‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் தலைப்பில் 1939-இல் ‘விடுதலை’யில் வெளியான தலையங்கங்கள்

தமிழ்நாடு தமிழருக்கே என்று இப்போது நடைபெற்று வரும் பிரசாரத்தைப்பற்றித் தமிழ்நாட்டில் எங்கும் பேசப்பட்டு வருகிறது. நம் எதிரிகளும், தங்கள் சுயநலத்திற்கு ஆகவே நம் வட்டத்தில் இருக்கும் சில வேஷதாரிகளும் இதைத் திரித்துக் கூறுவதும், இதைப்பற்றி விஷமப் பிரசாரம் செய்வதும், இதற்கு எதிரான ஒரு கிளர்ச்சியை உண்டாக்கச் சூழ்ச்சி செய்வதுமான காரியங்களைப்பற்றி நாம் கேள்விப்படுவதோடு, சில விஷயங்களை நேரிலும் பார்க்கிறோம்.

இது விஷயமாய்ப் பெரியார் தூத்துக்குடியில் பேசிய பேச்சை வைத்து மெயில் பத்திரிகை எழுதிய ஒரு கண்டனத்திற்குப் பெரியார் சென்னை மெமோரியல் ஆலில் சொன்ன சமாதானம் சமீபத்தில் நம் பத்திரிகையில் வரக்கூடும். ஆனாலும் மெயில் பத்திரிகைக்குப் பெரியார் எழுதி அனுப்பிய விளக்கம் 20-ஆம் தேதி மெயிலில் பிரசுரிக்கப்பட்டிருப்பதுடன், அதன் தமிழ்க் கருத்து பின்னால் அநுபந்தமாய்ப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

என்றாலும், இனி அப்பிரசாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டியிருக்கிறபடியால், அதைப் பற்றிய விளக்கத்தை தொடர்ந்து தலையங்கமாக எழுதுகிறோம்.

குறிச்சொல் தோற்றம்

தமிழ்நாடு தமிழருக்கே என்ற அபிப்பிராயம் சென்ற வருஷம் டிசம்பரில் சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க (ஐஸ்டிஸ் கட்சி) மாநாட்டிலே வாசிக்கப்பட்ட பெரியார் தலைமைப் பிரசங்கத்திலேயே குறிப்புக் காட்டப்பட்டிருக்கிறது. மற்றும் அதற்கு முதல் நாள் வேலூரில் நடந்த தமிழர் மாநாட்டில் தலைமை வகித்த தோழர் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் அவர்களும் தமது தலைமைப் பேருரையில் விளக்கி இருக்கிறார்கள்.

மற்றும், அதுபற்றியே பெரிதும் தமிழ்நாடு தமிழருக்கே என்றும் சொல்ல இன்று தமிழ் நாடெங்கும் தமிழ் மக்களது லட்சியக் குறிச்சொல்லாகத் தமிழ் மக்களால் ஒலிக்கப்படுகிறது. அன்றியும் தமிழ்நாடு தமிழருக்கு என்பதில் யாருக்காவது அதிருப்தியோ, அபிப்பிராய பேதமோ இருப்பதாக இதுவரையும் நமக்கு எவ்விதத் தகவலோ, மறுப்போ வந்ததும் கிடையாது.

விஷமிகள் கூச்சல்

பார்ப்பனப் பத்திரிகைகள் சிலவற்றிலும், அவர்கள் கூலிகளது வாய்கள் சிலவற்றிலும் ஏதோ பொருத்தமற்ற கூப்பாடுகள் இரண்டொன்றைக் காணவும், கேட்கவும் நேர்ந்தது என்றாலும் அதுவும் எங்கும் மறுமுறை கிளம்பினதாகத் தெரியவில்லை.

ஒரு பார்ப்பனப் பத்திரிகை மாத்திரம் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றால், ‘எலி வளை எலிகளுக்கே’ என்று எழுதிற்று. மற்றொரு பார்ப்பனக் கூலியின் வாய் தமிழ்நாடு தமிழருக்கே என்றால், கர்நாடகனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை என்று கூவிற்று. உள்ளே இருந்தே உலை வைக்கக் கருதி இருக்கும் ஒரு தோழர், தமிழ்நாடு தமிழருக்கே என்றால் ஆந்திர மலையாளி கதி என்ன ஆவது என்று விஷமப் பிரசாரம் செய்தார். இவை தவிர வேறு விதமான எதிர்ப்புகளோ, அதிருப்திகளோ வந்ததாக நமக்குத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் சரி, அந்த லட்சியமே இன்று தமிழ் மக்களின் குறிக்கோளாய் இருப்பதால்அதை விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நாஸ்திகமல்ல

தமிழ்நாடு தமிழருக்கே என்பதில் நாஸ்திகமோ, மதமொழிப்போ, வகுப்புத் துவேஷமோ தொக்கி இருக்கிறது என்று யாராவது சொல்ல வருவார்களேயானால், அவர்கள் ஒன்று விஷயம் அறியாதவர்கள் அல்லது வேண்டுமென்றே விஷமப்பிரசாரம் செய்யும் அயோக்கியர்களே யாவார்கள். ஏன் என்றால், தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லும் தோழர்கள் சர். பன்னீர்செல்வம், குமார ராஜா அவர்கள் முதலாகிய தலைவர்கள் நாஸ்திகர்களோ மதமொழிக்கும் உணர்ச்சி உடையவர்களோ அல்ல. மேலே குறிப்பிட்ட ஜஸ்டிஸ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட பெரியாருடைய தமிழ் தலைமை பிரசங்கத்தில் 12-ஆவது பக்கத்தில் 2-ஆவது பாராவில் 15-ஆவது வரியில் இருந்தது.

“வங்காளிகளிடமிருந்தும், குஜராத்திகளிடமிருந்தும், காஷ்மீரி களிடமிருந்தும், சிந்தியர்களிடமிருந்தும் தமிழ்நாட்டினர், ஆந்திர நாட்டினர், மலையாள கன்னட நாட்டினர் பிரிந்துபோக வேண்டுமென்று எண்ணுவது தேசியத்திற்கு விரோதமாகுமா? அதேபோல் ஆரியர்களிடமிருந்து திராவிடர்கள் பிரிந்துபோகநினைப்பது தேசியத்திற்கு விரோதமாகுமா? ‘வெள்ளையர்’ ஆட்சியின் கீழ் இல்லாவிட்டால் நம்மைக் காத்துக்கொள்ள முடியாது” என்றால், சிலோன், பர்மா இவைகளைப் போலவோ ஆஸ்திரேலியா, கனடா இவைகளைப் போலவோ தமிழ் நாடோ - திராவிட நாடோ பிரிந்திருக்கலாமல்லவா என்று இருக்கிறது.

இந்தப் பிரசங்கம் படித்த பிறகே பெரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது தலைமையை ஒப்புக்கொண்டு ஆரவாரம் செய்து பதினாயிரக் கணக்கான மக்கள் அதைப் பின்பற்றுவதாய் உறுதி கூறி அமர்ந்தார்கள்.  ஆதலால், அக்கருத்து ஜஸ்டிஸ் கட்சியினருக்கோ, தமிழர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கோ திடீரென்று புகுத்தப்பட்டதென்று சொல்ல முடியாததால், அதைப்பற்றி யாரும்எவ்வித விஷமப் பிரசாரமும் செய்வதற்கு இடமில்லை என்பதற்கு ஆகவே இதை எடுத்துக் காட்டுகிறோம். மற்றும் அதே பிரசங்கத்தில் இக்கருத்துக்கு அவசியமான காரணங்களும் மிகமிக விளக்கமாகக் கூறப்பட்டிருப்பதால், தமிழ் மக்கள் மற்றொரு முறையும் அப்பிரசங்க முழுமையும் படித்துப் பார்க்க விரும்புகிறோம்.

தமிழ்நாடு என்றால் திராவிடமே

தமிழ்நாடு என்று இதுகாறும் பேசியும், எழுதியும் வருவதெல்லாம் தமிழ்நாடு என்பதற்குத் திராவிட நாடு என்ற பொருளோடேயல்லாமல், தமிழ்நாடு பிரிவினையையே கருத்தில் கொண்டு அல்ல என்பதை  முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஏனெனில், தமிழ்நாடு என்றால் திராவிடநாடு என்றும், திராவிடநாடு என்றால் தமிழ்நாடு என்றும் நாம் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் சிறிதுமில்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. அன்றியும், “திராவிடமே தமிழ் என்று மாறிற்று” என்றும், “தமிழே திராவிடம் என்றும் மாறிற்று” என்றும் சரித்திராசிரியர்கள் முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. பழங்காலத்து அகராதிகளும் அப்படியே சொல்லுகின்றன.

உதாரணாக 1926-இல் டி.ஏ. சுவாமிநாதய்யரால் பிரசுரிக்கப்பட்ட ஜெம் (ழுநஅ) டிக்ஷனரியில் 340-ஆம் பக்கம் 5-ஆவது வரியில் “திராவிட” என்பதற்குத் “தமிழ்நாடு” என்று தமிழில் அர்த்தம் போட்டிருக்கிறது.

கேம்பர்ஸ் 20-ஆவது நூற்றாண்டு டிக்ஷனரியில் 282-ஆவது பக்கம் 2-ஆவது கலம் 5-ஆவது வார்த்தை.

“திராவிடன் (Dravedan)  என்ற பதத்திற்கு ஆரியர்கள் அல்லாதாராகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் தென் இந்திய மக்கள்” என்றும், “திராவிடம் என்பதற்குத் தென்னிந்தியாவிலுள்ள ஒரு பழமையான மாகாணம்” என்றும் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது.

1904-இல் லண்டனில் பெயர்போன ஓர் ஆசிரியரால் பிரசுரிக்கப்பட்ட டிக்ஷனரியாக, டிக்ஷனரி ஆப் இங்கிலிஷ் லாங்வேஜ் என்ற பெரிய டிக்ஷனரி அதாவது இப்போது உலகிலுள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் வழங்கும்படியான பெரிய புத்தகத்தின் 257-ஆவது பக்கம் முதல்கலம் 4-ஆவது வார்த்தையாக இருக்கும் திராவிடன் என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் எழுதும்போது, “திராவிடம்-ஆரியரல்லாத மக்களைக் கொண்ட ஒரு பழமையான மாகாணம் என்றும், தமிழன் - (தமிழகம்) - ஆரியருக்கு முன்பிருந்த மக்கள், ஆரிய பாஷை அல்லாததைப் பேசுபவர்கள்” என்றும் எழுதியிருப்பதோடல்லாமல், இலங்கையும் திராவிடம் என்று எழுதி இருக்கிறது.

மற்றும், அனேக அகராதிகளும், ஆராய்ச்சி நூல்களும் தமிழ்நாடு என்றாலும், தமிழர்கள் என்றாலும் முறையே திராவிடம் திராவிடர்கள் என்றுதான் கருதப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய வேறில்லை. இதில் தமிழ்நாடு என்பதும், தமிழர் என்பதும் காங்கிரஸ்காரர்கள் பிரித்திருப்பதுபோல் ஒரு தனி இடத்தையும், ஒரு தனி பாஷையையும்தான் குறிக்கின்றது என்று யாராவது கருதுவார்களேயானால், அல்லது அந்தப்படிதான் கருத நேரிடும் என்று சொல்லப்படுமேயானாலும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்குப் பதிலாகத் திராவிட நாடு திராவிடர்களுக்கே என்று லட்சியக் குறிக்கோள் வைத்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு, இனி அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விலகட்டும் இன்றேல் வாதம் புரியட்டும்

ஆந்திர நாட்டில் சில ஜமீன்தாரர்கள் தங்களைத் திராவிடர் என்று ‘ஒப்புக்கொள்ளச் சம்மதிக்கவில்லை என்றும், தன்னைப் பொறுத்தவரை திராவிடனே என்றும் ஒரு ஆந்திரப் பெரியார் தெரிவித்திருக்கிறார். இதில் நமக்கு அதிசயம் தோன்றவில்லை. ஏனெனில், இங்கு தமிழர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் சிலரே சதா சர்வ காலம் தமிழன் ஆரியன் என்ற விவகாரம் பேசித் தமிழ் மக்களுக்குள் விளம்பரம் பெற்றுக் கொண்டவர்களே ஆரிய புராணங்களை ஆரியக் கடவுள்களின் புராணக் கதைகளை அதிலும், அவமானமும் ஆன ஆபாசக் கதையைப் பற்றி ஏதாவது கூறினால், கடவுளுக்குப் பெண்டுபிள்ளை, தாசி வேசி ஏதய்யா என்று கேட்டால், கோபித்துக்கொண்டு ஆரியக் கதைகளுக்கும் கூத்துக்களுக்கும் தத்துவார்த்தம் பேசவரும் போது, இவற்றை அறியாத ஒரு மனிதன் தன்னைத் திராவிடன் அல்ல என்று சொல்வதில் அதிசயமிருக்கக் காரணம் இல்லை.’

ஆகவே, அப்படிப்பட்ட விவகாரக்காரர்கள் ஒன்று விலகிக் கொள்ளட்டும்; அல்லது ஆண்மையுடன் வெளியில் வந்து வாதப்பிரதிவாதம் செய்யட்டும். இரண்டும் கெட்ட விதமாய்த் தங்கள் பிழைப்பும் வாழ்வும் இதில் சிக்கிக்கொண்டு விட்டதே என்பதற்கு ஆக விஷமப் பிரசாரம் வேண்டாம் என்றுதான் பணிவோடு வேண்டிக் கொள்ளுகிறோம்.

நிற்க, இந்தத் தேவைக்கு இப்போது என்ன அவசியம் என்று சிலர் கேட்கலாம். அதை விளக்க வேண்டியது மிகவும் அவசரமான காரியம் என்பதை நாம் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அடிமை வாழ்வு அகல!

இந்தத் தேவையை நாம் வெறும் அரசியல் ஆதிக்கத்தைக் குறி வைத்தே குறிப்பிடவில்லை. திராவிட மக்களின் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல், விஞ்ஞான இயல், தற்காப்பு இயல், பொது முன்னேற்ற இயல் ஆகியவைகளைக் கருதியே குறிப்பிடுகிறோம். ஏனெனில் உலகத்திலேயே தொன்றுதொட்டுச் சிறப்பாக இருந்துவந்த திராவிடநாடு இன்று அடியோடு மறைந்துபோய், அது ஆரியத்திற்கு அடியோடு அடிமைப்பட்டு ஆரிய நாடாகவே ஆகிவிட்ட நாடுகளுக்கு ஆக்கமளித்தும் ஓர் அடிமை நாடாக ஆரியர் ஆதிக்கத்தில் இருந்துகொண்டு, திராவிட மக்கள் என்றால் உலகினோர் காட்டு மிராண்டிகள் என்று மதிக்கும்படியாகவும் இருந்து, திராவிடர்கள் அரசியல், பொருளாதாரம், சமுதாயம், சமயம் முதலிய துறைகளில் அடிமைகளாய் அதாவது ஆரியர்கள் நன்மைக்கும், மேன்மைக்கும் மாத்திரமே வாழுகிறவர்களாய் இருப்பதாலேயே அதை மாற்றவேண்டும் என்பதற்காகவே இப்போது இது மிகவும் அவசரமான காரியம் என்று சொல்லுகிறோம்.

இன்றைய நிலை

இன்று திராவிடத்தில் உள்ள திராவிடர் சற்றேறக்குறைய 5 கோடி மக்களாவார்கள். ஆனால், அவர்களது நிலை என்ன? தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி, தொளுவன், இலங்கையவன்,  கிறித்துவன், துருக்கன், ஆதிதிராவிட, ஆதிஆந்திர,  ஆதிகர்னாடக, ஆதிக்கிரதஜாதி என்பனவாகிய பல ஜாதி வகுப்பு சமயங்களாகப் பிரிந்து ஆரியனுக்குப் பயந்து பாதுகாப்பும்  கேட்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். அரசியல், சமய இயல், சமுதாய இயல் முதலியவற்றில் திராவிடர்கள் ஆரியர்களையே எஜமானர்களாக-தலைவர்களாக, குருக்களாக, மேல் வகுப்பாராகக் கொண்டிருக்கிறோம்.

எவ்வளவுதான் ஆராய்ச்சி அறிவு மான உணர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டாலும், ஆரியன் கடவுளையே ஆரியன் சமயத்தையே, ஆரியன் ஆதிக்க புராணங்களையே பிரதானமாய்க் கொண்டு, அவற்றின் பயனாய் அவன் அனுபவித்து மீந்த எச்சிலைக் கொண்டு பயனடைய ஆசைப்படுகிறோம்.

ஆரிய சமயத்தால் இலாபம் யாருக்கு?

ஆரியர் சமயம், ஆரியர் கடவுள் என்று ஏன் சொல்லவேண்டுமென்று சிலர் கருதலாம். ஆனால், அக்கடவுள்களால் யார் பிழைக்கிறார்கள்? யார் மேன்மையடைகிறார்கள்? யார் மேன்மையை விளக்க அக்கடவுள்கள் உருவம் பெற்று இருக்கிறது? அக்கடவுள்கள் சம்பந்தமான கதைகளில் யாருடைய ஆதிக்கமும், பெருமையும் பிரச்சாரம் செய்து நிலை நிறுத்தப்படுகிறது? என்பனவாகியவைகளைக் கவனித்தால், நாம் ஏன் அவற்றைப் பிரித்துக் காட்டுகிறோம் என்பதோடு, அவைகளைப் பகிஷ்கரிக்கச் சொல்லுவதன் உட்கருத்தும் விளங்காமல் போகாது.

ஒருவன் “நான் மனுதர்ம சாஸ்திரத்தில் பண்டிதனாகி, மனுதர்ம சாஸ்திரத்திற்கு விரிவுரை வியாக்கியானம் எழுதிப் பதினாயிரம் புத்தகம் அச்சுப் போட்டுவிட்டேன்; இப்பொழுது மனுதர்ம சாஸ்திரத்தையும், அதில் கற்பிக்கப்பட்டிருக்கும் கடவுள்களையும் குற்றம் சொல்லுகிறார்களே என் கதி என்னாவது? நான் இதை எதிர்த்து ஒருகை பார்க்காமல் இருக்க மாட்டேன்” என்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு நம்மோடு வாதாடினால், நாம் இந்தச் சாஸ்திரப் பிரச்சார வயிறு வளர்ப்புக் கூட்டத்திற்குப் பயந்து கொள்வதா என்று சிந்தித்துப் பார்ப்போமானால், அப்படிப்பட்டவர்களின் எதிர்ப்பை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என்பது நன்றாய் விளங்கிவிடும்.

ஆரியரே தலைவராயினர்

மனுதர்ம சாஸ்திரத்திற்கும் ராமாயணம் முதலிய ஆரிய புராண இதிகாசங்களுக்கும் இன்று எவ்விதத்தில் பேதம் கற்பிக்க முடியும்?

இதைப்பற்றிய விவகாரத்தை மற்றொரு சமயம் வைத்துக் கொள்வோம். ஆனால், நாம் இந்தியா பூராவும் ஒரு நாடு என்றும், நம்மை இந்தியன் என்றும் அதனால் இந்து சமயத்தவன் என்றும் சொல்லிக் கொண்டும் பெரும் பரப்பில் இதுவரை இருந்து அரசியல் கிளர்ச்சியும், சமயக் கிளர்ச்சியும் செய்து வந்ததில் என்ன பலனடைந்திருக்கிறோம்?

இன்று நம்முடைய எல்லா இந்திய அரசியல் தலைவர்கள் காந்தியாரும் - ஜவஹர்லால் பண்டிதரும் - நம் மாகாணத்திற்குத் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும், சத்தியமூர்த்தி சாஸ்திரியாருமாய் இருக்கிறார்கள். ஆச்சாரியார் சாஸ்திரியார்கள் அரசியல் தலைமை வகித்து இந்த 30 மாத காலத்தில் நமக்குச் செய்த காரியங்கள் என்ன என்பதை அனுபவத்தில் பார்த்ததோடு அனுபவித்து வந்திருக்கிறோம்.

ஆச்சாரியார் நமக்கு இம்மாதிரி சுய நிர்ணய முயற்சி என்றென்றும் வரமுடியாமல் இருக்கும்படிச் செய்ய, நமது கலைகளையும் பாஷைகளையும் அடியோடு ஒழிப்பதற்கு ஆரிய பாஷையைத் திராவிட மக்களுக்குள் குழந்தைப் பருவத்தில் கட்டாயமாகப் புகுத்தினார். எதிர்த்தவர்களை ஆண், பெண் அடங்கலும் தமிழர்களின் ஸ்தாபனங்களின் தலைவர்கள் உள்பட அடக்குமுறைச் சட்டத்தினால் பல வருஷக்கணக்காய்த் தண்டித்துப் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை அபராதம் போட்டுச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தார்.

திருப்பதியில் ஆரியப்பள்ளி

ஆரிய புராணக் கதைகளை ஆதாரமாய்க் கொண்ட கல்விகளைக் கற்பிக்கத் திருப்பதியில் பன்னிரண்டு லட்ச ரூபாய் செலவில் கல்லூரி வைத்து ஆரியர்களையே உபாத்தியாயர்களாய்ப் போட்டுத் திராவிடன் என்கின்ற உணர்ச்சியே அற்று ஆரியமயமாக வேலை செய்துவிட்டார்.

பள்ளிக்கூடப் புத்தகங்களில் ஆரியர் - திராவிடர் என்கின்ற வார்த்தைகளே வராக்கூடாதென்று தடுத்துப் புதிய முறையில் புத்தகங்கள் எழுதச் செய்தார். அதுபோலவே இப்போது புதிய இந்து தேச சரித்திரங்கள், எழுதப்பட்டு, அதில் ஆரியன் எப்போது இந்தியாவுக்கு வந்தான் என்கிற விஷயங்களையே மறைத்து, அலெக்சாந்தர் வந்த காலத்திலிருந்தே சரித்திரங்கள், பாடங்கள் துவக்கி எழுதப்படுகின்றன.

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள், சமஸ்கிருதத்தைக் கட்டாயப்பாடமாக்கத் திட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்.
படிப்பை வருணாச்சிரம முறையாக்கி 4-ஆம் வகுப்பாருக்குக் கைத்தொழில் மாத்திரம் ஜீவனமும், அறிவும் ஆக இருக்க வேண்டுமே ஒழிய மற்றவை தேவையில்லை என்று வார்தா திட்டம் வகுக்கப்பட்டு, நடைமுறையில் வந்து கொண்டிருக்கிறது.

அரசியல் பதவியில், உத்தியோகத்தில் ஆரியரல்லாத அதாவது திராவிட மக்கள் அமர்ந்திருந்ததை ஒழிக்கச் சூழ்ச்சி செய்து, இன்னும் அய்ந்து வருஷகாலத்தில் சக இலாக்காக்களிலும் ஆரியர்களே மாகாண ஜில்லா தலைமை உத்தியோகத்தில் இருக்கும்படியாகச் செய்யப்பட்டாய் விட்டது.
இந்திய அரசியல் தலைவர் காந்தியாரே ராமராஜ்யத்திற்காகவும் வருணாசிரமப் புனருத்தாரணத்திற்காகவும் பாடுபடுகின்றனர். அதுதான் காங்கிரஸ் கேட்கும் சுயராஜ்யத்தின் தத்துவமென்று பச்சையாய்ச் சொல்லிவிட்டார்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் சுயபுத்தியோ சுயமரியாதையோ உள்ள திராவிட மகன் எந்தத் துறையிலும் தலைவராக இருக்க யோக்கியதை இல்லாமல் செய்யப்பட்டாய்விட்டது. ஆரியர்களைக் கண்டால், திராவிட மக்கள் நடுங்கிச் சரணடையும்படியான கொடுங்கோன்மை முறையே நல்லாட்சி என்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

ஆச்சாரி கேட்ட வரம்

காங்கிரசின் சார்பாகப் பல தலைவர்களை வைசிராய் கூப்பிட்டார். ஒரு திராவிடனையாவது கூப்பிட்டு பேசினாரா? கூப்பிடத் தகுந்த தகுதி உண்டாக்கப்பட்டதா என்று பார்த்தால், அரசியலில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது விளங்கும். ஆனால், வைசிராய்க்குக் காங்கிரஸ் உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்து மறுபடியும் பதவி ஏற்றுச் சண்டைக்குக் காங்கிரஸ் உதவி செய்வதானால், பணம் கொடுப்பவர்கள் யார்? யார்? ஏராளமாகச் சண்டைக்குப் பதிவு செய்து கொண்டு போய் உயிர் கொடுப்பவர்கள் யார் என்று பார்த்தால், அத்தனைபேரும் திராவிட மக்களாகவே இருப்பார்கள் என்பது விளங்கும். தோழர் ஆச்சாரியார் சண்டைக்கு உதவி செய்ய வைசிராயை ஒரு நிபந்தனை கேட்டார். அதாவது வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குப் பட்டம் கட்டினால், பிறகு சுக்கிரீவன் உதவி செய்வான் என்று கூறினார். இதில் வாலி என்று தோழர் ஆச்சாரியார் குறிப்பிட்டிருப்பது திராவிடர்களை, அதாவது ஜஸ்டிஸ் கட்சியாரையும் அத்தோடு கூட அந்நியர்களாக ‘மிலேச்சர்’ என்று அவர்களால் சொல்லப்படும் முஸ்லிம்களையும் கொன்று, சுக்கிரீவர்களான அதாவது சகோதரத் துரோகிகளான, எப்படியெனில் தங்களது நாட்டிலேயே தங்களுக்கு முன்பே ஆட்சியில் இருந்தவர்களான சகோதரர்களைக் கொல்வதற்காக எதிரிகளுடன் சேர நிபந்தனை கேட்கும் துரோகியான காங்கிரசுக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்று நிபந்தனை கேட்கிறார். இதிலிருந்தே ஆரியருடன் கூடவோ அல்லது ஆரியருக்கு பூரணமாய் அடிமைப்பட்ட மாகாணத்தார்களுடன் கூடவோ திராவிடரும் சேர்ந்திருந்தால், முன்னுக்கு வர முடியுமா? மானத்துடன் வாழ முடியுமா என்று சிந்தித்துப் பார்க்க வாசகர்களை வேண்டுகிறோம்.

விடுதலை - தலையங்கம் - 21.11.1939

II


நேற்று இத்தலைப்பின் கீழ் எழுதிய தலையங்கத்தில் தமிழ்நாடு தமிழருக்கு என்பது திராவிடம் திராவிடருக்கே என்று கருத்துக்கொண்டதென்றும், திராவிடம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் பழைய திராவிட எல்லையையும் திராவிட பாஷை களையுமே குறிப்பது என்றும், திராவிடம் திராவிடருக்கே என்பதன் கருத்து, “இந்தியா”வின் பிணைப்பில் இருந்து திராவிடத்தைப் பிரித்து, அதை ஒரு தனிநாடாக ஆக்க வேண்டுமானால், திராவிட பாஷைப்படி உள்ள பாகங்களைத் திராவிட தேசத்திற்குள் உள் மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனிப் பிரதிநிதித்துவமோ, சட்டசபையோ ஏற்பாடு செய்து, முக்கிய அதாவது எல்லா மாகாணங்களையும் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொதுப் பாதுகாப்பு, எல்லா மாகாணத்திற்கும் சம்பந்தப்பட்ட தபால், தந்தி, ரயில், மின்சாரம், பொதுத் தேவை, தொழிற்சாலை ஆகிய விஷயங்களில் அரசாங்கத்திற்குச் சம்பந்தமும் அதிகாரமும் கொடுத்துவிட்டு, மற்றவைகளை அந்தந்த மாகாணமே முழுவதும் பார்த்துக்கொள்ளும் படியாகவும், கூடுமானவரை அந்தந்த மாகாண உத்தியோகம் பொருளாதாரம் முதலாகியவை பற்றிய நிர்வாக அதிகாரம் அந்தந்த மாகாணத்திற்கே அவரவர் எண்ணிக்கைப்படி அளிக்கக்கூடிய தாகவும் செய்து கொள்வது என்ற கருத்திலும்.

பிணைந்திருந்து பயன் என்ன?

இப்படிச் செய்வதானது எந்தவிதத்திலும் நாஸ்திகமென்றோ, மதமொழிப்பு என்றோ சொல்வதாகாது என்றும், மற்றும் இதனால் உலகிலோ இந்தியாவிலோ உள்ள மற்ற மக்களுடன் துவேஷம் கொண்டதாக ஆகாதென்றும், இந்தியா உடன் ஒன்றாய் இருந்ததால் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்றும், அதற்கு மாறாகப் பல கெடுதிகள் ஏற்பட்டனவென்றும், முன்னேற்றம் அடையாமல் நிலைமை தேங்கிவிட்டதோடு அல்லாமல் குறிப்பிடத்தகுந்த அளவுக்குப் பின்னாலும் போயிருக்கிறோமென்றும், நாம் தனித்து நின்று நம் காரியத்தையே நாம் கவனிப்பதற்கு ‘இந்தியா’ என்னும் பெரும் கசாகூளத்திலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால், இனியும் கேடடைவோம் என்றும், சமுதாயத்துறையில் நாம் மைனாரிட்டிகளாக ஆகிவிட்டோம் என்றும், சமயத்துறையில் கீழ் மக்களாகவும், நாலாம் ஜாதியாகிய பிறவி அடிமை மக்களாகவும் ஆய்விட்டதோடு, உலகத்தின்முன் காட்டுமிராண்டிகளாகக் கருதப்பட்டு விட்டோமென்றும், மற்றும் நாம் ஆரியர்களாலும், அவர்கள் நம்மை நசுக்க உதவி அளிக்கும் வட நாட்டாராலும் முறையே நாம் எவ்வளவு காட்டிக் கொடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் தலை தூக்க முடியாத நிலையில் ஆழ்ந்துவிட்டோம் என்றும், இத்தியாதி காரியங்களால் நாம் இனி “இந்தியா” என்று போலிக்கூட்டு சம்பந்தமில்லாமல் விலகிக் கொண்டு திராவிட எல்லை மாத்திரம் கொண்ட திராவிடம் என்கின்ற ஒரு தேசத்தைத் தனித் தேசமாக ஆக்கிக் கொண்டு பூரண சக்தி ஏற்படும் வரை பிரிட்டிஷ் பாதுகாப்பு உதவியில் இருந்து வந்து, பிறகு உலகில் உள்ள மற்ற பூரண சுயேச்சைத் தனி நாடுகளில் ஒன்றாக விளங்கவேண்டும் என்பது ஆகவும் எழுதி இருந்தோம்.

மற்றும், இதுபற்றி மெயில் பத்திரிகைக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்கும் பதில் கூறி, அதன் கண்டனங்களுக்கும் சமாதானம் கூறி, அப்பத்திரிகைக்கு அனுப்பிய சேதியை மொழி பெயர்த்துக் கருத்தையும் நேற்று வேறு பக்கத்தில் பிரசுரித்திருந்தோம்.

என்றாலும், நேற்றைய தலையங்கத்தின் முடிவில் குறிப்பிட்டுள்ளபடி அது சம்பந்தமான மற்ற சில விவரங்களையும் விளக்க அதன் தொடர்ச்சியாக இத்தலையங்கம் எழுதுகிறோம்.

பொதுவாகவே இன்றைய உலகக் கொள்கையானது ஒவ்வொரு நாடும் பெரும் பரந்த ஜனத்தொகை, எல்லை ஆகியவற்றின் பிடிப்பினிலிருந்து பிரிந்து சிறு சிறு அளவான சிறு நாடாக இருந்து அந்தந்த எல்லையின் சமுதாயத்தின் தேவைகளையும் முன்னேற வழிகளையும் கவனிப்பதுதான் பொதுஜன சமுதாய முதலிய முன்னேற்றத்திற்கு அனுகூலமான வழி என்ற கொள்கை (டிசென்றலேஷன்) என்று தெரிய வருகிறது.

எப்படி என்பதற்குப் பிரத்தியட்ச உதாரணம் கிரேட் பிரிட்டனிலிருந்து அயர்லாந்து பிரிந்து முற்போக்கடைந்து வருவதும், அது ஒரு சமயம் அதிக கஷ்டமான உதாரணமென்றால் இந்தியாவில், இருந்து பர்மா பிரிந்து முன்னேற்றமடைந்து வருவதும் போதுமானதாகும்.

தனி மனிதனுக்கோ ஒரு தனிச் சமுதாயத்திற்கோ முன்னேற்ற உணர்ச்சி வரவேண்டுமானால், அதைத் தூண்டும் அவசியம் ஒன்று இருந்தே ஆகவேண்டும். இன்றைய நிலைமையில் இந்தியா முன்னேற்ற மடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சி நமக்கு ஏற்பட வேண்டுமானால், அதைத் தூண்டும் அவசியம் நமக்கு என்ன இருக்கிறது? இதுவரை இந்தியா அடைந்த முன்னேற்றத்தில் அல்லது இதுவரை இந்தியாவுக்குக் கிடைத்த லாபகரமான சாதனத்தில் யார் என்ன பலனை அடைந்தார்கள்? குறிப்பாக நமக்கு-திராவிடத்துக்கு அதனால் என்ன நன்மை ஏற்பட்டது? அல்லது எந்தவிதமான கஷ்டம் ஒழிந்தது? என்று பார்த்தால், நம் போன்றவர்கள் வெட்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோமே அல்லாமல், திருப்தி அடையத்தக்க சமாதானமானது உண்டா என்று கேட்கிறோம்.

முன்னேற்றம் என்றால் என்ன?

பொதுவாகவே முன்னேற்றம் ஒரு நாட்டு மக்கள் சமுதாய வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் முன்னேறுவதே முக்கியமான தாகும். அதற்கேற்றபடி நாட்டின் தலைமை உயர்த்தப்படுவதேயாகும்.

மற்றும், மனிதன் மற்றவனைவிடத் தான் மிகமிகக் கீழானநிலையில் இருக்கிறோமே என்று அதிருப்தியும், துக்கமும் படாமையும் ஆகும். அப்படிப்பட்ட நிலைமையில் திராவிடர்களாகிய நாம் நம்மில் மிகப் பெரும்பாலோர் சமுதாயத் துறையிலாவது, பொருளாதாரத் துறையிலாவது அதற்கேற்ற கல்வி அறிவிலாவது, முன்னேற்றமோ அல்லது மற்ற மக்களுக்கும் நமக்கும் அதிகமான பேதமில்லாத தன்மையோ பெற்றிருக்கிறோமோ?

அப்படி இல்லையானால், கூடி இருப்பதில் என்ன பயன்? நமது பங்காளிகளுக்கு மேலாக நாம் உழைத்துப் பயிரிட வேண்டும். அதன் பலனை நமக்கு மேல் நமது பங்காளிகளே அனுபவித்துக் கொண்டு நாம் பட்டினியால் செத்துப் போகாமலிருக்க மாத்திரம் (ஏனெனில் செத்துப் போனால் நமது பங்காளிகளுக்கு இம்மாதிரி பாடுபட ஆள்கள் கிடைக்காமல் போய்விடுமே என்கின்ற சுயநல கவலைமீது) உயிர்க்கஞ்சி மாத்திரம் பெற அருகதை உடையவர்கள் என்றால், எப்படி அயலார்களோடு கூடி ஒத்துழைக்க முடியும். ஆதலால்தான் நாம் தனித்து நமது நிலத்தைப் பிரித்துக்கொண்டு நமது ஏர்களைத் தனியாய் ஓட்டி ஆழ உழுது பயிரிட்டுக் கொள்ளுகிறோம் என்று சொல்லுகிறோம். இதனால் யாருக்கும் எவ்வித நிலையான கெடுதியும் ஏற்பட்டுவிடாது.

கைத்தொழில்

திராவிடநாடு பழங்கால சரித்திரத்தில் கைத்தொழிலில் மேன்மையுற்றிருந்ததாகச் சரித்திரங்களால் தெரிகிறது. உதாரணமாக யுத்த விஷயங்களில் இந்தியா பூராவுக்கும் இன்று உள்ள தகுதி உதைப்பவனைக் கண்டால் அஹிம்சை பேசி உதை வாங்கிக் கொள்வதும், இளைப்பாளியைக் கண்டால், “நாடு அஹிம்சைக்கு லாயக்கில்லை; கையில் கிடைக்காததை எடுத்து அடித்து ஒழிக்க வேண்டியதில்லை” என்று சொல்லுவதுமான அளவில்தான் இந்த 20-ஆவது நூற்றாண்டு இந்தியா இருக்கிறது.

ஆனால், 3000, 4000 வருடத்துக்கு முந்தின தமிழ்நாட்டுச் சரித்திர இலக்கியத்தில் யுத்த விஷயத்தில் மனிதன் உதவி இல்லாமல் மதிற்சுவர்களே போரிட்டிருக்கின்றன. அதாவது மதில்மேல் இயந்திரப் பொறிமனிதன் நின்று கொண்டு ஈயக்குண்டுகளை வார்த்து வீசி எதிரிகள் மீது எறிவதும், இயந்திரங்கள் சரமாரியாய்க் கவண் கற்களை வீசுவதும் இயந்திர மனிதன் பறப்பதும், மயில் போன்ற ஒரு பொறியில் மனிதன் புகுந்து கொண்டு ஆகாய மார்க்கமாகப் பறந்து போவதுமான பல அரிய கைத்தொழில்கள் இருந்திருக்கின்றன. இவை சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை முதலாகிய பழங்காலத் திராவிடர் சரித்திர இலக்கிய இலக்கணங்களில் காணலாம்.

இவற்றை நாம் பாட்டி கதையாகக் கூறுவதாக யாரும் கருதிவிடக் கூடாது. ஏனெனில், பாட்டி கதை என்பது ராமாயணம், பாரதம், பெரியபுராணம், சின்னபுராணம், மச்சப்புராணம், தவளைப்புராணம் ஆகியவற்றில் வரும் தெய்வீக புஷ்பக விமானங்கள் அதாவது மனிதனுடைய அறிவு முயற்சி இல்லாமல் நினைத்த மாத்திரத்தில் நினைத்தபடி தானாகவே ஆகக்கூடியதும், ஆகாயத்தில் மறைந்திருந்து சண்டை போடுவதும் போன்ற மனோ கற்பனைச் சாதனங்கள் போன்ற கட்டுக்கதை அல்ல - அறிவுக்கும், விஞ்ஞானத்திற்கும் ஏற்ற முறையில் ஒரு மனிதன் செய்தது இருந்ததாகவே சொல்லப்படுகிறது. இன்றும் பொறிகளால் அன்றி மக்கள் கையினால் செய்திருக்க முடியாது என்று சொல்லத் தகுந்த அனேக காட்சிகள் திராவிடத்தில் பிரத்தியட்சத்தில் பார்க்கலாம். இம்மாதிரியான காரியங்கள் இன்று வடநாட்டில் இவ்வளவு இருக்கிறதென்று சொல்ல முடியாது.

மேனாடும் ஆரியமும்

இப்படிப்பட்ட பழைய சரித்திர உண்மைகள் நம்பப்படாவிட்டாலும் சரி, தள்ளி வைக்கப்பட்டாலும் சரி, அதையும் பிடித்துக் கொண்டு நம் பெருமையைப் பேச நாம் வரவில்லை. ஆனால் இன்றோ அற்புதப் பொறிகளும் அதாவது இயந்திரங்களும் புதிய புதிய அதிசயமான கண்டுபிடிப்புகளும் இந்திய மக்கள் நித்திய வாழ்க்கையில் அனுபவித்து இன்புறும் நூற்பு நெசவு முதலிய ஆலைகளும் தந்தி, கம்பியில்லா தந்தி, ஆகாய விமானம், நீராவி வண்டி, எண்ணெய் வண்டி, மிதி வண்டி, கிராம போன், நடிக்கும் பேசும் சினிமா, புகைப்படம், எக்ஸ்ரே, ரேடியோ மூலம் படம் முதலான பல அற்புதங்கள் மேல் நாட்டாரால், அதுவும் சிறு சிறு நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்திற்குப் பயன்பட்டு மக்கள் இன்புறுவதைப் பார்க்கின்றோம்.

இந்தியா ஒன்றாயிருந்து அந்தராத்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மகாத்மாவைத் தலைவராக, வழிகாட்டியாக, ஞானாசிரியராகக் கொண்ட இந்திய மக்கள் கண்டுபிடித்ததென்ன என்றால், கைராட்டினம் தக்கிளி, கட்டை வண்டி, 51 ஜதை மாடுகளைப் பூட்டி இழுக்கும் விசை வேகம், கருப்பட்டி, கைக்குத்து அரிசி, கோணி வேஷ்டி, அதுவும் முழங்காலுக்குமேல் கட்டிக்கொண்டு காட்டுமிராண்டிகளை நினைவூட்டுதல், உலக நிலை கவனிக்காமல் உச்சிக் குடுமியைக் காட்டிக்கொண்டு மழுங்கச் சிரைத்த தலையுடன் ஆபாசமாய்த் திரிதல் இவைதான் இந்தியா இன்றைய சகாப்த அற்புதங்களாய்க் கண்டுபிடிக்கப்பட்டு விளங்குகின்றன.

வடநாட்டவரின் கூலிகள்

அன்றியும் விஞ்ஞானம், புதியகண்டுபிடிப்பு, மந்திர காரியங்கள் முதலாகியவை இன்றைய இந்தியாவுக்குக் கசப்பாய் இருப்பானேன்? உலகில் இந்தியாவைத்தவிர வேறு எந்தப் பாகத்திலாவது அபிசீனியாவிலோ, அல்லது இன்னும் பழைய ஆதி மக்கள் போன்றவர்கள் வாழுமிடங்களிலோ இயந்திரம் கூடாதென்று சொல்லுவோருண்டோ? ஆனால், இயந்திர பிசாசு என்று சொல்லித் திராவிட நாட்டில் மாத்திரம் இயந்திரம் தலை எடுக்காமல் செய்துவிட்டு, இந்தியாவிற்குள்ளாகவே தன் சுயசாதி உள்ள மற்ற மாகாணக்காரர் களைக் கொழுக்க வைத்து, அவர்களிடம் லட்சம் பத்து லட்சம் பெற்றுத் திராவிட நாட்டு விபீஷணர்களுக்கும், அனுமார், சுக்கிரீவன் அங்கதன்களுக்கும் கூலிகொடுத்து வாலி, ராவணன் போன்ற அவர்களது பெயர்களையும் வீரர்களையும் சூழ்ச்சியில் கொல்லச் செய்வதும், திராவிட நாட்டில் உள்ள சில இழி மக்களைத் தேர்தலுக்கு நிறுத்தி, மற்ற மாகாணத்தாரிடம் திராவிடத்தைக் காட்டிக் கொடுத்துப் பெற்றுவந்த பணங்களைச் செலவு செய்து வெற்றி தேடிக் கொடுத்து, திராவிட மக்கள் ஸ்தாபனங்களை மைனாரிட்டியாகக் காட்டி, தங்கள் சிறு ஸ்தாபனத்தை ‘மெஜாரிட்டி’யாகச் செய்து கொண்டு திராவிட பாஷை, கலை, நாகரிகம், சரித்திர உண்மைகள், சுதந்திர உணர்ச்சி முதலியவை மறையச் செய்வதுமான காரியம் செய்வதானது, திராவிடம் தனித்து இருந்திருக்குமானால் முடிந்திருக்குமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

திராவிடம் தனித்திருக்குமானால் திருநெல்வேலி ஜில்லாவிற்கு தோழர்கள் ஒரு சொக்கலிங்கமும், ஒரு யக்ஞேஸ்வரசர்மாவும், ஒரு லட்சுமி அம்மாளும் (இவர்களது தகுதியும் யோக்கியதையும் பொதுமக்கள் அறிந்ததே) ஆகியவர்கள் திராவிடர்களுக்குப் பிரதிநிதியாகவும் மேடை குடும்பமும், சீனா - வானா குடும்பமும், இலஞ்சி குடும்பமும், சாவடி குடும்பமும் இன்று மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கவும், நாலாந்தர ஆள்களுக்குப் பின்னால் கொடி பிடித்துக் கொண்டு திரியவும் நேரிட்டு இருக்குமா? அதுபோல மற்ற ஜில்லாக்களையும் பார்ப்பதற்கு ஆகக் கோவை ஜில்லாவைக் குறிப்பிடுகிறோம்.

கோவை ஜில்லாவில் அந்த ஜில்லா பெருமக்களின் சமுதாயத் தலைவர்களான இரண்டு பட்டக்காரர்களும் தமிழ்நாடு பிரதிநிதித்துவ சாதியில் இருந்து தள்ளப்பட்டுப் பொது வாழ்விற்கு லாயக்கில்லை என்று தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். கோவை ஜில்லா பிரமுகரான தோழர் ரத்தினசபாபதி முதலியார் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு விட்டார். மற்றொரு பிரமுகரான ராமலிங்கம் செட்டியார் மாங்கல்யம் கழட்டப்பட்டுவிட்டார்.  இவர்கள் பொது வாழ்வில் சகுனத்தடையாக மதிக்கும்படி செய்யப்பட்டு விட்டார்கள். ராஜாக்கள், ஜமீன்தார்கள் புறமுதுகிடும்படி செய்யப்பட்டுவிட்டார்கள். இவர்களில் யாராவது தோழர் ஆச்சாரியார், சத்தியமூர்த்தியார், குப்புசாமி, அண்ணாமலை,  உபயதுல்லா சாயபு, சுப்பையா, சுப்பிரமணியர்கள் ஆகியவர்களுடைய தகுதியிலோ, ஒழுக்கத்திலோ, நாணயத்திலோ, தேசாபிமானத்திலோ குறைந்தவர்கள் என்று சொல்ல முடியுமா? மற்றென்ன காரணம் என்றால், திராவிடம் திராவிடருக்கல்லாமல் ஆரியர்களுக்கும், ஆரியப் பனியாக்களுக்கும், ஆரிய புரோகிதர்களுக்கும் ஆக இருப்பதனால் அல்லாமல் வேறு என்ன என்று சொல்ல முடியும்? திராவிடக் கிறித்தவர்கள், திராவிட முஸ்லிம்கள் என்று சொல்லப்படுபவர்களுடைய யோக்கியதைதான் எப்படி இருக்கிறது?

தமிழ் நாட்டுக்கு முஸ்லிம் பிரதிநிதி தோழர் உபயதுல்லா சாயபு - மற்றொருவர் தோழர் யாகூப் உசேன். இவர் திராவிட நாட்டவர் அல்ல என்பது யாவரும் அறிந்ததே. கிறித்தவர்களில் யாரோ ஒரு தோழர் வர்க்கியாம். தமிழ்நாட்டில் அல்லது திராவிட நாட்டில் முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இவர்கள் பிரதிநிதியாய் இருக்க நேர்ந்ததற்குக் காரணம் திராவிடம் திராவிடருக்கு அல்லாமல், ஆரியருக்கும், பனியாக்களுக்கும், மார்வாடிகளுக்கும், புரோகிதர்களுக்கும் ஆதரவுக்காக இருந்தது என்பதல்லாமல், வேறு என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

திராவிடர்கள் எத்தனையோ மேன்மையும், நாகரிகமும் தன்மானமும், வீரமும் பொருந்திய மக்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கும், ஆரியர் மிலேச்சர்களாக, காட்டுமிராண்டிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் அவரவர்கள் கலை, சமய நூல்கள் முதலியவைகளே போதுமான சாட்சயம் என்றாலும், உலக சரித்திர ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்தெழுதி இருக்கிற உண்மை ஆயிரக்கணக்காகப் பார்க்கலாம் என்றாலும், மற்றும் ஆரியத் தன்மையை உணர வேண்டியவர்கள் இந்து சமய சைவ வைணவ சம்பந்தமான, அவற்றின் கடவுள்கள் சம்பந்தமான புராணங்களைப் பார்த்தால் கண்ணாடிபோல விளங்கும்.

அவை சிறிதும் சம்பந்தம் இல்லாத திராவிடர்கள் நிலை இன்று எப்படி இருக்கிறது? திராவிட நாட்டில் உள்ள தெருப்பெருக்கி, கக்கூஸ் கழுவி, மூட்டை தூக்கி, வண்டி இழுத்து, பங்கா இழுத்து, எச்சிலை எடுத்து இதுபோன்ற மற்றும் பல தொழில் செய்பவர்கள் 100-க்கு 100 பேரும் திராவிட ஆண் மகனும் திராவிடப் பெண்மணியுமேயாகும். ஆனால், இதே திராவிடத்தில் பிழைக்க வந்துள்ள ஆரியர்கள், குஜராத்திகள், மார்வாடிகள், பார்சிகள், பஞ்சாபியர்கள் முதலிய அந்நியர்கள் திராவிட நாட்டில் 100-க்கு 100 பேர் எப்படி உயர்ந்த, உன்னத, மேன்மையான நிலையில் ‘பூ தேவர்களாக’ கோடீஸ்வரர்களாக, மகாத்மாக்களாக, ஆச்சாரியசுவாமிகளாக, உலகப் பிரசித்தியான பெரியோராக அறிவாளியாக விஞ்ஞானியாக விளம்பரப்படுத்தப்பட்டு வாழ்கிறார்கள் என்பது யாரும் அறிந்ததேயாகும்.

இதற்குக் காரணம் திராவிடம் திராவிடருக்கில்லாமல் மேற்கண்ட கூட்டத்தாருக்காக இருப்பதினாலா அல்லது வேறு காரணத்தினாலா என்று கேட்கிறோம்.

ஆகவே, இவற்றிலிருந்து திராவிடம் தனித்து இருந்து தனது பண்டைய பெருமைகளில் உள்ள மேன்மைகளையும், உலக முற்போக்கில் தகுதியானதும் முன்னேற்றமானதுமான பெருமைகளையும், ஸ்தானத்தையும் அடைய வேண்டியது அவசியமா? அல்லது ஜட்கா வண்டிக்காரன் மூலமாகத்தான் குதிரைகள் மோட்சமடைய வேண்டுமென்பது போலவும், செக்கோட்டியின் மூலமாகத்தான் மாடுகள் மோட்சமடைய வேண்டுமென்பது போலவும் ஆரியர்கள், பனியாக்கள், மார்வாடிகள் முதலியவர்கள் மூலமாகத்தான் திராவிடர்கள் மோட்சமடைய முடியுமென்று கருதிக் கொண்டு, “இந்தியா” உடன் கலந்திருப்பதா? என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். மற்றும் திராவிடர் - அந்நியர் வாழ்க்கை முறை முதலியவைகளைப் பற்றிப் பின்னர் எழுதுகிறோம்.
விடுதலை - தலையங்கம் - 22.11.1939

III


நேற்று முன்தினமும், நேற்றும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற தலைப்பின் கீழ் அதன் கருத்தையும், அவசியத்தையும், முறையையும் விளக்கி எழுதியிருந்ததுடன், மறுபடியும் அதைப்பற்றித் தொடர்ந்து திராவிடருக்கும் அன்னியருக்கும் உள்ள வாழ்க்கைமுறைப் பேதம் பற்றி எழுதப்படும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி இன்று எழுதப் போகும் இந்த 3-ஆவது தலையங்கத்தில் முதலாவதாகத் திராவிடர்கள் - ஆரியர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களிருவருக்கும் எப்படிச் சம்பந்தமேற்பட்டது, அவர்களுடைய வாழ்க்கைமுறைப் பேதம் எப்படிப்பட்டது என்பவைகளை எடுத்துக்காட்ட இதை எழுதுகிறோம்.

திராவிட நாட்டுக்கு ஆரியர்கள் குடியேறித் திராவிடர்களை அடக்கிக் கீழ்மைப்படுத்தியவர்கள் என்பதைப்பற்றி நாம் விளக்க வேண்டியதில்லை. ஆரியர் திராவிடர் நாட்டுக்கு வருவதற்கும் முன் திராவிட நாடு கலைகளிலும், நாகரிகத்திலும்  தலைசிறந்து விளங்கி வந்தது என்பது பற்றியும், நாம் விளக்க வேண்டியதில்லை என்றாலும், இவ்விரண்டுக்கும் ஆதாரமாக இரண்டொரு சரித்திராசிரியர்கள் அபிப்பிராயங்களை எடுத்துக்காட்டுவது பொருந்துமென நினைக்கிறோம்.

“மேற்குத் திபேத்தையும் ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி ஆரியர்கள் இந்தியாவுக்குக் குடியேறியவர்களாவார்கள். அவர்களது பாஷை சமஸ்கிருதம் போன்றது, இந்தியாவுக்கு வந்ததும் தங்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள் முதலியவற்றைத் தங்கள் இஷ்டப்படித் தங்கள் பாஷையிலேயே எழுதிவைத்துக் கொண்டார்கள்”.

என்று சர்  என்றி ஜான்ஸ்பட்டளர் என்கின்ற பிரசித்திபெற்ற ஆராய்ச்சியாளர், “இந்தியாவில் அன்னியர்கள்” என்ற புத்தகத்தில்
19-ஆவது பக்கத்தில் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி இருக்கிறார்.

“ஆரியர்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமான ஒழுக்க ஈனமான காரியங்களில் பற்றுடையவர்கள்.”

இது ராகேஸ் என்னும் பேராசிரியர், “வேதகால இந்தியா” என்பதில் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

“வட இந்தியாவில் இருந்து திராவிட கலை நாகரிகம் முதலியவைகள் யாவும் ஆரியர்களால் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டன, ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் செய்ய முடியவில்லை,”

இது “பண்டைத் தமிழரின் வரலாறு” என்கின்ற ஆராய்ச்சிப் புத்தகத்தில் 4-ஆம் பக்கத்தில் இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்குறியானது நாம் முன் தலையங்கத்தில் குறிப்பிட்ட அதாவது திராவிடம் இன்னமும் ஆரியமயமாகவில்லை என்பதற்கு ஆதரவளிப்பதாகும்.

“ஆரியரல்லாத இந்நாட்டுத் திராவிடப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் துன்புறுத்தப்பட்டு காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் நூல்கள் எழுதிகொண்டார்கள். இதுவும் போதாதென்று கருதி திராவிடர்களுக்கு தஸ்யூ என்றும், ஆரிய எதிரி என்றும், பெயரிட்டு அவற்றையே நாளாவட்டத்தில் பேய் என்றும், பூதம் என்றும், ராட்சசர் என்றும் பெயர்களாக மாறச் செய்துவிட்டார்கள்.”

இது சர் வில்லியம் வில்ஸன் ஹெனர் டாக்டர் கே.சி.எஸ்.அய். சி.அய்.ஈ. எல்-லய-டி எழுதின “இந்திய மக்களின் சரித்திரம்”

41-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே ஆக்கிக் கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல் தங்களுக்கு அனுகூலமாகச் சகல விஷயங்களையும் உட்படுத்திக் கொண்டு, அதற்கு ஏற்றபடிக் கதைகளை உற்பத்தி செய்து எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் திராவிடரை அழுத்தி, அடிமைப்படுத்தி தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு ஆகவே எழுதிகொள்ளப்பட்டவைகளாகும்.”

இது பிரபல சரித்திராசிரியரான என்றி பெரிட்ஜ் என்பவரால் 1865-ஆம் வருஷத்திலேயே எழுதப்பட்ட விரிவான இந்திய சரித்திரம் முதல் பாகம் 15-ஆம் பக்கத்தில் இருக்கிறது.

“பாரத, ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகள், அசுரர்கள், ரட்சதர்கள், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடு என்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிடத்தைப்) பற்றியேயாகும்.”

இது ராலின்சன் சி.அய்.ஈ. எழுதிய ‘இந்தியா’ என்னும் புத்தகத்தில் 153-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“நம்மைச் சுற்றி 4 பக்கங்களிலும் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்கள் செய்வதில்லை. ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்கள் பழக்க வழக்கங்களே வேறாய் இருக்கின்றன. ஓ இந்திரனே! அவர்களைக் கொல்லு.”

என்பது ஆரியர்களின் பிரார்த்தனையாகும். இது ரிக் வேதம்

10-ஆம் அதிகாரம் சுலோகம் 22-8-இல் இருக்கிறது.

“இந்தியாவில் இருந்த ஆரியர்களிடம் மனிதர்களைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம்.” இம்பீரியல் இந்தியன் கெஜட்டில் 1909-ஆம் வருஷ வால்யூம் 1 - பக்கம் 405-இல் இருக்கிறது.

“தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.”

இது ரோமேஸ் சந்திர டட் சி.அய்.ஈ., அய்.சி.எஸ். எழுதிய “புராதன இந்தியா” என்னும் புத்தகத்தில் 52-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்கள் தங்கள்மீது படை எடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.”

இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ.யின் “பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்” என்னும் புத்தகத்தின் 22-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றிபெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.”

இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய “திராவிடரும் ஆரியரும்” என்னும் புத்தகத்தின் 24-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.”
இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய “பண்டைய இந்தியாவின் நாகரிகம்” என்ற புத்தகத்தின் 139-141-ஆவது பக்கங்களில் இருக்கிறது.
“தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டடிருக்கிறார்கள்.”
இது “சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்” என்ற புத்தகத்தில் “ராமாயணம்” என்னும் தலைப்பில் 587-589 பக்கங்களில் இருக்கிறது.

“ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதன குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்.

தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்) கொடுத்த பெயராகும்.”

இது 1922-ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் “பழைய இந்தியாவின் சரித்திரம்” என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

பகைமைக்குக் காரணம்

“ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இருவகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்.”

இது டாக்டர் ராதா குமுத்முகர்ஜீ எம்.ஏ., பி.எச்.டி. எழுதிய “இந்து நாகரிகம்” என்னும் புத்தகத்தில் 69-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதையின் உள் பொருள் என்னவென்றால், ஆரிய நாகரிகத்துக்கும், திராவிட நாகரிகத்துக்கும் (அவற்றின் தலைவர்களான ராமன் ராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும்.”

இது ராதா குமுத்முகர்ஜீ எழுதிய “இந்து நாகரிகம்” என்னும் புத்தகத்தின் 141-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை.”

இது சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய புதிய இங்கிலிஷ் அகராதியின் பக்கம் 67-டி-யில் இருக்கிறது.

“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.”

இது பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம் 3, பக்கம் 10-இல் இருக்கிறது.

“தமிழர்கள் ஆரியர்களை வடவர் வடநாட்டவர் என்று அழைத்தார்கள். ஏனெனில் ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்.”

இது கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள் எழுதிய “தென் இந்தியாவும் இந்தியக் கலையும்” என்ற புத்தகத்தின் 3-ஆது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணத்தில் தென் இந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.

இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள்.”

இது பி.டி. சீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம் முதல் பாகம்” என்னும் புத்தகத்தில் 10-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்து பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்.”

இது ஷோஷி சந்தர்டட் எழுதிய “இந்தியா அன்றும், இன்றும்” என்னும் புத்தகத்தில் 105-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ஆரியக் கடவுள்களைப் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும், தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது.”

இது ஸி.தாஸ், எம்.ஏ.,பி,எல், எழுதிய “ரிக் வேதகாலத்து இந்தியா” என்னும் புத்தகத்தில் 151-ஆம் பக்கத்தில் இருக்கிறது.

“ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.”

- இது சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ. அண்டு எம்.எல். ராமசாமி அய்ங்கார் எம்.ஏ. ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல் பாகம்” என்னும் புத்தகத்தில், “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17-ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.”

இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய “உலகத்தின் சிறு சரித்திரம்” என்னும் புத்தகத்தில் 105-ஆம் பக்கத்தில் இருக்கிறது.

“ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவைகளில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள், கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதன குடிகள்.”

இது “ “New Age Encyclopedia,  ”(நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா
Vol. II 1925)  பக்கம் 237-இல் இருக்கிறது.

“ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்.”

இது இப்போது கல்வி மந்திரியாய் இருந்த சி.ஜே.வர்க்கி எம்.ஏ., எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு” என்னும் பத்தகத்தின் 15-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும் யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.”

இது இ.பி. ஹாவெல் 1918-இல் எழுதிய “இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 32-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“பாரதத்தில் இடும்பி என்று ஓர் ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதி துவேஷத்தால், ராட்சசி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கின்ற பயங்கர புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பானின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.”

இது நாகேந்தரநாத் கோஷ் பி.ஏ., பி.எல். எழுதிய “இந்திய ஆரியரின் இலக்கியமும், கலையும்” என்ற புத்தகத்தின் 194-ஆவது பக்கம்.

“ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.”

இது பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட “மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ” என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

“இந்திய அய்ரோப்பியர்களால் (அதாவது ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும் அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது.”

இது பால்மாசின் அவர்செல் எழுதிய  “புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்” என்ற புத்தகத்தில் 19-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

இவையும், இவை போன்றவுமாகிய பல விஷயங்கள் பெயர் பெற்ற ஆராய்ச்சியாளகளுடைய ஆராய்ச்சியிலும், பல ஆரியப் பார்ப்பனர்களுடைய ஆராய்ச்சியிலும் ஆரிய வேத புராண இதிகாசங்களிலும் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டிருப்பவைகளாகும்.

ஆனால், ஆரியர் வருவதற்கு முன் திராவிட நாடு எப்படி இருந்தது என்பதற்கு ராமாயணத்திலேயே ஆதாரங்கள் இருக்கின்றன.

அதாவது - ராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் சீதையைத் தேடுவதற்குத் தென் பாகத்திற்கு அனுப்பப்பட்ட அனுமானுக்குச் சுக்கிரீவனால் சொல்லி அனுப்பப்பட்ட வழிக் குறிப்புகளில்,

“காவேரி நதியைத் தாண்டிப் பொருநை நதியைக் கடந்து அப்பாற் சென்றால், பாண்டியனுடைய பொற்கதவமிட்ட மதிலரணைக் காண்பாய்” என்று சொன்னதாக வால்மீகியார் ராமாயணத்தில் கூறுகிறார்.

மற்றும், அவர் கூறுவது விந்தியமலைக்கு அப்பாலுள்ள திராவிட நாட்டில் தண்டகாருண்யம் கடந்தால் பிறகு.

“ஆந்திரம், சோழம், கேரளத்தோடு கூடிய பாண்டிய நாடுகளைக் காண்பீர்கள்”
“அதில் தேவரம்பையர் வந்து நீராடும்படியான தெளிந்த நீரையுடைய திவ்வியமான காவேரி நதியைக் காண்பீர்கள்.”

“பிறகு முதலைகள் நிரம்பிய தாமிரபரணியைக் காண்பீர்கள்”

“பிறகு பொன்னிறத்தாயும், முத்து மயமானதாயும், பாண்டியர்க்கு யோக்கியமானதாயுமுள்ள கபாடபுரத்தைக் காண்பீர்கள்.”

“அப்புறம் சமுத்திரத்தைக் காண்பீர்கள், அங்குச் சென்று உங்கள்  காரிய நிச்சயத்தைச் செய்யுங்கள்” என்று கூறியிருப்பதாக வடமொழி ராமாயணத்தில் காண்கிறோம். ஆகையால், திராவிட நாடு ஆரியர் இந்நாட்டிற்கு வருவதற்கு முன் மேன்மையாயும், நாகரிகத்துடனும், செல்வத்துடனும் தனிப்பட்ட அரசாட்சி உடையதாயும் இருந்து வந்திருக்கிறது என்பது விளங்குவதோடு, இப்படிப்பட்ட திராவிடமும், திராவிட மக்களும் ஆரியர் ஆதிக்கமும் கொடுமையும் ஏற்பட்ட பிறகே திராவிடர்கள் குரங்குகளாகவும், ராட்சதர்களாகவும் கற்பிக்கப்பட்டதோடு சூத்திரன் அடிமை, மிலேச்சன், சண்டாளன் என்பதுபோன்ற இழிமொழிகளுக்காளாகிச் சூத்திரர்களுக்கு (திராவிடர்களுக்கு) ஒரு நீதியும், ஆரியர்களுக்கு ஒரு நீதியும் கற்பிக்கப்பட்ட மனுதர்ம நீதி வழங்கப்பட்டிருக்கிறது.

அதாவது, பிராமணனுக்குத் தலையை முண்டிதம் செய்வது கொலைத் தண்டமாகும், மற்ற வருணத்தாருக்குக் கொலைத் தண்டமுண்டு.                                                       மனு அத். 11.379

அந்தணன் பூனை, அணில், காடை, தவளை, நாய், உடும்பு, கோட்டான், காகம் இவைகளைக் கொன்றதால், ஒரு சூத்திரனைக் கொன்றதாய்ச் செய்ய வேண்டி பிராயச்சித்தம் செய்யவேண்டும்.
மனு அத். 9.132

வைதிகக் கருமமாயிருந்தாலும், லௌகீகக் கருமமாயிருந்தாலும் அக்கினி எப்படி மேலான தெய்வமாயிருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியாயிருந்தாலும், மூடனாயிருந்தாலும் அவனே மேலான தெய்வமாவான்.                                            மனு அத். 6.317

பிராமணன் துர்ச்செய்கையுள்ளவனாயிருந்த போதிலும், சகலமான சுபாசுபங்களிலும் பூசிக்கத்தக்கவன்; அவன் மேலான தெய்வமாதலால்.
மனு அத். 7.318-19

கருமானுஷ்டமில்லா பிராமணனேனும் அவன் அரசன் செய்ய வேண்டிய தீர்ப்புகளைச் செய்யலாம். சூத்திரன் ஒருபோதும் செய்யக்கூடாது.                                                       மனு அத். 8, 20

சூத்திரன் விலை கொடுத்து அடிமையாக வாங்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அவனைப் பிராமணன் நிர்ப்பந்தப்படுத்தி வேலை வாங்கலாம். ஏனென்றால் கடவுள் சூத்திரனைப் பிராமணனுக்கு வேலை செய்யும் ஒரே நிமித்தமாகவே படைத்திருக்கிறார்.    மனு அத். 8, 413

பிராமணன் சூத்திரனுடைய பொருளை முழுமனச் சமாதானத்துடன் (சற்றாயினும் பாவமென்றெண்ணாமல்) கைப்பற்றிக் கொள்ளலாம். ஏனெனில், அவனுக்குச் சொந்தமான தொன்றுமில்லையாதலாலும், அவன் சொத்தை அவன் எஜமான் எடுத்துக் கொள்ளலாமாதலாலும்,
மனு அத். 8, 417

ஒரு பிறப்பாளன் (சூத்திரன்) இருபிறப்பாளரை (பிராமணரை)த் திட்டினால், அவன் நாவை அறுத்தெறிய வேண்டும்.
மனு அத். 8, 270

அவன் அவர்கள் பேரையாவது, சாதியையாவது தூஷித்தால், பத்துவிரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பை அவன் வாய்க்குள் செலுத்த வேண்டும்.                                                  மனு அத். 8,27

அவன் அகந்தையால் குருமாருக்கு அவர்களுடைய கடமைகளைப் பற்றி போதிப்பானானால், அவன் வாய்க்குள்ளும், காதுக்குள்ளும் கொதிக்கிற எண்ணெயை ஊற்றும்படிச் செய்வது அரசன் கடமை.                                                       மனு அத். 8,.280

அவன் உயர் குலத்தானை அடிப்பதற்குக் கையையாவது தடியையாவது உயர்த்தினால், அவன் கையை வெட்டியெறிந்து விட வேண்டும். அவன் கோபத்தினால் அவனை உதைத்தால், அவன் காலை வெட்டி யெறிந்துவிட வேண்டும்.                   மனு அத். 7.272

தாழ்குலத்தான், உயர்குலத்தோடு சமமாக உட்கார எத்தனித்தால், அவனை இடுப்பிற் சூட்டுக் கோல்கொண்டு சுட்டுத் தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும். அவன் பின்பக்கத்தை வெட்டியெறிந்து விடலாம்.                                                                மனு அத். 7.281

அவன் அகந்தையால் அவன் மேல் உமிழ்ந்தால், அவன் உதடுகளிரண்டையும் அரசன் வெட்டியெறியும்படிச் செய்யவேண்டும்.
மனு அத். 8.282

இதுவரை எழுதி வந்தவை ஆரியர் - திராவிடர் யார் என்பதும், அவரவர்கள் வாழ்க்கைமுறை, தன்மை என்ன என்பதும், ஆரியரால் திராவிடம் இன்றைய இழிநிலை அடைந்ததற்குக் காரணம் விளங்கும்படி விளக்கப்பட்டவைகளாகும். இனி ஆரிய திராவிட சமய சம்பந்தமான விஷயங்கள் முதலியவை பற்றி அடுத்த தலையங்கத்தில் விளக்குவோம்.
விடுதலை - தலையங்கம் - 23.11.1939


(சமய விளக்கம்)

“தமிழ்நாடு தமிழருக்கே” என்னும் தலைப்பில் இதற்கு முன் மூன்று தலையங்கங்கள் எழுதி இருப்பதுடன், அடுத்தபடி ஆரிய திராவிட சமய சம்பந்தமாக எழுதப்படும் என்று நேற்றைய தலையங்க முடிவில் குறித்திருந்தோம்.
அந்தப்படி இன்றைய தலையங்கத்தின்கீழ் ஆரிய திராவிட சமயங்கள் என்ன? சமய ஆதாரங்கள் என்ன? என்பவைகளைப் பற்றி எழுதப்புகுகின்றோம். இப்படி எழுதுவதில் நாம் பெரிதும் தற்காலம் பிரத்தியட்ச அனுபவத்தில் உள்ளவற்றையே பெரிதும் ஆதாரமாய்க் கொண்டு எழுதுகிறோமே ஒழிய நூல் ஆராய்ச்சியை அடிப்படையாய்க் கொண்டே எழுதப்புகவில்லை. அவ்வாராய்ச்சி விஷயங்களைப் பண்டிதர்களுக்கு விட்டுவிடுவோம். இன்றைய பிரத்தியட்ச காட்சிக்கும் கருத்துக்கும் ஆதாரங்களோ ஆராய்ச்சி களோ விரோதமாய் இருக்குமானால், அதற்கேற்றபடியாகிலும் அனுபவத்தை மாற்றிக் கொள்ளவாவது நாம் எழுதுவது பயன்படட்டும் என்று கருதியே இதில் தலையிடுகிறோம்.

இதற்கு முக்கியக் காரணம் என்னவெனில், சமயத்துறையில் ஏற்பட்ட கேடுகள்தான் பெரிதும் ஆரியர்களுக்கு இந்நாட்டில் ஆதிக்கம் வளர்ந்து நிலைத்திருப்பதற்குக் காரணம் என்றும், அதுபோல்தான் திராவிடர் வீழ்ச்சிக்கும் காரணம் என்றும் நாம் கருதுகிறோம். ஆதலால், ஆரிய திராவிட சமய சம்பந்தமான காரணங்கள் மக்களுக்கு விளங்கவேண்டுமென்று ஆசைப் படுகிறோம்.

திராவிட சமயம்

திராவிடர்க்கு ஆதியில் என்ன சமயம் என்பது திட்டவட்டமாய் விவகாரத்திற்கு இடமில்லாமல் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமாய் இருந்தாலும், திராவிடருக்கு முன் பின் பிறவியோ, பிறவியின் பயனாக மேல், கீழ் ஜாதியோ, ஜாதிக்கேற்ற உலகமோ, விக்கிரக உருவமோ, பல கடவுள்களோ, அக்கடவுள்களின் முகத்திலோ, காலிலோ மக்கள் தோன்றியதோ முதலான கோட்பாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, அவற்றைப் பொறுத்தவரை அவை சம்பந்தமான சமயமும் கடவுள்களும் சமய நூல்களும் திராவிடருக்கு உடன்பாடானவை அல்ல என்பதும் உறுதியான உண்மையாகும்.

இந்த உறுதியை வைத்துக் கொண்டு பார்த்தால், பெரியார்  முகம்மது நபி பெருமான் அவர்கள் கடவுளைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் கூறியுள்ள கருத்துகளே தமிழர் கடவுளுக்கும் சமுதாயத்துக்கும் பொருத்தமானதென நினைக்கலாம். நபி அவர்கள் கடவுளுக்கு உருவம் இல்லை, பெயர் இல்லை என்று சொன்னதோடு இணையும் இல்லையென்றும், இணையே வைக்கக்கூடாது சொல்லக்கூடாது என்றும் நிபந்தமான திட்டம் செய்திருப்பதோடு, அப்படி யாராவது கடவுள் கொள்கைக்கு மாறானவர்களாவார்கள் என்றும் இஸ்லாமானவர்களாக மாட்டார்களென்றும் கண்டித்துக் கூறியிருக்கிறார்.

ஆகையால், திராவிடர்கள் கடவுளுக்கு உருவம் இல்லை இணை இல்லை என்ற அளவாவது ஒப்புக்கொள்வார்களே ஆனால், இன்று பெரும்பாகமான திராவிடர்கள் அனுஷ்டிக்கும் கடவுள் கொள்கைகள் தப்பானதென்றே உணருவார்கள். தப்பானதென்று சொல்லுவது மாத்திரமல்லாமல் திராவிடர்கள் இந்தத் தப்பான கொள்கையாலேயே ஆரியர்களுக்குச் சர்வத்திலும் அடிமைப்பட நேர்ந்தது என்றும் சுலபத்தில் உணருவார்கள்.
ஏனெனில், இன்று திராவிடர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதும் பெரும்பான்மைத் திராவிட மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பதும் ஆரிய மதமாகிய இந்து மதம் என்று சொல்லப்படுவதே ஆகும். அதுபோலவே திராவிடர்கள் கடவுள்களும் இந்துமதக் கடவுள்களேயாகும். சமுதாயத்துறையிலும் திராவிடர்கள் பின்பற்றுவது இந்து சமயமுறையேயாகும்.

இந்து மதம்

உண்மையில் வெளிப்படையாக மனம் திறந்து பேச வேண்டு மானால், இந்து மதம் என்பதாக ஒரு மதமே இருந்ததில்லை என்பதோடு, இருக்கிறதாகச் சொல்லுவதற்கும் வகை இல்லை. ஆனால், பின் எப்படி இந்துமதம் என்று ஒரு சொல் இருந்து வருகிறது என்றால், ஆரியர்களுடைய மேன்மைக்கு ஆகவும், அவர்கள் மற்ற மக்களை அந்தகாரத்தில் வைத்துத் தங்களுக்கு அனுகூலமாக ஆண்டு கொள்வதற்கு ஆகவும் மற்றும் திராவிடர்களைச் சமயம்போல் - சவுகரியம்போல் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட சில சூழ்ச்சி முறைகளே இன்று இந்து மதமாய் இருக்கிறது.

ஏனெனில், இந்து மதம் என்கின்ற வார்த்தையே ஆரியர்களுக்குள் ளாகவாவது எப்போதாவது இருந்து வந்ததாகச் சொல்வதற்கு இல்லை. ஆரிய சம்பந்தமான எந்தப் பழைய ஆதாரங்களிலும் அவர்கள் சமயாதாரமாகச் சமீபகாலம் வரை ஏற்படுத்திக்கொண்ட எந்த ஆதாரங்களிலும்கூட இந்துமதம் என்கின்ற வார்த்தை இருந்ததாகத் தெரியவில்லை.

அன்றியும் இந்து மதம் என்றால் என்ன? அதன் கொள்கை என்ன என்று நிர்ணயித்துச் சொல்லக்கூடியதாகவும் ஒன்றும் இல்லை. எப்படிப்பட்டவன் இந்து? எப்படிப்பட்டவன் இந்து அல்லாதவன் என்று சொல்லுவதற்கும் ஒரு நியதி இல்லை. இந்தியாவில் உள்ள ஒரு முகமதியனையோ, ஒரு கிறித்துவனையோ, ஒரு பார்சியையோ, சீக்கியனையோ, ஒரு பிரமசமாஜக்காரனையோ, ஒரு மதமும் ஒரு கடவுளும் இல்லாத பகுத்தறிவு வாதியையோ இந்து அல்லாதவன் என்று சொல்ல ஓர் ஆதாரமும் இல்லை. இந்து மதம் என்று சொல்ல இன்று ஒரே ஓர் ஆதாரம்தான் அனுபவத்தில் பயன்பட்டு வருகிறது. அதாவது ஆரியர்கள் மேன்மைக்கு அவர்களது நலனுக்கும் மாறாகப் பேசுவதும், இருப்பதும் எல்லாம்தான் இன்று இந்து மதமல்லாததாய் இருக்கிறதே தவிர இந்து மதம் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட கொள்கையும் திட்டமும் இல்லை. ஆரியர்களின் மேன்மையையும் அவர்களது மேன்மைக்கு ஆதரவான ஆதாரங்களையும் குறித்து வாதம் புரியாமல் ஒருவன் கடவுளே இல்லை, வேதங்கள் பொய், சாஸ்திரங்கள் பொய், புராணங்கள் பொய் என்று சொன்னாலும்கூட “அவர் ஒரு பெரிய வேதாந்தி அல்லது ஒரு துறவி” என்று சொல்லப்பட்டு விடுவான்.

ஆனால், ஜாதி ஏது, பார்ப்பான் ஏது, பறையன் ஏது எல்லாம் பித்தலாட்டம் என்றும், கடவுள் பேரால் - மதத்தின் பேரால் ஆரியர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்றும் சொல்லிவிட்டால், அவன் எப்படிப்பட்ட பக்திமானானாலும் நாஸ்திகனாய் விடுவான்.

ஆராய்ச்சி முடிவு

பொதுவாகவே இந்துமதம் என்பதுபற்றிப் பல ஆராய்ச்சிக்காரர்கள் அப்படி ஒரு மதமே இல்லை என்று முடிவுகட்டி மெய்ப்பித்து இருக்கிறார்கள். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்று அய்ரோப்பியர்களாலும், இந்நாட்டுப் பெரும் புலவர்களாலும் எழுதப்பட்ட ஆராய்ச்சிப் புத்தகங்கள் எத்தனையோ இன்றும் இருக்கின்றன.

இந்து என்கின்ற வார்த்தையே திருடன், அயோக்கியன், தொல்லை கொடுப்பவன், நம்பிக்கைத் துரோகக்காரன், அடிமை-கூலி-காட்டுமி ராண்டி என்கிறதான கருத்துக்களைக் கொடுப்பது என்று பல பாஷைகளில் பரிச்சயமுள்ள அநேகர் எழுதி இருப்பதோடு, இதை மெய்ப்பிக்க இன்னும் பல இங்கிலிஷ்  அகராதிகள் இருக்கின்றன.

பொதுவாகவே இந்து மதம் என்றால் ஆரியர் கொள்கை என்றும், புரோகித சமயம் என்றும், பார்ப்பனர்களை உயர்வாய்க் கொண்ட தென்றும், இந்து என்றால் பார்ப்பனர்களைப் பின்பற்றுகிறவன் என்றும், விந்தியமலைக்கு வடக்கே உள்ள மக்களைக் குறிப்பதென்றும், ஆதிகால மனிதத் தன்மையைக் குறிப்பிடுவதென்றும், அகராதிகளிலும் சகல கலாநிதி என்னும் பழங்கால முதல் நாளது வரையில் ஆராய்ச்சி செய்த அறிவு நூல்களிலும் பரக்கக் காணலாம்.

திராவிடர் இந்துக்களா?

அவை எப்படியோ இருக்கட்டும், நாம் இன்று அம்மாதிரியான ஆராய்ச்சியில் புகவில்லை. ஆனால் திராவிட மக்கள் பிறவியில் சாதி பேதத்தையும் பல கடவுள்களையும், உருவ வழிபாட்டையும் கொண்ட ‘இந்து’ மதத்தில் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்பதே நமது பிரச்சினையாகும்.

திராவிட நாட்டில் உள்ள வைணவர்கள் “நாங்கள் ஆரியக் கடவளை வணங்குகிறவர்கள்” என்றும், சைவர்கள் “நாங்கள் ஆரியக் கடவுளை வணங்குகிறவர்கள் அல்ல, திராவிடக் கடவுளாகிய சிவனை வணங்குகிறவர்கள்” என்றும், மற்றும் சிலர் “நாங்கள் சிவனையும் திருமாலையும் வணங்குகிறவர்கள் அல்ல, முருகன் என்கின்ற இயற்கை அழகையும் இளமையும் வலிவையும் குணமாகக் கொண்ட இயற்கையை வணங்குகிறவர்கள்” என்றும், சிலர் “எந்தக் குணத்தையும் குறியாய்க் கொண்டு வணங்குகிறவர் அல்ல, கந்தழி என்கின்ற உருவம் குணம் இல்லாத தூய்மையினை - தன்மையை வணங்குகிறவர்கள்” என்றும் பல மாதிரி நம்மால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களை, ஏன் அவர்களுக்குமே சிலருக்குப் புரிந்திராத விஷயங்களை அந்தந்தச் சமயத்தவர்களிலேயே ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக வாயில் சொல்லலாம்.

ஆனால், திராவிடத்தில் உள்ள மக்களில் கடவுள் வழிபாடுடையவர்கள் பெரும்பான்மையோரும் தங்கள் வழிபாட்டை எப்படி நடத்துகிறார்கள் என்பதிலிருந்துதான் திராவிடர்கள் திராவிட சமயத்தவராய், திராவிட தத்துவக் கடவுள் வழிபாடுடையவர்களாய், அதற்கு ஏற்ற ஆதார நூல்களுடையவர்களாய் இருக்கிறார்களா என்று பார்க்க ஆசைப்படுகிறோம். இன்று பிரத்தியட்சத்தில் வைணவர்கள், சைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கின்ற மும்மூர்த்திகளையும், அவைகளுக்கு ஆரியக் கற்பனைப்படி உருவமும் குணமும்,  பெண்டு பிள்ளை வாழ்க்கைத் தன்மைகளுடன்தான் வணங்கி வருகிறார்கள். ஆனால் விவகாரம் வரும்போது காந்தியார் பேசுவது போல் அதாவது எப்படி “என் வருணாச்சிரமம் வேறு” “என் ராமன் வேறு” “என் இந்து மதம் வேறு” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டு காரியத்தில் மனுதர்ம வருணாச்சிரமத்தையும், ராமாயணத்தையும், ராமாயண ராமனையும் ஆரிய மேன்மைக்கு உரித்தான இந்து மதத்தையும் நிலைநிறுத்தத் தக்க வண்ணமே நடந்து வருகிறாரோ அதுபோல், ஆரியக் கற்பனையான பிரம்மா, விஷ்ணு, சிவன்களைத்தான் திராவிடர்கள் சேர்ந்தோ தனித்தோ வணங்கி வருகிறார்கள். திராவிடர்களை ஆரியர்களுக்கு அடிமையாக ஆக்கி, அவர்களிடமிருந்து தப்பித்து வரமுடியாதபடித் திராவிடர்களைப் பிணைத்திருப்பது இந்து மதத்தைவிட இந்து மத ஆரியக் கடவுள்களேயாகும்.

நம் பண்டிதர்கள்

நம் பண்டிதர்கள் பெரும்பாலும் கடவுள், சமயம் ஆகியவற்றில் பண்டிதர்களாக இருக்கிறார்களே ஒழிய, பொது அறிவில் இயற்கை அறிவில் சக்தியில் பாண்டித்யம் பெற்ற பண்டிதர்கள் வெகு அருமையாய் இருக்கிறார்கள். ஆரியக் கடவுள்களுக்கும் சமயத் திற்கும் ஆக்கம் அளித்துத் திராவிடர்களை ஆரியர்க்கு அடிமை யாக்கியவர்கள் நம் சைவ வைணவ சமயப் பண்டிதர்கள்தான் என்றால், அவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது என்றுதான் கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏனெனில், ஆரியக் கடவுள்கள் சம்பந்தமான திராவிட பாஷை நூல்கள் எல்லாம் உண்டாக்கியவர்கள், பரப்பினவர்கள், பிரச்சாரம் செய்தவர்கள் இன்றும் செய்பவர்கள் நம் பண்டிதர்களேயாவார்கள்.

திராவிட மக்களுக்கு 100-க்கு 95 பேர்கள் கல்வி அறிவில்லாத வர்கள் - எழுத்து வாசனை அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களிடம் சமயத்தையும் கடவுளைப்பற்றியும் பேசும்போதும் இவர்கள் அறியும்படி சமயக் கதைகள், சமயப் பெரியார்கள் கதைகள், கடவுள் கதைகள் எழுதி பிரசங்கம் செய்தால்தான் - கடவுளுக்கு பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி கற்பித்துச் சாதம் நகை படைத்துக் கலியாணம், உற்சவம், பூசை, அபிஷேகம் ஆகியவைகள் செய்தும் காட்டினால்தான் புரியும் என்று சொன்னால், இது அறிவுள்ள அல்லது திராவிட ரத்தக் கலப்பில்லாத, தனித் தமிழ் மகன் கூற்று என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கவேண்டி இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு ஒரு சமயம் இருக்கிறது கடவுளும் இருக்கிறது. அந்த முஸ்லிம்களும் 100-க்கு 90 பேர்கள் எழுத்து வாசனை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குச் சமய உணர்ச்சியும், கடவுளுணர்ச்சியும் வருவதற்கு இப்படித்தான் செய்கிறார்களா? அப்படி செய்யாததால் அவர்களுக்கு கடவுள் உணர்ச்சியும், மத உணர்ச்சியும், மனிதத்தன்மை உணர்ச்சியும் இல்லை என்று யாராவது சொல்லக்கூடுமா? இப்போதைய உணர்ச்சி முஸ்லிம்கள் பெற்றதற்குக் கடவுளுக்குப் பெண்டு பிள்ளை, வைப்பாட்டி, சோறு, சாறு, அபிஷேகம், கலியாணம், உற்சவம் செய்தும் அது சம்பந்தமாக கதைகள் எழுதிப் படிக்கச் செய்தும்தான் அவர்கள் உணர்ச்சி பெற்றார்களா? என்பதை யோசித்தால், அப்படி சொல்லுகிறவர்கள் எண்ணம் சுத்தமானதா? அசுத்தமானதா? என்பது விளங்காமல் போகாது.

ஆரியர்களிடமிருந்தும், அவர்களுக்கு அனுகூலமானதும் நமக்குக் கேடானதுமான அவர்களுடைய சமயம், கடவுள்கள் ஆகியவை களிடமிருந்து திராவிட மக்கள் பிரிக்கப்பட்டால் ஒழிய ஆரியர்களுக்கு அடிமைப்பட்ட திராவிடர்களது மானமும் அறிவும் ஆத்மார்த்த போலி உணர்ச்சியும் விடுபடாதென்ற காரணத்திற்காகவே இவைகளைக் கூறுகிறோம்.

ஆகையால்தான் சைவ வைணவ பண்டிதர்கள் தங்கள் சுயநலத்தையே பிரதானமாகப் பாராமல் மக்கள் நலத்தைச் சிறிதாவது கருதி, பாமர மக்களின் அறிவின்மையையும் மூட பக்தியையும் போக்க முயலவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தங்களின் குரங்குப்பிடியான சமயம் போனால் பண்டிதத் தன்மையே போய்விடும் என்றும், வாழ்க்கை போய்விடும் என்றும் சிலர் பயப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

இது இப்பண்டிதர்களின் பாமரத்தன்மையேயாகும். ஷேக்ஸ்பியரும், ஷெல்லியும், பெர்னாட்ஷாவும், வெல்சும், வில்சனும் புராணங்களுக்குப் பொழிப்புரையும் கருத்துரையும் புது உரையும் எழுதித்தானா வாழ்ந்தார்கள் - வாழ்கிறார்கள்? உலகில் விளம்பர மானார்கள்? என்பதையே சிந்தித்துப் பார்க்க இப்பண்டிதர்களை வேண்டுகிறோம். ஏன் நாம் இப்படிச் சொல்லுகிறோம் என்றால், திராவிடர்களை ஆரியருக்கு அடிமையாக்கினதில் நம் பண்டிதர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

இப்போது அவர்களை மீட்கவேண்டிய பொறுப்பும் சக்தியும் நம் பண்டிதர்களிடம்தான் இருக்கிறது என்பதை நாம் உணருவதாலேயாகும். மற்றொரு புறம் அது முடியவில்லையானால், ஆரியர்களுடனும் அவர்களது ஆயுதங்களுடனும் போராடுவது போலவே இப்பண்டிதர்களுடனும் போராட வேண்டிய தொல்லையும் ஏற்பட்டுவிடுமே என்கிற பயத்தினாலேயாகும்.

ஆகவே, பண்டிதர்கள் திராவிடர்களுடைய சமயம் இன்னது, அவர்களுடைய கடவுள் இன்னது, அவற்றின்கோட்பாடு இன்னது என்று துலக்கமாக வரையறுத்துவிட வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம். அதற்கு ஏற்ற கலைகளையே உற்பத்தி செய்ய வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறோம். இது விஷயமாகப் பல திராவிட பண்டிதர்கள் நம் கருத்துக்கு அனுகூலமாகச் சொல்லி இருக்கும் பல அபிப்பிராயங்கள் இருக்கின்றன. என்றாலும், அவைகளைச் சமயம் வந்தபோது வெளிப்படுத்தி  கொள்கிறோம். இன்றைய நமது ஆசையெல்லாம் நாம் பரிசுத்தமாக ஆரியர்கள் சமயக் கடவுள்கள், அவற்றின் கொள்கைகள் ஆகியவற்றிலிருந்து பிரிந்துகொள்ளவேண்டும் என்பதே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்பதைப் பண்டிதர்கள் நம்பவேண்டுமென்று மறுபடியும் வேண்டிக் கொள்கிறோம்.

அரசியலில் நமது நாடு ஆரியர்களிடமிருந்து பிரிந்துகொள்ள பிரிட்டிஷார் தயவு எப்படி வேண்டி இருக்கிறதோ அப்படியே சமயம், கடவுள், சமுதாயம் ஆகியவைகளிலும் நமது நாடு ஆரியர்களிடம் இருந்து பிரிந்துகொள்ள நம் பண்டிதர்களுடைய தயவு வேண்டி இருக்கிறது.

நிற்க, திராவிடர் பூரண விடுதலை அடைகிறவரை மானமே மதமாகவும் அறிவே கடவுளாகவும், அதற்கு ஆன ஆராய்ச்சியே பிரார்த்தனையாகவும் இருக்க வேண்டும்.

பிறகு எந்தச் சமயமானாலும், எந்தக் கடவுளானாலும், எப்படிப்பட்ட பிரார்த்தனையானாலும் வைத்துக் கொள்ளலாம்; அவை திராவிடனை ஒன்றும் செய்துவிடாது.

வியாதியஸ்தனாக, ஜெயில் கைதியாக, கவிழப் போகும் ரயிலில் பிரயாணக்காரனாக, முழுகப் போகும் கப்பலில் பயணக்காரனாக, சண்டையில் போர் வீரனாக இருக்கிற காலங்களில் எப்படிச் சிற்சில நித்தியவாடிக்கைகளையும்  பற்றுக்கோடான எண்ணங்களையும், சில ஆச்சார அனுஷ்டானங்களையும் லட்சியம் செய்யாமலும் ஒத்திவைத்தும் நடந்து கொள்ளுகிறோமோ அதுபோல் திராவிடமும் திராவிடரும் விடுதலை பெறுகிறவரை அவைகளில் சிலவற்றை ஒத்திவைத்து அல்லது சிறிது தளர்த்தி விட்டு விடுதலையில் கவலை கொள்ள வேண்டுமென்று முஸ்லிம், கிறிஸ்தவர் உள்பட எல்லாத் திராவிட மக்களையும் வேண்டிக் கொள்ளுகிறோம்.

மற்ற சமயக்காரர்

கிறிஸ்தவ சமய உணர்ச்சியையும் முஸ்லிம்கள் சமய உணர்ச்சியையும் பார்த்தாவது திராவிடர்கள் நடந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். கிறித்துவ சமய உணர்ச்சி கிறித்தவர்களை இன்று உலகப் பார்வையில் எவ்வளவு உயர் நிலையை அடையச் செய்திருக்கிறது. அதுபோலவே இஸ்லாமியர்களை அவர்களது சமய உணர்ச்சி உலகத்திற்கு முன்பு எவ்வளவு மேன்மை நிலையை அடையச் செய்திருக்கிறது. ஐப்பானியர்களின் சமய உணர்ச்சி உலகத்தின் முன்பு அவர்களை எவ்வளவு மேல் நிலையை அடையச் செய்திருக்கிறது என்பவை களைத் திராவிட மக்களின் பண்டிதர்களும் பாமரர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களது சமயங்களை இச்சமூகத்தார் எழுத்து கமா, புள்ளி தவறாமல் பின்பற்றி இருந்தால், இவர்களும் திராவிடர்களைவிட மிகக் கேவலமான நிலையில்தான் இருந்திருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நாட்டார், சமூகத்தார் மானத்தோடும் மேன்மையாயும்,  மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் அடிமைகளாய், எத்துறையிலும் தாழ்மையாய் இல்லாமலும் வாழ வேண்டும் என்பதையே சமயமாய்க் கொண்டு மற்றதையெல்லாம் கொஞ்சம் தியாகம் செய்து முயற்சித்து வந்திருக்கிறார்கள். அதனாலேயே இன்று அவர்கள் தனித் தன்மானமுள்ள சமூகமாகச் சுதந்தரர்களாக வாழுகிறார்கள்.

எல்லோரும் கிறித்துவர்களாகவே வாழும் மேல்நாட்டில் பைபிளுக்குக் கருத்துரையும் புது வியாக்கியானமும் எழுதிக் கொண்டு அதன்படியேதான் நடந்துதீர வேண்டும் என்று கிறிஸ்தவப் பண்டிதர்களோ பாதிரிமார்களோ செய்து வந்திருப்பார்களேயானால், இன்று கிறிஸ்தவர்களில் ஒருவருக்காவது வாயில் பற்களே இருந்திருக்காது. இடுப்பில் துணியே இருந்திருக்காது. ஏனெனில், அவர்களது சமயம் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டச் சொல்லுகிறது. மேல் வேட்டியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையும் அவிழ்த்துக் கொடுக்கச் சொல்லுகிறது. அப்படிப்பட்ட சமயக்காரர்கள் இன்று அவரவர்கள் நாட்டையும் அன்னியர் நாட்டையும் ஆளுகிறார்கள். உலக நாகரிகத்துக்கும் அற்புதங்களைக் கண்டுபிடிப்பதற்கும் வழிகாட்டிகளாய், வாத்தியார்களாய் இருக்கிறார்கள். மேல் நாட்டில் நித்திய வாழ்க்கையில், வாழ்க்கை நடவடிக்கையில் சிறிது கூடச் சங்கடமோ தாட்சணியமோ, மனக் கசப்போ ஏற்படுவதற்கு இல்லாத மாதிரியில் திட்டங்கள் வகுத்துக் கொண்டு சுதந்திர வாழ்க்கையில் வாழ்கின்றார்கள். வாழ்க்கையின் சகலபடிகளுக்கும் திட்டம் வகுத்துக் கடிகாரம் நடப்பதுபோல் நடந்து கொள்ளுகிறார்கள்.

அதுபோலவே இஸ்லாமியரும் குரானுக்கு வியாக்கியானம் செய்துகொண்டு தாடி எத்தனை அங்குலம், தலைமயிர் எப்படி, குல்லா எப்படி, சட்டை எப்படி என்பதைக் துருவிக் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, எப்படியிருந்தால் மனிதனாக வாழலாம் என்பதில் கவலைகொண்டு துருக்கி, ஆப்கானிஸ்தானம், பர்ஷியா, ஈஜிப்ட் முதலிய நாடுகள் மற்ற சமூகத்திற்கு அடிமையாகாமல் நாடு வாரியாய் சுதந்திரத்தோடு வாழுகிறார்கள். இந்தியாவிலும் ஒரு “தாடி இல்லாத இஸ்லாமே” தலைவராய் இருந்து தாங்கள் மைனாரிட்டியென்று சொல்லிக் கொள்ளகூடிய பயம் இல்லாமல் சுதந்தரத்தோடு தன்மானத்தோடு வாழ நிபந்தனை விதிக்க மற்றவர்கள் திகைக்கச் செய்ய வசதியோடு இருக்கிறார்கள்.

அதுபோலவே ஜப்பான்காரரும், திராவிடத்தைவிடச் சிறிய நாடாயும் திராவிடர்களைவிடக் குறைந்த ஜனத்தொகை கொண்ட சமூகமாயும் இருந்தும், இன்று தனி அரசாங்க உலக வல்லரசுகளில் ஒன்றாக இருந்துகொண்டு தனக்கு நாற்புறமும் அதைவிட 3 பங்கு 4 பங்கு விஸ்தீரணமும் ஜனத்தொகையும் கொண்டதாக உள்ள நாடுகளை விரட்டி நடுக்கிக் கொண்டு சகல துறைகளிலும் முன்னேறிக் கொண்டு வருகிறது. ஒருபுறம் 18 கோடி ஜனமும், 18 லட்சம் மைல் விஸ்தீரணமும் கொண்ட ரஷியாவும், மற்றொருபுறம் 12 கோடி ஜனத்தொகை கொண்ட இரண்டு அமெரிக்க கண்டமும், மற்றொருபுறம் 45 கோடி மக்களுக்கும் பல தேசத்துக்கும் கண்டத்துக்கும் சக்கரவர்த்தியாய் இருக்கும் பிரிட்டனும், தன்னை அடுத்தாற்போல் 45 கோடி ஜனத்தொகையும் பரந்தநாடும் கொண்ட சைனாவும் எதிரிகளாக இருக்கச் சிறிதும் பயமில்லாமல் தலை நிமிர்ந்து நடக்கிறது; தற்காப்பில் வல்லரசாய் இருக்கிறது. இப்படிப்பட்ட இந்த நாடு தங்கள் சமயமாகிய புத்தர் சொன்ன அஹிம்சையைப் பிடித்துக் கொண்டு ஜாதகக் கதைகளுக்குப் புது உரை எழுதிக்கொண்டு சின்னத்தோடு இருந்திருக்குமானால், அதன் கதி என்னவாயிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அப்படி இருக்கத் திராவிடம் இவைகளைப் பார்த்துப் படிக்க வேண்டிவைகளைப் படித்துக் கொள்ள வேண்டாமா என்று யோசித்துப் பார்க்கும்படி மறுபடியும் பண்டிதர்களையும் பாமர மக்களையும் வேண்டிக் கொள்ளுகிறோம்.

இம்மாதிரியான ஒரு திராவிடர் ஆரியர் உணர்ச்சி என்று ஒன்று ஏற்பட்டிருக்கவில்லையானால், இப்பண்டிதர்கள் கதிதான் என்னாகி இருக்கும் என்பதைத் தயவு செய்து சிறிது சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொண்டு இதை முடிக்கிறோம்.

இனி அடுத்த தலையங்கத்தில் ஆரியர் சமயம் என்பது பற்றி விளக்குவோம்.

- விடுதலை - தலையங்கம் - 24.11.1939


V

(ஆரியர் சமயம்)

தமிழ்நாடு தமிழருக்கே என்னும் தலைப்பில் இதற்குமுன் 4 தலையங்கம் எழுதியிருக்கிறோமாக இது 5-ஆவது தலையங்கமாகும். இதில் ‘ஆரியர் சமயம்’ என்பது பற்றி எழுதுவதாக முன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தபடி அதைப்பற்றி சிறிது எழுதுவோம்.

ஏன் எனில், ஆரியர்கள் இன்று ‘இந்திய’ நாட்டை எடுத்துக் கொண்டாலும் அல்லது திராவிட நாட்டை எடுத்துக்கொண்டாலும் 100-க்கு மூன்று பேர்களாக ஜனத்தொகையில் இருக்கும் ஒரு வெகு சிறுபான்மைக் கூட்டத்தாராகிய அவர்கள் (ஆரியர்) எப்படி மற்ற உண்மையான 100-க்கு 97 பேரான பெரும்பான்மைச் சமூகத்தாரையும் பெரும் பழம் வீரம் பொருந்திய அவர்களது நாட்டையும் சிறுபான்மையாக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால், ஆரியர்களது சமயமும் சமயத்தின் மூலம் ஒற்றுமையும்தான் அவர்களுக்கு அதற்கு வேண்டிய சவுகரியத்தைக் கொடுக்க ஆதாரமாய் இருந்து வந்திருக்கிறது என்பதுடன் இன்றும் இருந்து வருகிறது. ஆதலால், அதை விளக்க ஆசைப்படுகிறோம்.

ஆரியருடைய சமயம் என்ன?

ஆரியருக்குச் சமயம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை கொண்ட சாதனம் ஒன்றுமில்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும் என்பது ஒருபுறமிருக்க “ஆரிய சமயம் இந்துமதம்” என்று சொல்லப் படுமானாலும், இந்து மதம் என்பதற்கும் ஒரு குறிப்பிட்ட கிளிப்த்தமான கொள்கையோ ஆதாரமோ கிடையாது என்பது ஆராய்ச்சியாளர் கடைமுடிவாகும். ஆரியத் தந்திரசாலிகளும் ஆரியரல்லாதார் மீது துவேஷம் கொண்டவர்களும் அனாரியர்களை இழிவுபடுத்தியும், அடக்கியும் ஏமாற்றியும் கீழ்மைப்படுத்துவதற்கு ஆதாரமாக அவ்வப்போது சொல்லி வந்ததையும், எழுதி வந்ததையும் தொகுத்துக் கால தேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடித் திருத்தியும், சில விஷயங் களை எடுத்தும், சில விசயங்களைப் புகுத்தியும் அமைத்துக் கொண்டிருக்கும் ஆதாரங்கள் இன்று ஆரியர்களின் சமய ஆதாரங்களாய் இருக்கின்றன. அவை பெரிதும் வேதம்,  சாஸ்திரம், சுருதி, ஸ்மிருதி, புராணம் இதிகாசம் முதலிய பெயர்களோடு இருந்தாலும், இவைகளில் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாயும் ஆபாசங்களும் அசம்பாவிதங்களும் அசாத்தியங்களும் நிறைந்ததாயும், புத்திக்கும் ஆராய்ச்சிக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாததாயும் பெரிதும் இருந்து வருவதைக் காணலாம்.

இந்தக் காரணத்தாலேயேதான் ஆரியர்கள் தவிர மற்றவர்கள் அவைகளைப் படிக்கக்கூடாது என்றும், படித்தால் கொடிய தண்டனைகள் விதிக்க வேண்டும் என்றும், அவ்வாதாரங்களை எவனாவது படித்துவிட்டோ, கேட்டு விட்டோ விவகாரம் தர்க்கம் செய்வானானாலும் நம்பாவிட்டாலும் அவனை நாஸ்திகன் என்று சொல்லி அரசன் தண்டித்துச் சமுதாயத்தை விட்டும், நாட்டை விட்டும் விரட்டி அடிக்க வேண்டும் என்றும் எழுதி வைத்துக் கொண்டார்கள். இப்படிப்பட்ட நிபந்தனைகளும் தண்டனைகளும் அதை நிறைவேற்றத்தக்க அரசர்களும் வெகு காலம் வரை இருந்து வந்ததாலேயே அப்படிப்பட்ட ஆபாச அக்கிரம அவிவேகமான அவர்களது சமய ஆதாரங்கள் திராவிட மக்களுக்குள் பரப்பப்படவும் அதனால் ஆரியர்களுக்கு மேன்மையும், செல்வாக்கும் பெருகி நிலைத்து வரவும் இடமேற்பட்டதுடன், ஆரியரல்லாத மக்கள் எவ்வளவு பண்டிதர்களானாலும் அந்த ஆரியர் சமய ஆதாரங்களைப் பிரச்சாரம் செய்வதனால் மாத்திரமே வாழ முடியும்படியாகவும் இருந்து வந்திருக்கிறது.

ஆரிய சமய ஆதாரம்

உண்மையில் ஆரியர்களின் சமய ஆதாரங்களில் பெரும்பாலும் எதைப் பார்த்தாலும் ஒரு மனிதனால் சொல்லப்பட்டதாகவோ, உற்பத்தி செய்யப்பட்டதாகவோ காண்பது முடியாததாயிருந்தும், ஒவ்வொரு ஆதாரத்துக்கும் அதன் கர்த்தா தெய்வத் தன்மை பொருந்திய வனாகவும், அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்த மில்லாத அற்புதச் சக்தி பெற்றவனாகவும் கற்பிக்கப்பட்டு இருப்பான்.

ஏனெனில், அப்படிக் கற்பிக்கப்பட்டதால்தான் அந்த ஆபாசப் புளுகுக் களஞ்சியங்கள் நிலை நிற்க முடியும். அப்படிக்கில்லாமல் சாதாரண மனிதனால் செய்யப்பட்டதென்றால், “அது அவனுக்கு எப்படித் தெரியும். அது எப்படி முடியும்” “அத்தனை நாட்களாய் அவன் எப்படி இருந்திருக்கமுடியும்” என்பன போன்ற கேள்விகள் பிறக்குமே என்கின்ற எண்ணத்தினால், “எழுதினவனும் சொன்னவனும் தெய்வத்தன்மை பொருந்தியவனானதால், அவனால் எழுத முடிந்தது. ஆதலால் அதைப்பற்றி யாரும் தர்க்கிக்கக்ப்படாது” என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளச் சொல்லலாம். அதிலும் திருப்திப்படுவதற்கு முடியாத கஷ்டம் ஏற்படுகிற விஷயங்களாய் இருந்தால், “கடவுளே சொன்னார், அசரீரியாய்ப் பேசினார்” என்று தப்பித்துக்கொள்ள வசதியாயிருக்கும். ஆதலால் தான் ஆரிய சமய ஆதாரங்கள் முழுவதும் மனித சக்திக்கு மேம்பட்டவர்களால் சொல்லப்பட்டதாகவே அவற்றில் சொல்லப்பட்டு இருக்கும்.

புத்த மதமோ, கிறித்துவ மதமோ, இஸ்லாம் மதமோ சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் அந்தப்படி இருக்காது என்பதோடு, கூடுமானவரை மானுஷீகத்திற்குட்பட்டதாகவே இருக்கும். ஒன்று இரண்டு விஷயங்களுக்குத் தெய்விகம் கற்பிக்கப்பட்டிருந்தாலும் அவை விவரிக்கக்கூடாது என்கின்ற நிர்ப்பந்தமிருக்காது.

குறிப்பாக இஸ்லாத்தில் முகமது நபி அவர்கள் சம்பந்தப்பட்ட மட்டில் அவர் சொன்னவற்றிலோ, அவரது செய்கையிலோ மனிதத் தன்மைக்கு மீறிய காரியம் ஒன்றும் இருந்ததாகக் காணமுடியாது. குரான் வாக்கைக் கடவுள் உத்திரவால்தான் வெளியிடுவதாகச் சொல்லி இருக்கிறார். அது ஒரு சாதாரண விசயம். ஏனெனில், ஒரு மனிதன் தான் செய்கிற, பேசுகிற, நினைக்கிற காரியம் எல்லாம்கடவுள் செயலால்தான் என்று கருதுவது ஆஸ்திகர்களுக்குச் சர்வ சாதாரணமான காரியமேயாகும். ஆதலால், நபி பெருமான் தான் சொல்லும் விஷயங்களைக் கடவுள் அருளால் சொல்லுகிறேன் என்று சொன்னதில் அற்புதம் ஒன்றும் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. மற்றபடியும் அவர் எப்போதும் தன்னை மனுஷத்தன்மைக்கு மேம்பட்டவர் என்று சொல்லிக் கொண்டதாகவும் தெரியவில்லை. ஆரிய சமய ஆதாரம் பூராவுமே மனுஷத்தன்மைக்கு மேற்பட்டதாகவே காணப்படும்.

புராண இதிகாசங்கள்

இவை தவிர ஆரியர்களுக்கு அவர்களது வாழ்வுக்கு வேத சாஸ்திர, ஸ்மிருதி சமய ஆதாரமென்று சொல்லிக் கொண்டாலும், அவர்களது வாழ்வுக்கு வழிகாட்டியாகவே அவைகளும் மற்றும் அவர்களது புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவைகளும் இருந்து வருகின்றன. இப்புராணங்களைத் தான் தங்களது சமய ஆதாரங்களாகக் கருதி ஆரியர்கள் நடந்து வருகிறார்கள்.
ஆரியப் புராண இதிகாசங்கள் ஒரு பெரும் சமூகத்தாரைச் சிறு சமூகத்தார் எப்படி ஏமாற்றிப் பிரித்துச் சிறுபான்மையோராக்கித் தாங்கள் ஆதிக்கம் செலுத்துவது என்பதற்கு ஏற்ற வரிகளேயாகும். அதைப் பின்பற்றி நடந்தே தான் இன்று ஆரியர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

எப்படி எனில், அப்புராண இதிகாசங்களில் ஒழுக்கம் இருக்காது; மானாபிமானம் இருக்காது; நாணயம் இருக்காது; எவ்வளவு இழிவான காரியத்தையும் செய்து காரியத்தைச் சாதித்துக்கொள்ள மார்க்கங்கள் இருக்கும். “பத்தியமே” கிடையாது. ஆனால், அவை மகா நீதியாகவும் நேர்மையாகவும் உத்தமோத்தம ஒழுக்கமாகவும் பாசாங்கு செய்து கொள்ளும்.
உதாரணமாக, ஆரியர்களின் காப்புக் கடவுளான அல்லது தலைவரான இந்திரனை எடுத்துக் கொள்ளுவோம். அவனிடத்தில் எங்காவது, எப்பொழுதாவது, ஏதாவது ஒரு ஒழுக்கமோ, நாணயமோ இருந்ததாகச் சொல்ல முடியுமா? மற்றும் அந்தப் பதவிக்கு வர முயற்சித்தவர்கள் எவ்வளவு அக்கிரமமான, இழிவான காரியங்கள் செய்து தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். வெளிப்படையாய்ச் சொல்லவேண்டுமானால், பெண்டுகளை விட்டுக் காமமூட்டி ஏமாற்றச் செய்யப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எல்லாம் எந்த ஆரியராவது வெட்கப்படுகிறார்களா? அதற்குப் பதிலாகப் பண்டிகை அல்லவா கொண்டாடுகிறார்கள்.

ஆகவே, ஆரியர்கள் தங்கள் காரியங்களைச் சாதித்து; கொள்ள இப்பேர்பட்ட மற்றும் எப்படிப்பட்டவுமான காரியங்களைக் கையாளலாம் என்பதற்கு அவர்களது கடவுள்களும், அக்கடவுள்களின் கீழ்ப்பட்ட கீழ்த்தர வேலை உத்தியோகம் 49995-இல் ஆரியர்களுக்கு 1513 போக பாக்கி 48482 அடிமை சேவக உத்தியோகங்களுக்கு திராவிடர்கள் ஆளாக இருக்கவும், மேல்தர உத்தியோகம் அதாவது மாதம் 1000, 5000 சம்பளம் பெறும் அதிகார நிர்வாக உத்தியோகம் 1000-இல் 600 கிடைத்திருக்கவும் முடியுமா? இவ்வுத்தி யோகங்களைக் கொண்டு ஆரியர் வகுப்புக்கு ஆதரவு காட்டி ஆரியர்கள் அத்தனைபேரும் கீழ் நிலையிலும் ஆரியருக்கு அடிமையாகவும் இருந்திருகக முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொண்டு முடிக்கிறோம்.

தமிழ்நாடு தமிழருக்கே!  தமிழ்நாடு தமிழருக்கே!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!

விடுதலை - தலையங்கம் - 25.11.1939


நூல் : 
தமிழர்
தமிழ்நாடு
தமிழர் பண்பாடு

ஆசிரியர் : தந்தை பெரியார்

Comments

Popular posts from this blog

திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்த பிரசங்கத்தின் சாராம்சம்

தமிழர் பண்பாடு