தமிழர் தாழ்நிலைப் பற்றிய பெரியாரின் கணிப்பு தவறா?



பெரியார் தமிழர்களைப் பற்றி மட்டமான கருத்துக் கொண்டிருந்தார்.
1. தமிழனுக்கு அடித்தளமில்லை. அதாவது அவன் யார்? அவனுக்குச் சொந்தம் எது? அவனுடைய தோற்றுவாய் என்ன? குறிக்கோள் என்ன? இந்த நாலுந் தெரியாதவனாகவும், அடிப்படையே இல்லாதவனாகவும் இருக்கிறான். ஆகவே, அடித்தளம் இல்லாத கட்டடம் வெடிப்புக் காணுவதும், அதிருவதும், அதில் குடியிருக்க அஞ்சுவதும் இயற்கைதானே? அதுபோலவே தனக்குச் சொந்தம் இன்னது என்றும் உரிமை இன்னது என்றும் தெரியாதவன் தொட்டதற்கெல்லாம் அயலானைப் பல்லைக் காட்டிக் கெஞ்சுவதும், ஒண்டுவதும்ஒருவனுக்கு ஒருவன் போட்டிப் போட்டுப் பின்தள்ளிவிட்டுப் போய்த் தன் வேலையைப் பார்த்துக் கொள்வதும் இயற்கை தானே?
2.தமிழனுக்கென்று ஓர் அமைப்பு இல்லை.
3.தமிழன் என்றால் பார்ப்பான், முஸ்லீம், கிறித்தவன் முதலான எல்லோரும் சேர்ந்து கொள்கின்றனர்.
4.தமிழனுக்கு என்று தனி முறையோ, வழித்துறையோ கிடையாது. அஃதாவது அவனுக்கென்று யாதொரு தனி நடையுடை தோரணை கிடையாது.
5.ஆரியம் கலவாத தனித்த, இலக்கியம் தமிழனுக்கு ஏதும் இல்லை.
6.தமிழனை தனித்த முறையில் வழி நடத்த யாதொரு தலைவனும் கிடையாது.
7.தமிழருள் தலைமக்களுக்குத் தமிழர் முகத்தைப் பற்றி யாதொரு அக்கறையும் கிடையாது. அயலார் என்னதான் இழிவு படுத்தினாலும், தமிழர்கள் அதைப் பொருட்படுத்தவே மாட்டார்கள்.
8.தமிழனுக்குத் தன்மானம் பிறக்க வழியேயில்லை. அத்தமிழனுக்கு மானம் என்றொன்று இருந்ததேயில்லை.
(குடிஅரசு 17.11.1943)
என்று பெரியாரின் கருத்துக்களை எடுத்துக்காட்டி, பெரியாரின் இக்கருத்துக்கள் எல்லாம், அறிவுக்கும், வரலாற்றியலுக்கும், மாந்தவியலுக்கும் புறம்பான அழிம்புக் கருத்து என்றும், ஆரியச் சார்பு வரலாற்று ஆசிரியர்களும்கூடச் சொல்லத் துணியாத இக்கருத்துக்களை, திராவிடத் தந்தை என்று கூறிக் கொள்ளும் பெரியார் கூறியிருக்கிறார். என்று குணா கடுமையாகக் குற்றஞ் சாட்டிப் பெரியார்மீது வெறுப்பை உண்டாக்கியிருப்பதோடு நில்லாது, தமிழர்கள் பற்றி பெரியார் கொண்டிருந்த மட்டமான கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகளைத் தேடிப் பிடித்து எழுதி, பெரியாரின் தமிழர் எதிர்நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழர்களை மேலும் உசுப்பி விடுகிறார்.
இதிலிருந்து ஒன்று மட்டும் உறுதியாய் விளங்குகிறது. பெரியார் என்ற ஒரு மாபெரும் மனிதரை, ஓர் இமயத்தை, உலகத் தலைவரை, காலமெல்லாம் தமிழன் நன்றி பாராட்ட வேண்டிய ஒரு தலைவரை, வாழ்நாளெல்லாம் தமிழர்க்காகவே சுற்றிச் சுற்றி பாடுபட்ட, பரப்புரையாற்றிய ஒரு தலைவரை, ஆரியத்தின் முதல் எதிராளியாய் நின்று அவர்கள் ஆதிக்கக் கோட்டையைத் தகர்த்து, அவர்களை வீழ்த்தி, அவர்களுக்கு நிகராக, ஏன் மேலாகவும் தமிழர்கள் இன்று மிடுக்குடனும் திறமையுடனும், உயர்வுடனும், பெருமையுடனும் விளங்கக் காரணமான, களம் அமைத்த பெரியாரை, அத்தமிழினத்தின் எதிரியாக சித்தரிக்க வேண்டும், அதன்மூலம் ஆரியத்திற்குத் துணை நின்று அவர்களின் சபாஷ் வாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் குணா இந்நூலை எழுதியுள்ளார்; அதனால்தான் இவ்வளவு சதித் திட்டத்தோடு, மோசடியாக, கருத்துக்களைத் திசை திருப்பி, தவறான விளக்கம் தந்து, நோக்கங் கற்பித்து குற்றச்சாட்டுகளை வலிய வைத்துள்ளார்.
எனவே, நானும் சொல்கிறேன், குணா போன்ற குறுக்கு சால் பேர்வழிகள் இன்று ஆரியத்தின் அடியாட்களாய், தமிழர் நலம் விரும்பும் போர்வையில் நரித்தனமாய் கருத்துக்களை நூல்வழியும், இணையதளம் வழியும் மற்ற ஊடகங்கள் வழியும் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். எனவே, பெரியாரின் சிந்தனைகள், பேச்சுக்களை நன்றாகப் படித்துத் தெளிவு பெறுங்கள். விழிப்பாய் இருங்கள். எனது இந்த மறுப்பு நூலையும் ஊன்றிப் படித்து உண்மை உணருங்கள். இல்லையேல் ஆரியம் மீண்டும் நம்மை அடிமையாக்கிவிடும்! எச்சரிக்கை!
மேற்படி குணா கூறும் குற்றச்சாட்டுகளில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? நேர்மை இருக்கிறதா? பெரியாரின் கருத்துக்கள் தவறானவையா? தமிழர் எதிர் கருத்துக்களா? குணா கூறுவது போல அழிம்புக் கருத்துக்களா? என்பதை சுருங்கப் பார்ப்போம்: பெரியார் சொன்னது அனைத்தும் தமிழர்கள் அன்றைக்கு இருந்த நிலை. சீர்கெட்ட விழிப்பற்ற நிலை; ஆரியத்தில் வீழ்ந்து அடிமைப்பட்டிருந்த நிலை; மூடநம்பிக்கையில் மூளைக்கு வேலை கொடுக்கா நிலை; கற்றுத் தேறாத நிலை; ஒற்றுமையற்ற நிலை; தமிழனுக்குள்ளே காட்டிக் கொடுக்கும் நிலை; தமிழர் தலைவர்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் ஏற்காத தன் முனைப்பு தற்செருக்கு நிலை, தனக்கென ஒரு மரபை உறுதி செய்து கொள்ளாத நிலை, தனக்கென பேச்சை வரையறுக்காத நிலை, தனக்கென இதுதான் வாழ்வியல் நெறி என்ற தெளிவற்ற நிலை; தன் உயர்வுக்கென்று, உரிமைக்கென்று, பாதுகாப்பிற்கென்று ஓர் அமைப்பு இல்லாத நிலை போன்றவையே அப்போதைய தமிழரின் உண்மையான நிலை.
1. தமிழர்க்கு அடித்தளம் இல்லை என்றது ஏன்?
அடித்தளம் என்றால் என்ன? அமையப் போகும் கட்டடத்தின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது அடித்தளத்தாலே தீர்மானிக்கப்படுகிறது. அப்படி தமிழர் வாழ்வு என்பது அன்றைக்கு வரையறுக்கப்பட்ட நிலையில் இருந்ததா? அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, பேசிய பேச்சு, கொண்டாடிய விழாக்கள் தமிழர்க்குரியனவாக இருந்தனவா? இல்லையே! ஆரிய கலாச்சாரமும், ஆரிய கலப்பும், ஆரிய மேலாதிக்கமும், ஆரிய தலையீடும் இல்லாத எதுவும் தமிழர்க்கு அன்றில்லையே. அதைத் தான் பெரியார் சுட்டிக்காட்டினார்.
தனக்கென தூயமொழி, நெறியான வாழ்வு, முறையான இல்வாழ்வு, சமூக நல்லிணக்கம், ஜாதியற்ற, மூடநம்பிக்கையற்ற சமுதாயம், பெண்களுக்கு உயர்நிலை, கற்புக்கும் வீரத்திற்கும் வணக்கத்திற்குரிய இடம். விருந்தோம்பல், பண்பாடு, கலை, உடை எல்லாவற்றிலும் தமிழர்க்கென்று ஒரு வரையறுத்த நிலை தொல்காப்பிய காலத் தமிழர்க்கு இருந்தது. அந்த அடித்தளம் தற்போது தமிழர்க்கு உண்டா என்பதே பெரியாரின் ஆதங்கம், ஆத்திரம் அனைத்தும். அதைத்தான் மனம்விட்டு, தமிழர்க்கு உறைக்க வேண்டும் என்பதற்காகக் கேட்டார்.
2. தமிழர்க்கென்று ஓர் அமைப்பு இல்லை தமிழர்களுக்கென்று, அவர்கள் உரிமை, உடைமை, பாதுகாப்பு, பராமரிப்பு, வளர்ச்சி, கல்வி, கலை, விழாக்கள், மரபு, மொழி, மருத்துவம், பயிற்சி, அயல் தொடர்பு, உற்பத்தி, வணிகம், நிதி, சேமிப்பு, கடன் என்று வாழ்க்கையின் நடைமுறை சார்ந்த செயல்பாடுகளைத் தீர்மானிக்க, செயல்படுத்த, நெறிப்படுத்த, சிக்கல் எழுகையில் தீர்வு காண தமிழர்க்கென்று ஓர் அமைப்பு இல்லை என்பதையே பெரியார் சுட்டிக்காட்டினார். இல்லை என்பதற்காக வேதனைப்பட்டார்.
3. தமிழன் என்றால் பார்ப்பான், முஸ்லீம், கிறித்தவன்
முதலான எல்லோரும் சேர்ந்து கொள்கிறார்கள். பெரியாரின் அடுத்த ஆதங்கம் இது. ஓர் இனத்தை மீட்டு உயர்த்த நினைக்கும் ஓர் உன்னத தலைவர்க்கு ஏற்பட வேண்டிய இயற்கையான இந்த உணர்வே பெரியாருக்கும் எழுந்தது. எந்த வெறுப்பின் அடிப்படையிலும், எதிர்ப்பின் அடிப்படையிலும் பெரியார் இக்கருத்தைச் சொல்லவில்லை. தமிழரின் தனித்தன்மை மதத்தால் மாறி, திரிந்து, சிதைந்து, மாறுபட்டு, வேறுபட்டு, முரண்பட்டு, அதன் உண்மை நிலை கெட்டுப் போனதையே அவர் வேதனையுடன் வெளிப்படுத்தி உள்ளார். தமிழன் தமிழனாகவே இருந்தால், அவனுடைய வாழ்வியல் ஓர் வரையறுத்த நெறிக்குள் இருக்கும் தமிழன் இந்துவாகவோ, கிறித்தவராகவோ, இஸ்லாமியராகவோ மதத்தை ஏற்று மாறும்போது, தமிழன் தனிப்பட்ட அடையாளங்களும், வாழ்வியல் முறைகளும், கொள்கைகளும், விழாக்களும், கலைகளும், உடைகளும், உணர்வுகளும் மாறி விடுகின்றன. இதனால் (மதத்தால்) தமிழரின் தனித் தன்மை போயிற்று. எனவே, மதக்கலவரம், மதத்தை ஏற்காத தமிழர் வாழ்வை மீட்க வேண்டும் என்பதற்காக இக்கருத்தைச் சொன்னார்.
4. தமிழர்க்கென்று தனிநடை, உடை, தோரணை கிடையாது என்று தந்தை பெரியார் கூறியதற்கான காரணம் தந்தை பெரியாரின் தனிப்பட்ட சிந்தனையென்பது வேறு. அவர் ஆணும் பெண்ணும் வேறுபாடின்றி உடை உடுத்த வேண்டும், குடும்ப வாழ்வு என்ற பிணைப்பில் பெண்கள் அடிமை வாழ்வு கூடாது, ஆண்களைப் போலவே பெண் போர்ப் பயிற்சி பெற வேண்டும்; உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உயரிய, பகுத்தறிவின், மனிதநேய மலர்ச்சியின், பேதமற்ற சமத்துவ நோக்கின் பாற்பட்ட சிந்தனைகளை உடையவர். என்றாலும், பண்டைத் தமிழரின் வாழ்வு உலகிலே ஒரு தலைசிறந்த வாழ்வு, எடுத்துக்காட்டான வாழ்வு, அறிவின் பாற்பட்ட அர்த்தமுள்ள வாழ்வு. ஆரிய கலப்பாலும், மதக்கலப்பாலும், பிற இனக்கலப்பாலும் பாழ்ப்பட்டு, மாறி, சீர்கெட்டு போய்த் தனித் தன்மை இழந்து நிற்கிறது. எனவே, அதை மீட்டு தமிழன் தனித் தன்மையைச் சிறப்பை மீட்டு, தன்மான வாழ்வை, ஆதிக்கமற்ற வாழ்வை கொடுக்க வேண்டும், அதற்கு இந்த மண்ணின், மக்களின் இயல்புக்கும், உளநிலைக்கும் ஏற்ற வழியை காணவே, மாற்றத்தைக் கொண்டு வரவே இந்த ஆதங்கத்தை வெளியிட்டார்.
தமிழர் நடையாலும், உடையாலும், வாழ்க்கை நெறியாலும், தன் பழம் பெருமையை மீட்டு, பின்பற்றி வாழ வேண்டும் என்பதற்கே இதைச் சொன்னார்.
5. ஆரியம் கலவாத தனித்த இலக்கியம் எதுவும் தமிழனுக்கு இல்லை
இது பெரியார் உள்ளத்தில் எழுந்த குறை. ஒருமனிதற்கு குறையும், குறை சார்ந்த வேதனையும் எப்பொழுது எழும்? அதன் மீது பற்றுள்ளபோதே எழும். பெரியார் தமிழ்மீதும், தமிழர்மீதும் பற்று கொண்டிருந்ததாலே இக்கருத்தை வெளியிட்டார். இதில் என்ன குறை கண்டார் குணா என்பது புரியவில்லை. தொல்காப்பிய காலத்திலே ஆரியம் கலந்து விட்டதை அறிய முடிகிறது. திருக்குறளிலும் சொல்லாலும் கலந்து, கருத்தாலும் கலந்து நிற்பதைக் காண முடிகிறது. அதன்பின் வந்த இலக்கியங்களைச் சொல்லத் தேவையில்லை. ஆரியம் கலவா தனித்த இலக்கியம் படைக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் உயரியது. தவறானது அல்ல. ஆங்கிலம் கலவாது பேச நாம் இன்று எடுக்கும் முயற்சியைப் போன்றது. கம்ப இராமாயணம் இலக்கிய சுவை, நயம் மிக்க ஓர் உன்னத படைப்பு. ஆனால், அதில் ஆரிய மேலாண்மை ஓங்கி நிற்பதையும், ஆரிய செழுமைக்கு, ஆரிய நோக்கிற்குப் பயன்படுவதை யார்தான் மறுக்க இயலும். கம்பனின் கவித் திறத்தை ஆரியம் அறுவடை செய்கிறது என்பதுதானே உண்மை.
தமிழர் நெறியுடன், தமிழர் மரபுக்கு ஏற்ற தமிழர் மேன்மைக்கான இலக்கியம் தமிழில் வேண்டும் என்ற பெரியாரின் விருப்பமும் கருத்தும் மிகச் சரியானதே!
6. தமிழனைத் தனித்த முறையில் வழிநடத்த யாதொரு தலைவனும் கிடையாது; இது பெரியாரின் மற்றொரு ஆதங்கம். சரியான தமிழர் தலைவர் வேண்டும் என்பது அவரது வேட்கை. இதில் என்ன குற்றம். உண்மையைத்தானே பெரியார் ஓங்கி உரைத்தார்.
அன்றைக்கு ஏன்? இன்றைக்கு அந்நிலை உண்டா? முதலில் தமிழனுக்குத் தமிழன் தலைமை தாங்குகிறானா? தமிழன் தமிழனை தலைவனாக ஏற்கிறானா?
வேடம் போட்டு ஆடவரும் வெளிமாநிலத்தாருக் கெல்லாம் விசிறியாய் மாறி பின் தொண்டனாகி, ஆட்சியில் அமர வைக்கிறான். இதுதானே இன்றைய தமிழன் நிலைப்பாடு.
தமிழர் பிரச்சினையில் கபடநாடகம் ஆடுகிறார் என்று ஒரு தமிழர் தலைவரை ஒதுக்கிவிட்டு, தமிழர் விரோத, தமிழினம் அல்லாத வேறு ஒருவரை உட்கார வைக்கத்தானே தமிழ்த் தேசியம் பேசும் இளைஞர்கள் எல்லாம், கச்சைக் கட்டிக் கொண்டு, எழும்பி எழும்பி, எகிறி எகிறிப் பேசி முழங்கினர்.
தமிழ்த் தேசியம் பேசும் நிலைக்கு வந்த இளைஞர்களே விழிப்பற்று வழிகாட்டும்போது, அதுவும் பெரியாரால் தெளிவு உணர்வு பெற்று, உரம் பெற்றுள்ள நிலையில் இப்படி இருக்கிறார்கள் என்றால், அன்றைக்கு நிலை மோசமல்லவா? அதைத்தானே பெரியார் சுட்டிக்காட்டுகிறார்.
சரியான தலைவர் இல்லாததால்தானே கன்னடரான தான் தமிழர்க்கு முடிந்ததைச் செய்கிறேன் என்றார்.
எந்தத் தமிழ்த் தலைவரும் தலைமையேற்று வழிநடத்த வருவதைத் தந்தை பெரியார் தடுக்கவும் இல்லை; தடையாகவும் இல்லையே!
நாலு பொதுக் கூட்டங்கள் பேசி, நான்காயிரம் பேர் கூடி விட்டால், தான்தான் தலைவர் என்கின்ற தன்முனைப்பில் தமிழர்கள் செயல்படும் நிலைதான் உண்மை நிலை.
தலைவனாவதற்கு எளிய வழியாக ஜாதியைக் கையில் எடுத்து, தமிழனைப் பிரித்து ஒற்றுமையைக் குலைப்பவர்கள் தானே, இன்றைக்குத் தமிழர் பற்றியும், தமிழ்த் தேசியம் பற்றியும் பேசுகின்றனர்.
தமிழனுக்கு ஜாதி உண்டா? ஜாதிப் பற்றுள்ளவன் தமிழன் அல்லவே; அவனுக்குத் தமிழ்த் தேசியம் பற்றிப் பேச தகுதியில்லையே!
மருந்தாகப் பயன்படுத்தச் சொன்ன ஜாதியை, உணவாக உட்கொள்ள முயலும் அவலம்தானே இன்றைய தமிழகத்தில். முதலில் ஒரு ஜாதிக்கு ஒரு தலைவன் உண்டா. ஒரு ஜாதிக்கு ஒன்பது தலைவன் ஓராண்டுக்குள் வருகிறான். இப்படியிருக்க தமிழர்க்கு ஒட்டுமொத்த தலைவர் உருவாகுவது எப்படி?
குற்றம் சொல்லி ஒற்றுமை குலைத்து ஒதுங்கிச் சென்று ஓர் அணி அமைக்கும் உளநிலைதானே இன்று தமிழனுடையது. அதைத்தானே பெரியார் சொல்லி வேதனைப்பட்டார்.
பொதுச் சிக்கலில் முதலில் தமிழர்கள் ஒன்றாக நிற்கிறார்களா? ஈழத்திற்குக் குரல் கொடு என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் போராட்டம் நடத்துகிறார்கள்.
காவிரிச் சிக்கல் வா என்றால், ஆளுக்கு ஒருநாள் அணிவகுக்கிறார்கள்.
முல்லைப் பெரியாறு காப்போம் என்றால் மூலைக்கு ஒருவராய்ப் பிரிந்து போராட்டம் செய்கிறார்கள்.
தமிழன் இன்றைக்கும் இப்படித்தான். அன்றைக்கும் இப்படித்தான். அதையே வேதனையாய் வெளிப்படுத்தினார் பெரியார்.
பெரியாரின் வேதனை புரிந்து, தமிழர் ஒன்றாகி நிற்பதுதான் உணர்வுள்ள தமிழனுக்கு அழகு. அதுவும் இனிமேலாவது ஒன்று பட்டு நிற்பது அழகு. ஆனால் அதைவிட்டு பெரியாரைக் கொச்சைப்படுத்திவிட்டு, பிரபாகரன் சிறந்தவர், பாவாணர் சிறந்தவர், பாவேந்தர் சிறந்தவர் என்று நரிவேலை பார்ப்பது ஆரியத்திற்குச் சேவகம் செய்யும் செயலாகும்.
யாரைச் சிறந்த தலைவர் என்று ஒரு தரப்பு கூறினாலும், அவரிடம் குறை, குற்றம், துரோகம், மோசடி, சுயநலம் என்று பழி சொல்ல பட்டியல் தயாரிக்க எவராலும் முடியும்.
தமிழன் கெட்டு நாசமாய்ப் போனதும், நாசமாய்ப் போவதும் இந்த ஈனப் புத்தியால்தானே!
கன்னடரான பெரியார், தமிழர்க்காக, தன் பொருள், ஆயுள் அனைத்தையும் தியாகம் செய்து சாகும்வரை உழைத்தார் என்றால், அது நன்றியுடன் பாராட்டப்பட வேண்டிய, காலமெல்லாம், வணங்கி ஏற்றக்கூடிய ஒரு பணி (தொண்டு) என்பதை மறந்துவிட்டு, உண்மையற்ற, மோசடியான குற்றச்சாட்டுகளைக் கூறி கொச்சைப்படுத்துவது தமிழின விரோதச் செயல் அல்லவா?
7. தமிழர் தலைவர்களுக்குத் தமிழர் சமூகத்தைப் பற்றி கவலையில்லை. அயலார் எவ்வளவு இழிவுபடுத்தினாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்பது தந்தை பெரியாரின் வருத்தம். இது நியாயமான வருத்தம்தானே. அதுவும், இக்கருத்தை அவர் வெளியிட்ட காலத்தில் தமிழர்மீது பற்றுள்ள யாருக்கும் எழக்கூடிய கவலைதானே இது. தமிழறிந்த தமிழ்த் தலைவர்கள் சிலர் இருந்தும், கற்று பதவி பெற்று உயர்ந்த தமிழ்த் தலைவர்கள் பலர் இருந்தும், பணம் படைத்த, அரசியல் செல்வாக்கு பெற்ற தமிழ்த் தலைவர்கள் பலர் இருந்தும், ஆரிய ஆதிக்கத்தை அறிந்து, அதை அகற்றவும், இன இழிவை நீக்கவும், பகுத்தறிவு ஊட்டவும், மூடநம்பிக்கை களையவும், தன்மானம் வளர்க்கவும் ஆர்வமுள்ள, அதற்காக உழைக்க ஒருவரும் இல்லையே என்பதுதானே பெரியார் வருத்தம். அதுதானே உண்மை. அதில் குறையென்ன காண்கிறார் குணா?
பெரியார் கூறுவதைக் கூர்ந்து நோக்கின் இது புலப்படும். குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக மேம்புல் மேய்ந்தால் புரியாது. உண்மையை ஒளித்தாலும் விளங்காது.
8. அயலார் என்னதான் இழிவுபடுத்தினாலும் தமிழர் தலைவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்? என்பதன் பொருள் என்ன?
அயலார்  ஆரியர். ஆரியர் நம்மைச் சூத்திரனாக்கி, தீட்டுள்ளவனாக்கி, தீண்டத்தகாதவனாக்கி, கல்வியைப் பறித்து, நம் கலாச்சாரத்தைக் கெடுத்து, நம் மொழியைக் கெடுத்து, நம் விழாக்களைக் கெடுத்து, நம் உயர்வுகளை ஒழித்து, நம்மை இழி மக்களாக்கி அதற்குத் துணையாக சாஸ்திரங்களை எழுதி எவ்வளவு தமிழர்களை இழிவுபடுத்தினாலும் அதைத் தமிழர் தலைவர்கள் உணர்ச்சியுடன் கருத்தில் கொள்வதில்லை என்றார். அது முழுதும் உண்மைதானே!
சமுதாய செல்வாக்குமிக்க ஒரு தமிழனை ஒரு சாதாரண சிறுவயது பார்ப்பான் வாடா, போடா என்று அழைப்பதும் 60 வயதுக்கு மேற்பட்ட நம்ம தமிழர் அச்சிறுவனை சாமி என்று வணங்குவதும் நடப்பில் இருந்ததுதானே.
அதைக் கண்டு பெரியாரைத் தவிர எந்தத் தமிழனுக்குச் சொரணை வந்தது. அதைத்தானே கேட்டார். அப்படிக் கேட்டதால்தானே கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழனுக்குச் சொரணை வந்தது. சொரணை கொடுத்ததையே குணா குற்றம் என்கிறாரா? ஆரியத்திற்கு வால் பிடிப்பவரல்லவா அவருக்கு அது குற்றமாகத்தான்படும்!

இந்த நிலையில் தமிழர் தலைவர்கள் பொறுப்பற்று நடந்தால், தமிழர்க்கு தன்மானம் வரவும், விழிப்பு வரவும், கல்வி கிடைக்கவும், வேலை கிடைக்கவும், மேன்மை கிடைக்கவும், ஆரிய ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி தன்மானத்துடன் வாழவும் வழியே வராது என்று வேதனைப்பட்டது சரியானதுதானே! தமிழர்மீது அக்கறையுள்ளவர் செய்யக்கூடியதுதானே அது. அதைத்தான் பெரியார் செய்தார். இதில் என்ன தவறு? என்ன குற்றம்? எது துரோகம்?

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்த பிரசங்கத்தின் சாராம்சம்

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் தலைப்பில் 1939-இல் ‘விடுதலை’யில் வெளியான தலையங்கங்கள்

தமிழர் பண்பாடு