது - ஏன்?
ஆசிரியர் : கி.வீரமணி
ஆசிரியர் : கி.வீரமணி
Comments
Post a Comment